கார்

நீண்ட வீல்பேஸ், அதிக ரேஞ்ச்... வெளியீட்டுக்கு தயாராகும் புது டெஸ்லா கார்
- புது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆறு இருக்கைகளைக் கொண்டிருக்கும்.
- நிலையான மாடல் Y-ஐ விட 186 மில்லமீட்டர் நீளமானது.
டெஸ்லா மாடல் Y இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீண்ட வீல்பேஸ் மற்றும் ஆறு இருக்கைகள் கொண்ட டெஸ்லா மாடல் Y காரின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ காண உலகம் தயாராகி வருகிறது. புதிய மாடலின் அதிகாரப்பூர்வ வெளியீடு இன்னும் வரவில்லை என்றாலும், காரைப் பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய மாடலின் விவரங்கள் சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் (MIIT) தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. புதிய நீண்ட வீல்பேஸ் எலெக்ட்ரிக் கார் வெர்ஷன் மாடல் YL என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வரிசை இருக்கைகள் உள்ளன. அதிக இடம் மற்றும் கூடுதல் இருக்கைகளுடன், இந்த மாடல் அதிக சக்தியையும் தரும்.
இந்த புது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆறு இருக்கைகளைக் கொண்டிருக்கும். கேப்டன் இருக்கைகள் இடம் பெற்றிருக்கலாம். இதற்கு ஏற்றவாறு, கார் இப்போது 4,976 மிமீ நீளத்தைக் கொண்டுள்ளது. இது நிலையான மாடல் Y-ஐ விட 186 மில்லமீட்டர் நீளமானது. அதனுடன், உயரமும் 44 மில்லிமீட்டர் அதிகரித்துள்ளது.
இது நீண்ட வீல்பேஸ் மாடல் என்பதால், டெஸ்லா வீல்பேஸை 3,040 மில்லிமீட்டர் அல்லது தற்போதைய ஐந்து இருக்கைகள் கொண்ட மாடல் Y-ஐ விட 150 மில்லிமீட்டர் நீளமாக நீட்டித்துள்ளது. கூடுதல் நீளத்துடன், புதிய YL சக்கரங்களுக்கான புதிய வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் புதிய இருக்கைகளுடன் அழகியலில் சில மாற்றங்களைப் பெறுகிறது.
தற்போது வெளியான தகவல்களின் படி, டெஸ்லா மாடல் YL ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலை விட அதிக சக்தியுடன் வரும். இது 455 hp பவர் வெளியீட்டைக் கொண்டிருக்கும், இது ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலில் 443 hp-ஐ விட அதிகமாகும். அதனுடன், சந்தையில் காரின் மற்றொரு ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இரண்டு மாடல்களின் வெளியீட்டு தேதி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.