மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 5வது நாளான இன்று பச்சை பட்டாணி சுண்டல், தேங்காய் சாதம் மற்றும் கீர் செய்து ஸ்கந்தமாதா தேவிக்கு படைக்கலாம்.
முதலில், பச்சை பட்டாணி சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..
பச்சை பட்டாணி சுண்டல்
தேவையான பொருட்கள்:
உலர்ந்த பச்சை பட்டாணி - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 4-5 இலைகள்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* உலர்ந்த பச்சை பட்டாணியை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
* பின்னர், குக்கரில் பட்டாணியை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
* பட்டாணி குழைந்துவிடாமல் மென்மையாக இருக்க வேண்டும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடிக்க விடவும்.
* பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வதக்கிய தாளிப்புடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
* கடைசியாக, தேங்காய் துருவலை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
சுவையான நவராத்திரி பச்சை பட்டாணி சுண்டல் தயார். இதை சூடாகவோ அல்லது வெதுவெதுப்பாகவோ பரிமாறலாம்.
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 முதல் 1/2 கப் (தேவைக்கேற்ப)
நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 (அல்லது பச்சை மிளகாய்)
முந்திரி பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
இஞ்சி - 1/2 இன்ச் துண்டு, பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
* சாதத்தை வேகவைத்து, ஒரு தட்டில் பரப்பி ஆற வைக்கவும். ஆறின சாதத்தை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும், இதனால் சாதம் உதிரியாக இருக்கும்.
* ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* முந்திரி பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் (பயன்படுத்தினால்), கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, முந்திரி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* தீயைக் குறைத்து அல்லது அணைத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து, லேசாக வதக்கி மணம் வரும் வரை கிளறவும்.
* துருவிய தேங்காயுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் ஆற வைத்த சாதத்தை கடாயில் சேர்க்கவும். எல்லா பொருட்களையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
* சுவையான நவராத்திரி தேங்காய் சாதம் தயார்!
நவராத்திரி கீர்
நவராத்திரி கீர் என்பது, பொதுவாக நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பவர்கள் உண்ணும் ஒரு இனிப்புப் பண்டமாகும். இவை பால், சர்க்கரை, பழங்கள் மற்றும் நட்ஸ்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன.
பிரபலமான நவராத்திரி கீர் வகைகள்:
ஜவ்வரிசி கீர் : ஜவ்வரிசியைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த இனிப்பு, நவராத்திரி காலத்தில் பொதுவாக உண்ணப்படும் கீர்களில் ஒன்றாகும்.
மக்கானா கீர் : இந்த கீர் மக்கானாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, மேலும் இது நவராத்திரியின் போது உண்ணப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான இனிப்பு வகையாகும்.
குட்டு கீர்: குட்டு மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த கீர், நவராத்திரி காலத்தில் விரதத்தின் போது உண்ணப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.
இன்று நாம், நவராத்திரிக்கு மிகவும் பிரபலமான மக்கானா கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்
மக்கானா (தாமரை விதைகள்) - 1 கப்
பால் - 2½ கப்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்
முந்திரி, பாதாம், பிஸ்தா (நறுக்கியது) - தலா 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 10 கோடுகள்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
* ஒரு கடாயில் நெய் சேர்த்து, அதில் மக்கானாவை சேர்த்து மிருதுவாக வறுக்கவும்.
* மக்கானாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
* ஒரு கடாயில் பாலை சூடாக்கி, அதில் வறுத்த மக்கானாவையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கரைய விடவும்.
* சர்க்கரை கரைந்ததும், ஏலக்காய் தூள், குங்குமப்பூ, நறுக்கிய உலர் பழங்கள் சேர்த்து, 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
* சுவையான மக்கானா கீரை தயார்! இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.