சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, அதனை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
2000-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி' என்பதை முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக, மதுரை மாநகரில் ரூ.314 கோடி மதிப்பீட்டில், 5.34 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில், 5.58 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும், புதியடைடல் பூங்காக்களை நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இவற்றின் கட்டுமானப்பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேலும், 5.57 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா, முதலமைச்சரால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இவை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்து, விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலூர் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும், தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 19.05.2023 அன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விழுப்புரம் மினி டைடல் பூங்கா 17.02.2024 அன்றும், தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.09.2024 அன்றும், தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும் முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டன. திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி மினி டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் செயல்பட துவங்கும். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடி வமைப்பு பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் 6.94 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்க ளில் 11.50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, 91.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் ரா. ராஜேந்திரன் சந்தித்து, தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்று, கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் லாப பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகம் ஆகியவற்றில் 18 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகளையும், அருங்காட்சியக துறை சார்பில், சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்ட மைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும் சென்னை-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.