சிவாஜிராவ் மீது பேராசிரியர் கோபாலி காட்டிய பாசமும், அக்கறையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது. 1974-ம் ஆண்டின் முற்பகுதியில் சிவாஜிராவின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. அவரது லட்சியம் எல்லாம் விரைவில் நடிகனாகி விடவேண்டும் என்ற இலக்கை நோக்கியே இருந்தது.
அதற்கு பேராசிரியர் கோபாலி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து இருந்தார். ஒரு கட்டத்தில் பேராசிரியர் கோபாலி தனது வீட்டில் இருந்து எடுத்து வரும் சாப்பாட்டை சிவாஜிராவை அழைத்து பகிர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். சிவாஜிராவும் வெட்கப்படாமல் வாங்கி வயிறுநிறைய சாப்பிடுவார்.
சில சமயங்களில் பேராசிரியர் கோபாலிக்கு எதுவும் இருக்காது. அவர் சாப்பாட்டில் பெரும்பகுதியை சிவாஜிராவ் சாப்பிட்டு முடித்து இருப்பார். பிறகு மனம் கேட்காமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு சென்று தோசை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார். இப்படி பல நாட்கள் நடந்துள்ளது.
நாளடைவில் பேராசிரியர் கோபாலியின் வீட்டுக்கு சிவாஜிராவ் செல்ல தொடங்கினார். பேராசிரியரின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விளையாடி விட்டு வருவார். சில நாட்கள் பேராசிரியர் வீட்டிலேயே சாப்பிடவும் செய்வார்.
பேராசிரியர் கோபாலி வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. எனவே அந்த ஊறுகாயை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவர் பேராசிரியர் கோபாலி வீட்டுக்கு செல்வது உண்டு. அப்போது எல்லாம் உணவுடன் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை பேராசிரியர் கோபாலி சொல்லிக் கொண்டே இருப்பார்.
அவரது தொடர்ச்சியான அறிவுரைகள் காரணமாக சிவாஜிராவிடம் தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. கூச்சத்தை மூட்டைக்கட்டி வைத்து விட்டு தைரியமாக பேசவும், செயல்படவும் தொடங்கினார். இதனால் திரைப்படக் கல்லூரி மாணவர்களில் சிவாஜிராவ் தனித்துவமாக தெரியத் தொடங்கினார்.
அந்தக் காலக்கட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்காக நிறைய திரைப்படங்களை காட்டுவார்கள். அவற்றை எல்லாம் பார்க்கும் சிவாஜிராவ் மேற்கொண்டு தனியாகவும் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து வந்தார். முதலில் அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் மட்டுமே படம் பார்த்து வந்த அவர் பிறகு சென்னையில் உள்ள மற்ற தியேட்டர்களுக்கும் செல்ல தொடங்கினார்.
குறிப்பாக தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு அடிக்கடி சென்று படம் பார்த்தார். தமிழ் புரிகிறதோ? இல்லையோ? தமிழில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் முதல் நாளே பார்த்து விடும் பழக்கத்தை உருவாக்கி இருந்தார். அப்படித்தான் அவர் நிறைய சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து இருந்தார்.
திரைப்படக் கல்லூரியில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல நடிகர்கள், நடிகைகள் நடிப்பதை நேரில் காட்டுவதும் ஒன்றாகும். அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களுக்கு சிவாஜிராவ் மற்றும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் எப்படி நடிக்கிறார்கள்? என்பதை சிவாஜிராவ் உன்னிப்பாக கவனித்து மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். 2-ம் ஆண்டு படித்தபோது நடிப்பது மட்டுமின்றி பின்னணி பேசுவது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது, சண்டைக் காட்சிகளில் நடிப்பது, பாடல் காட்சிகளில் நடிப்பது, வசனம் பேசுவது என்று நிறைய பயிற்சிகள் கொடுத்தனர்.
