புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துாதரகம் ஆகிய அலுவலகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த அலுவலகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.
சோதனையில் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து வந்த மிரட்டலை அலட்சியம் செய்ய முடியாமல் போலீசார் தவித்தனர். மின் அஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யார்? என போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
இதனால் புதுவை சைபர் கிரைம் உதவியை நாடினர். அவர்கள் மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். இதில் மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை அரசு அலுவலகங்களை குறிவைத்து மிரட்டல் விடுத்து வந்த மர்ம ஆசாமி தற்போது முதலமைச்சர் வீடு மற்றும் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் இல்லை.
தொடர்ந்து அந்த வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக வெடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதுபோல் புதுவை கடற்கரை சாலையில் உள்ள புரோமனன்ட், அஜந்தா சந்திப்பில் உள்ள செண்பகா ஆகிய நட்சத்திர ஓட்டல்களுக்கும் இன்று காலை மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.
ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை, அறையாகவும், சோதனை நடத்தினர். ரெஸ்டாரெண்ட், சமையல் அறை, பார், கார் பார்க்கிங் ஆகியவற்றில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் சோதனை நடத்தியும்வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது புரளி என தெரிய வந்தது. ஒருபுறம் போலீசார் நிம்மதியடைந்தாலும், இது போல தொடர் மிரட்டலால் போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.