கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே அக்டோபர் மாதம் வரை பதவிகாலம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக மார்க் கார்னி அறிவித்தார்.
மேலும் ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் களமிறங்கினர். இதற்கிடையே 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் முன்னணி நிலவரம் வெளியானது. இதில் 161 தொகுதிகளில் லிபரல் கட்சி முன்னிலையில் இருந்தது. கன்சர் வேட்டிவ் கட்சி 150 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றன.
பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 160-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் லிபரல் கட்சி மற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்க உள்ளது. மார்க் கார்னி மீண்டும் பிரதமராகிறார்.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங்கின் தேசிய ஜன நாயக கட்சி இந்த தேர்தலில் 343 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அக்கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி 24 இடங்களை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.