தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டியதும், 'என்னது 50 ஆயிரம் ரூபாயை தங்கம் தொட்டுவிட்டதா?' என திகைக்கும் அளவுக்கு விலை உயர்ந்து இருந்தது. அதன்பிறகு விலை கொஞ்சம்கூட குறையவில்லை.
அவ்வாறு விலை உயர்ந்து வந்து, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது.
கடந்த ஆண்டில் இருந்த உயர்வை காட்டிலும், நடப்பாண்டில் தங்கம் விலை, ராக்கெட், ஜெட் என இன்னும் நொடிப்பொழுதில் வேகம் எடுக்கக்கூடிய எதனுடனும் ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்தநேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி விற்பனை ஆனது. இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்த நேரத்தில், மீண்டும் விலை ஏறத்தொடங்கியது.
அதிலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை 'கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனை ஆனது.
நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதே நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏன், ஓரிரு நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தநிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆக விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400
10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-12-2025- ஒரு கிராம் ரூ.216
11-12-2025- ஒரு கிராம் ரூ.209
10-12-2025- ஒரு கிராம் ரூ.207
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198