ஒவ்வொரு பயிற்சியையும் சிவாஜிராவ் ஆர்வமுடன் செய்தார். டான்ஸ் ஆடுவது மட்டும்தான் அவருக்கு சற்று அலர்ஜியாக இருந்தது. எனவே டான்ஸ் கிளாசுக்கு மட்டும் வராமல் தப்பிச் சென்று விடுவார்.
என்றாலும் நடிப்பு பயிற்சியில் மட்டும் அவர் குறைவைத்ததே இல்லை. கன்னட வகுப்பில் படித்தாலும் அவருக்கு சென்னையில் இருந்ததாலோ என்னவோ தமிழ் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே தமிழ் மொழி வகுப்பில் சொல்லிக் கொடுப்பதையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்துக் கொள்வார்.
ஒரு கட்டத்தில் தமிழ் மாணவர்களுடன் போட்டி போடும் வகையில் சிவாஜிராவின் செயல்பாடுகள் அமைந்தன. தமிழ் வகுப்பில் புதிதாக ஏதாவது செய்து விட்டால் அதை கன்னட வகுப்பிலும் செய்ய வேண்டும் என்று நினைப்பார். கன்னட வகுப்பில் அந்த மாதிரி பயிற்சி கிடைக்காவிட்டால் தமிழ் வகுப்பில் என்ன சொல்லி கொடுத்தார்கள்? என்று தெரிந்துக் கொள்வார்.
தமிழ் வகுப்பில் படித்து வந்த நடராஜ், சதீஷ் இருவரிடமும் மிகுந்த நட்புடன் இருந்தார். அவர்கள் இருவரிடமும் தமிழ் பாடப்பிரிவில் என்னென்ன நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். எப்படி சொல்லிக் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார். தமிழ் மொழி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் தாங்களாகவே நாடகங்கள் எழுதி நடித்து வந்தனர்.
ஆனால் கன்னட மொழி மாணவர்கள் அத்தகைய பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. நாடகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவாஜிராவ் தமிழ்ப் பிரிவு மாணவர்கள் என்ன நாடகம் நடத்துகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துக் கொள்வார். அந்த நாடகத்தில் என்னென்ன கேரக்டர்கள் வருகிறது என்பதையெல்லாம் கேட்பார்.
அதில் ஏதாவது ஒரு கேரக்டர் அவருக்கு பிடித்து விட்டால் அந்த கேரக்டரை எழுதி தரச்சொல்லி வாங்கி படித்துப் பார்த்து அதை நடித்து ஒத்திகைப் பார்ப்பார். இப்படி சிவாஜிராவ் ஒவ்வொரு நாளும் தனது நடிப்பு திறமையை பட்டைத் தீட்டிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மற்றொரு பயிற்சி தொடங்கப்பட்டது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் புகழ் பெற்ற நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், படத்தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து வந்து அவர்களது அனுபவங்களை நீண்ட உரையாடல் போல பேச வைப்பார்கள்.
அவர்களது அனுபவம் புதிதாக நடிப்பு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கை கொடுக்கும் என்று நினைத்தனர். அந்த வகையில் நிறைய நடிகர்-நடிகைகள் திரைப்படக் கல்லூரிக்கு வந்து வகுப்பு நடத்தினார்கள்.
அவர்கள் பேச்சை சிவாஜிராவ் உன்னிப்பாக கவனித்து தனது மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டார். டைரக்டர்களிடம் மிகுந்த பணிவு காட்டி பழகினார். அந்தக் கால கட்டத்தில் திரைப்படக் கல்லூரியில் எழுதப்படாத ஒரு விதி இருந்தது. அதாவது கல்லூரியில் படிக்கும் 2 ஆண்டுகளிலும் டைரக்டர்களிடம் சென்று படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கக் கூடாது என்பதுதான் அந்த விதியாகும்.
