என் மலர்

    புதுச்சேரி

    காயமடைந்த வியாபாரியை ஸ்டெச்சரில் வைத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்
    X

    காயமடைந்த வியாபாரியை ஸ்டெச்சரில் வைத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலையில் காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • போலீசார் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சை கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே தனியார் பார் அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் சந்திரன்.

    இவர் கடைக்கு நேற்று இரவு வந்த 3 ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டினர். சந்திரன் தரமறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள், கடையிலிருந்து சோடா பாட்டில் உட்பட பொருட்களை எடுத்து சந்திரனை தாக்கினர். சந்திரன் சத்தமிட்டதை தொடர்ந்து அவர்கள் தப்பியோடினர்.

    தலையில் காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதுலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. மீண்டும் இன்று காலை சாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும்படி சந்திரனிடம் அறிவுறுத்தினர். அவர் இன்று காலை சாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு சென்றார்.

    அங்கு தங்களிடம் ஸ்கேன் வசதி இல்லாததால் மீண்டும் அரசு மருத்துவ மனைக்கு செல்லும்படி கூறினர். இதையடுத்து அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

    இதனிடையே மாமூல் கேட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த நேரு எம்.எல்.ஏ. தலைமையில் பொது நல அமைப்பினர் கூடினர். திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், தமிழர் களம் அழகர், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், பிராங்களின் பிரான்சுவா, அசோக் மற்றும் பொது நல அமைப்பு நிர்வாகிகள் அரசு மருத்துவமனை அருகே கூடியிருந்தனர்.

    அப்போது வியாபாரி சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, வியாபாரியுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுகாதார இயக்குனர், அதிகாரிகள் வர வேண்டும் என பொதுநல அமைப்பினர் வலியுறுத்தினர். அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுநல அமைப்பினர், வியாபாரியை ஸ்டெச்சரில் படுக்க வைத்து அங்கிருந்து தள்ளிக்கொண்டு, ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் சட்டசபையை கடந்து, கவர்னர் மாளிகை முன்பு வந்தனர். கவர்னர் மாளிகை முன்பு ஸ்டெச்சரை நிறுத்தி தரையில் அமர்ந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது போலீசார் குவிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி, பாரதி பூங்கா நுழைவு வாயில் அருகே நிறுத்தினர். தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோரும் அங்கு வந்தனர்.

    அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதனால் கவர்னர் மாளிகை முன்பு மேலும் பதட்டம் ஏற்பட்டது. சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் நேரில் வந்து பேசினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் போராட்டம் நீடித்தது.

    இதையடுத்து போலீசார் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சை கொண்டு வந்தனர். அதில் வியாபாரியை சிகிச்சைக்காக ஏற்றினர். அதில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை. இதனால் வியாபாரி என்றால் அலட்சியமா? அரசு அதிகாரி காயமடைந்தால் இப்படி செய்வீர்களா? டாக்டர் வந்தால்தான் ஆம்புலன்சை எடுத்து செல்ல அனுமதிப்போம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் அரசு மருத்துவமனை டாக்டர் வரவழைக்கப்பட்டார். அதன்பிறகு வியாபாரியுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. ஆனாலும், தொடர்ந்து கவர்னர் மாளிகை எதிரே சமூக நல அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்தனர். கவர்னரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதால் போராட்டம் தொடர்கிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    Next Story
    ×