தமிழ்நாடு செய்திகள்

குன்னூர் மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு சீல்
- மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி பெறாமலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாடல் ஹவுஸ் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிட பணி நடைபெறுவது தெரியவந்தது.
தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
இதேபோல நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் வாடகை நிலுவைத்தொகை செலுத்தாத வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டன.ஆனாலும் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் நிலுவை வாடகைத்தொகை செலுத்த முன்வரவில்லை.
தொடர்ந்து குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள 15 கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு சீல் வைத்தனர்.
மேலும் சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது. பண்டிகை காலம் என்பதால் சாலையோர வியாபாரிகளுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்து உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.





