ஏ.பி.சி. ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய 3 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஏ.பி.சி. ஜூஸ் ஆரோக்கியமான பானமாகும். ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. அவை ஒன்று சேர்ந்து சுவையான ஜூஸாக மாறுவதோடு உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன. தினமும் ஏன் ஏ.பி.சி. ஜூஸ் பருக வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.
தினமும் ஏ.பி.சி. ஜூஸ் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி உள்ளது. அவை ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். நோய்த்தொற்றுகளுக்கு எதிராக இயற்கையாகவே பாதுகாப்பை உருவாக்கும். இரும்பு மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை பீட்ரூட்டில் உள்ளன. இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் ஆக்சிஜனின் சுழற்சியை ஊக்குவிக்கவும் பயன்படும்.
பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன் நிறமி காரணமாக, ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையான நச்சு நீக்கியாக கருதப்படுகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் நச்சுக்களை நடுநிலையாக்கவும் உதவும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் உள்ளன. அவை அதிக பித்த உற்பத்தி மற்றும் எளிதான செரிமானம் மூலம் வளர்சிதை மாற்றக்கழிவுகள் மற்றும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன. எனவே ஏ.பி.சி. ஜூஸை தினமும் பருகுவது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க வழிவகை செய்யும்.
ஏ.பி.சி ஜூஸ் குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதாலும், ஊட்டச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க அல்லது சீராக நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற தேர்வாக அமையும். இதிலிருக்கும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தரும் என்பதால் சாப்பாட்டுக்கு இடையே நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை தடுக்கும். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும் உதவும்.
ஏ.பி.சி. ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது குடல் நோய்களை தடுக்கும். மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளையும் விரட்டியடிக்கும். ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் உள்ளது. அது குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பீட்ரூட் இரைப்பை அமிலங்களின் சுரப்பை ஊக்குவிப்பதால் செரிமானத்தை எளிதாக்கும். முக்கியமான ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவிடும். ஏ.பி.சி. ஜூஸை தொடர்ந்து உட்கொள்வது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்தும்.
இந்த ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது. ஆப்பிள் மற்றும் கேரட்டில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கக்கூடியவை. சருமத்தில் விரைவாக சுருங்கங்கள் விழுவதை தடுக்கும். பீட்ரூட்டில் உள்ளடங்கி இருக்கும் பீட்டாலைன்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து தடுக்கும்.