வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன அதிபர் தன்னை அழைத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீனா மறுத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். சீனா இதற்கு பதிலடியாக எதிர் வரிவிதிப்பை அறிவித்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்துக்கொண்ட நிலையில் சீன இறக்குமதிகளுக்கான வரி 245 ஆக அதிகரிக்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இரு நாடுகளுக்கிடையேயும் வர்த்தக போர் வலுவடைந்து வரும் சூழ்நிலையில், சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை போனில் அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீன வர்த்தக அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த ஆலோசனையோ, பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என்று அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல் என்றும், வரிப் போரை தொடங்கியது அமெரிக்கா தான், அதை உண்மையிலேயே சரி செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும்.
அடுத்தவர்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, சீனாவிற்கு விதித்த வரிகள் அனைத்தையும் முழுமையாக நீக்க வேண்டும் என்றும் சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.