ஆனால் சிவாஜிராவ் அதையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. சினிமா தயாரிக்கப்படும் இடங்களுக்கு எல்லாம் சென்று சினிமா தொடர்புடையவர்களை பார்த்து பேச தொடங்கினார். ஆனால் ஒருவர் கூட அவரை கண்டு கொண்டதே கிடையாது. என்றாலும் மனம் தளராமல் சிவாஜிராவ் முயற்சி செய்து கொண்டே இருந்தார்.
ஒரு சமயம் ஸ்ரீதர் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அவரது அறிவுரைகள் சிவாஜிராவை வியக்க வைத்தது. அதுபோல நடிகை பானுமதி ஒரு தடவை வந்து நீண்ட நேரம் வகுப்பு நடத்தினார். நடிப்பிலும், டைரக்ஷனிலும் எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதுபோல நடிகை சவுகார்ஜானகி திரைப்படக் கல்லூரிக்கு வந்து விதவிதமாக எப்படி நடிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார்.
இவையெல்லாம் சிவாஜிராவுக்குள் தன்னம்பிக்கையை மேலும் மேலும் அதிகரிக்க செய்தது. ஒரு நடிகனாகவே மாறி விட்டது போன்று சிவாஜிராவ் உணரத் தொடங்கினார். அருண் ஓட்டல் அறைகளிலும், திரைப்படக் கல்லூரி அறைகளிலும் அவர் எப்போதும் வித்தியாசமாக ஸ்டைலை உருவாக்கி நடித்து காட்டிக் கொண்டே இருந்தார்.
அதிலும் எங்காவது கண்ணாடியை பார்த்து விட்டால் ஒருதடவை அதன் முன்பு நின்று ஸ்டைல் காட்டாமல் போக மாட்டார். சாலையோர ஜவுளி கடை கண்ணாடி முன்பு நின்று கூட அவர் ஒரு தடவை ஸ்டைலாக நடித்து பார்த்தார் என்றால் அவரது மனதுக்குள் எந்த அளவுக்கு நடிப்பு மீது வெறி இருந்து இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் திரைப்படக் கல்லூரியின் 2-ம் ஆண்டு வகுப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. இன்னும் 3 மாதங்களில் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும் என்று தெரிய வந்ததும் சிவாஜிராவ் மனதுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
திரைப்படக் கல்லூரி படிப்பு முடிந்ததும் தனக்கு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று அவர் மனதுக்குள் கேள்விக்குறிகள் கடல் அலைபோல வந்து கொண்டே இருந்தன. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் பெங்களூருக்கு திரும்பி போய் விட வேண்டியது இருக்குமோ என்று நினைத்த போது அவரது மனது கடும் பீதிக்குள்ளானது.
கல்லூரி படிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்க... நெருங்க... சிவாஜிராவ் மனதுக்குள் பரபரப்பு மேலும் அதிகரித்தது. கல்லூரி முதல்வர் ராஜாராம் மற்றும் பேராசிரியர்கள் சிவாஜிராவிடம் எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தனர்.
இந்த நிலையில் திரைப்படக் கல்லூரியின் கடைசி மாதத்தில் சிவாஜிராவின் வாழ்க்கைைய மாற்றப்போகும் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது. அன்று சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி கூறுகையில், "டேய் நாளைக்கு டைரக்டர் பாலச்சந்தர் வரப்போகிறார். நிறைய விஷயங்கள் சொல்வார். கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்" என்றார். டைரக்டர் பாலச்சந்தர் வருகிறார் என்றதும் சிவாஜிராவ் முகம் ஆயிரம் சூரியன்கள் கொண்ட பிரகாசம்போல மாறியது. பாலச்சந்தர் கவனத்தை தன் பக்கம் எப்படி திரும்ப செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
சிவாஜிராவ் என்ன பேசினார்? எப்படி டைரக்டர் பாலச்சந்தர் மனதில் இடம் பிடித்தார் என்பதை திங்கட்கிழமை (29-ந்தேதி) பார்க்கலாம்.