சினிமா செய்திகள்

மலையாள ராப் பாடகர் வேடன் மீது பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை புகார்.. போலீஸ் வழக்குப்பதிவு
- அவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேடன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த பிரபல மலையாள ராப் பாடகர் ஹிரந்தாஸ் முரளி எனப்படும் "வேடன்" மீது இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, புகார்தாரர் 2021 இல் இன்ஸ்டாகிராம் மூலம் வேடனொடு பழகி வந்துள்ளார். அதே ஆண்டு, அவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசில் புகார் அளிக்க நினைத்தபோது, வேடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அதன் பிறகு சம்மதமின்றி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
ஐந்து முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல், வேடன் தன்னை விட்டு விலகத் தொடங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சமீபத்தில் தைரியம் பெற்று புகார் அளித்ததாகவும் அப்பெண் கூறினார்.
இந்த வழக்கில் விரைவில் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்படும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வேடன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த புகார் தனக்கு எதிரான சதியின் ஒரு பகுதி என்று அவர் கூறியுள்ளார்
தனது கூற்றுகளை ஆதரிக்க ஆதாரம் இருப்பதாகவும், விரைவில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.