அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கரை (பேஸ்மேக்கர் என்பது இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும் ஒரு மருத்துவ மின்சாதனம்) கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும். இந்த பேஸ்மேக்கர் தற்காலிகமாக தேவைப்படுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரிசியை விட சிறியதாக இருக்கும் இந்த சாதனம், 1.8 மி.மீ. அகலம், 3.5 மி.மீ. நீளம் மற்றும் 1 மி.மீ. தடிமன் மட்டுமே கொண்டது. மேலும் தேவைப்படாதபோது உடலில் கரையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதை உடலில் இருந்து வெளியே எடுக்க வேண்டியதில்லை. இதனால் பேஸ்மேக்கரை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை.
நிரந்தர பேஸ்மேக்கர் இதயத்தில் உள்ள மின் அமைப்பை (இதய மின் அமைப்பு என்பது, இதயம் துடிக்கவும், ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்யவும் உதவும் அமைப்பு) ஆதரிக்க அறுவை சிகிச்சை மூலம் உடலில் வைக்கக்கூடிய ஒரு சாதனமாகும். இது அசாதாரண இதய துடிப்புகளை சரிப்படுத்தி, உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.
இதேபோல சில நேரங்களில், இதய செயல்பாட்டை ஆதரிப்பதற்கு குறுகிய காலத்திற்கு பேஸ்மேக்கர் தேவைப்படுகிறது. குறிப்பாக திறந்த இதய அறுவை சிகிச்சை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக இதயத் துடிப்பு மாறும்போது இந்த வகையான தற்காலிக பேஸ்மேக்கர் பயன்படும்.
இது இதயத் துடிப்பு நிலைப்படுத்தப்படும் வரை, ஒரு சில நாட்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும். தற்போது உள்ள தற்காலிக பேஸ்மேக்கரை அறுவை சிகிச்சை மூலம் இதய தசைகளில் வைக்க வேண்டியுள்ளது.
அந்த சாதனம் இனி தேவைப்படாதபோது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதால் சில நேரங்களில் சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பேஸ்மேக்கர் தேவைப்படாதபோது உடலில் கரைந்து போகும் என்பதால் அதனை வெளியே எடுக்க வேண்டியதில்லை.
இந்த பேஸ்மேக்கர் ஒரு கால்வனிக் கலத்தால் (கால்வனிக் கலம் என்பது ஒரு மின்வேதியியல் கலமாகும், இதில் ரசாயன ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது) இயக்கப்படுகிறது. இது வேதியியல் ஆற்றலை இதயத்தை ஒழுங்குபடுத்தும் மின் துடிப்புகளாக மாற்ற உடலின் திரவங்களைப் பயன்படுத்துகிறது.
ஒரு சதவீத குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அக்குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையின்போது தற்காலிக பேஸ்மேக் கருக்கான தேவை உள்ளது. அவர்களுக்கு இந்த சிறிய அளவிலான பேஸ்மேக்கர் சிறந்தது.
அதன் சிறிய அளவு காரணமாக, வயது வந்தோருக்கான இதய சிகிச்சைகளிலும் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தர பேஸ்மேக்கரை போலவே அதிக தூண்டுதலை இதனால் வழங்க முடியும்.
பாதிக்கப்பட்ட நோயாளியின் மார்பில் சிறிய நெகிழ்வான, வயர்லெஸ் முறையில் இயங்கும் சாதனத்துடன் பேஸ்மேக்கர் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகளை கண்டறியும்போது, பேஸ்மேக்கருக்கு ஒளி சமிக்ஞையை அனுப்பி, அதை செயல்படுத்துகிறது.
ரேடியோ சிக்னல்களை பயன்படுத்தும் முந்தைய பேஸ்மேக்கரை போல் அல்லாமல், இந்த புதிய சாதனம் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்த ஒளியைப் பயன்படுத்துகிறது.
ஆய்வகத்தில் எலிகள், பன்றிகள், நாய்கள் மற்றும் மனித இதய திசுக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பேஸ்மேக்கர் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது.
மனிதர்களிடத்தில் இந்த பேஸ்மேக்கரை பரிசோதிக்க சில ஆண்டுகள் ஆகும் என்றாலும், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.