தமிழ்நாடு செய்திகள்

"தவெக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை என்பது முழுமையான வதந்தி" - நயினார் நாகேந்திரன்
- அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
- சிபிஐ சம்மன் அனுப்பியதற்கும், எங்களுக்கும் (பாஜக) எந்த தொடர்பும் இல்லை
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், விஜய்யை என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீண்டநாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்காக தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவ்வப்போது தவெக தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் இந்த செய்திக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் பவன் கல்யாணை வைத்து பாஜக, விஜய்யிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த தகவலுக்கு 'வதந்தி' எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுவது ஒரு வதந்தி... வதந்தி... தவெகவில் நாளை வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ள நிலையில் சிபிஐ சம்மன் அனுப்பியதற்கும், எங்களுக்கும் (பாஜக) எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கும்போது சொல்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
விஜய் பாஜகவை தனது கொள்கை எதிரி எனவும், மதவாத சக்தி எனவும் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





