புதுச்சேரி:
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுச்சேரி அரசு ரெஸ்டோபார்களுக்கு அனுமதியளித்துள்ளது. இந்த மதுபார்களில் மது அருந்தி விட்டு இசைக்கு ஏற்ப நடனம் ஆடலாம். இது கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்து உள்ளது.
இந்த ரெஸ்டோ பார்களில் குத்தாட்டம் போடுவதற்கென்றே பிற மாநில கல்லூரி மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களும் அதிகளவில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரியில் குவிகின்றனர்.
இந்த ரெஸ்டோ பார்களால் புதுச்சேரியில் கலாச்சாரம் பாதிக்கப்படு கிறது என எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மோஷிக் சண்முக பிரியன் (வயது21), சாஷன்(21) உள்பட சுமார் 15 மாணவர்கள் ஒரு மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் புதுச்சேரி மிஷன் வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோபாரில் நேற்று இரவு மது அருந்தி குத்தாட்டம் போட்டனர்.
ரெஸ்டோபார் நேரத்தை தாண்டி அவர்கள் தொடர்ந்து குத்தாட்டம் ஆடி, அட்டகாசம் செய்தனர். அவர்களை பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் ரெஸ்டோபாரை மூடும் நேரம் வந்து விட்டது வெளியே செல்லுங்கள் என்று கூறினர். அதனை கேட்காமல் மாணவர்கள் மது போதையில் தொடர்ந்து குத்தாட்டம் ஆடிக்கொண்டே இருந்தனர்.
இதனால் பார் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் மாணவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வெளியே சென்ற மாணவர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் ரெஸ்டோ பாருக்கு திரும்பி வந்தனர். எங்களை ஏன் வெளியேற்றினீர்கள். எங்களை உள்ளே அனுமதியுங்கள். எங்களுக்கு மது வேண்டும் என்று கேட்டு தகராறு செய்தனர். அப்போது பார் உரிமையாளர் ராஜ்குமார், பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் மாணவர்களை ரெஸ்டோ பாரை மூடிவிட்டோம் வெளியே செல்லுங்கள் என்று கூறினர்.
அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் பார் உரிமையாளர் ராஜ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரெஸ்டோபார் பவுன்சர்கள் மற்றும் ஊழியர்கள் மாணவர்களை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக வெளியேற்றினர்.
அப்போது பவுன்சர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரமடைந்த பார் சர்வீஸ் கேப்டன் கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து 2 மாணவர்களை பயங்கரமாக கத்தியால் குத்தினார்.
இதில் கல்லூரி மாணவர்கள் மோஷிக் சண்முக பிரியன், சாஷன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ரெஸ்டோ பாரை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
இதுகுறித்து உடனடியாக பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ரெஸ்டோபாரில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த 2 மாணவர்களை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, மாணவர் மோஷிக் சண்முக பிரியன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு மாணவர் சாஷன் அபாய கட்டத்தில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த மாணவர் மோஷிக் சண்முக பிரியன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சாஷன் மதுரை மேலூரை சேர்ந்தவர்.
இன்று காலை டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் தலைமையிலான போலீசார் ரெஸ்டோபாரை பார்வையிட்டனர். பின்னர் சி.சி.டி.வி. கார்டு டிஸ்க்கை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். பார் உரிமையாளர் ராஜ்குமார் அங்கு பணிபுரிந்த பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கல்லூரி மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். புதுச்சேரி ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.