காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.
அந்த பயங்ரகவாதிகளுக்கு வேட்டையாடும் பணியை இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்களும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.
எனவே இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் அக்ரான் என்ற பெயரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரின் பயிற்சி அதிகரித்துள்ளது. ராணுவ வாகனங்களும் அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன.
பாகிஸ்தான் தனது போர் விமானங்களை இந்திய எல்லை அருகே குவித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலையிலான ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், முப்படைத் தளபதிகள், முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.