பெண்கள் உலகம்

பெண்கள் செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகள்...
- நடைபயிற்சி என்பது நம்மை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும்.
- பெரும்பாலான பெண்கள், எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்க்கிறார்கள்.
உடற்பயிற்சி என்பது எல்லோருக்குமே முக்கியம். அப்போதுதான் ஆரோக்கியம், உடல் கட்டுக்கோப்பை காக்க முடியும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். அதிலும், குடும்பத்தின் முதுகெலும்பாய் உள்ள பெண்கள், அன்றாடம் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஆனால், வீட்டு வேலை, வெளி வேலை என்று எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் அவர்கள், உடற்பயிற்சி செய்ய தங்களுக்கு நேரமில்லை என்கிறார்கள்.
அப்படி நேரமில்லாத பெண்கள், குறைந்தபட்சம் 2 பயிற்சிகளாவது செய்வது நல்லது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 30 நிமிடங்களேனும் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
வாராந்திர பழக்கமாக 2 பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்வது, அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு உதவும். அந்த பயிற்சிகள் பற்றி...
நடைபயிற்சி
நடைபயிற்சி என்பது நம்மை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும். உட்கார்ந்த வாழ்க்கைமுறையை கொண்டவராக இருந்தால் அதை மாற்றுவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நடைபயிற்சி சிறந்த தேர்வாகும். பரபரப்பான நாட்களிலும், நடப்பதற்கு நேரத்தை ஒதுக்குவது மனதை அமைதியாகவும் இலகுவாகவும் உணரச் செய்யும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 மணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது. இந்த 3 மணி நேரத்தை 45 நிமிடங்களாக பிரிக்கலாம். வாரத்தின் 7 நாட்களில் 4 நாட்கள் வேகமான நடைபயிற்சி செய்ய வேண்டும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் தசைகளை யும் வலிமையாக்கும்.
எடை தூக்குதல்
பெரும்பாலான பெண்கள், எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்க்கிறார்கள். இது ஆண்களுக்கானது என பல பெண்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் எடை தூக்கும் பயிற்சி, பெண்களின் உடலை வலிமையாக்குவதில் முக்கியப்
பங்காற்றுகிறது. வாரத்தில் 2 முறையாவது எடைகளை தூக்கி பழகவேண்டும். முதலில் குறைந்த எடைகளைத் தூக்கி பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எடையை அதிகரிக்கலாம். வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் எடை பயிற்சிகளை செய்யலாம்.
பெண்கள் உடற்பயிற்சிக்கு என்று ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என ஒதுக்க தேவையில்லை. அவர்கள் தம்முடைய அன்றாட வாழ்க்கையில் காலையில் 10 நிமிடங்கள், மதியம் 10 நிமிடங்கள், இரவில் 10 நிமிடங்கள் என பிரித்து, மொத்தத்தில் 30 நிமிடங்கள் நடப்பது போதும்.
வாரத்தில் 2 நாட்களாவது எடைகளுடன் கூடிய பயிற்சியை செய்ய 30 நிமிடங்கள் அல்லது குறைந்த பட்சம் 15 நிமிடங்களை ஒதுக்கலாம். 3-3-3 விதியை பின்பற்றலாம். மூன்று வெவ்வேறு பயிற்சிகளை மூன்று செட்டுகள் செய்வதே 3-3-3 விதியாகும்.
இது பெண்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் எளிதாகிவிடும்.
முடிந்தால் வீட்டிலோ அல்லது பெண்களுக்கு என்று உள்ள உடற்பயிற்சிக் கூடங்களிலோ எடைப்பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்ளலாம்.