டிட்வா புயல் (Cyclone Detwah) கடந்த நவம்பர் மாதம் (2025) இலங்கை அருகே உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று, தமிழகம் உட்பட கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த புயல் ஆகும்.
ஒவ்வொரு புயலும் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டப்படுவது வழக்கம். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டது.
டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது. ஏமனுக்கு அருகில் உள்ள 'சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. அரபு மொழியில் டிட்வா என்பதற்கு 'அழகான மலர்' என்றும் கூறப்படுகிறது.
டிட்வா புயல் இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தியது.

இலங்கையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவற்றால் பெய்து வருகிறது.

இலங்கையில் 'டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந்தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.
'டிட்வா' புயல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நாகையில் வீடுகளில் புகுந்த மழை வெள்ளம்
சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.
டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. தோட்டக்கலை பயிர்களும் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

டிட்வா புயல் காரணமாக நவம்பர் இறுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட) கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
'டிட்வா' புயல் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழையை கொடுத்தாலும், வடமாவட்டங்கள், உள்மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் இயல்பு அளவான 17.7 செ.மீ.-ல், 14.9 செ.மீ. மழைதான் பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு ஆகும். இது நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 3-வது மோசமான மழைப்பதிவாக ஆகிவிட்டது.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 12.5 செ.மீ., 2024-ம் ஆண்டு 14 செ.மீ. பெய்தது இதற்கு முன்பு மோசமான மழைப்பொழிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களை சேர்த்து பார்க்கும்போது, இயல்பான மழை அளவான 35.3 செ.மீ.-ஐ விட 8 சதவீதம் அதிகமாக அதாவது, 38.3 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
சென்னையிலும் நவம்பரில் மோசமான மழைப்பதிவு இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டு புள்ளி விவரங்களுடன் பார்க்கையில், இது 5-வது மோசமான மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.
























































