பெண்கள் உலகம்

பட்டுப்புடவையில் கறையா? இனி கவலை வேண்டாம்
- கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது.
- டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.
பெண்களின் மனதுக்கு நெருக்கமான பட்டுப்புடவையில் கறை ஏற்படும்போது, அவர்கள் கலங்கிவிடுவார்கள். ஆனால், அதிகம் அலட்டிக்கொள்ளாமல், பட்டுப் புடவை கறைகளை நீக்க முடியும். அதுகுறித்து...
பூஜை போன்றவற்றின்போது பட்டுப் புடவையில் எண்ணெய் பட்டு விடலாம். அப்படி எண்ணெய்க் கறை பட்டால், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக ஈரம் இல்லாத சுத்தமான காட்டன் துணியை கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். துணி கிடைக்காவிட்டால், 'டிஷ்யூ' பேப்பர் கொண்டும் குறிப்பிட்ட இடத்தில் ஒற்றி எடுக்கலாம்.
மிகவும் கவனமாக இதை செய்ய வேண்டும். கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது. அழுத்தி தேய்த்தால் மற்ற இடங்களுக்கும் கறை பரவும் வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை எண்ணெய் பட்ட இடத்தை மட்டும் மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.
இந்த மாதிரி துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்த பின்னர், அந்த இடத்தில் டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும். பவுடர் தூவியதும், கறைபட்ட இடத்தை குழாயில் ஓடும் நீரில் அலசினால் போதும். படிந்துள்ள எண்ணெய், அழுக்குகள் எல்லாமே நீங்கிவிடும். மறந்தும் கூட வெந்நீரில் கறையை நீக்க முயற்சி செய்ய வேண்டாம். வெந்நீர் பட்டால் கறை நீங்கவே நீங்காது.
சோப்பு கரைசலை வைத்தும் பட்டுப்புடவையில் உள்ள கறைகளை நீக்க முடியும். இதற்கு கடின சோப்பை பயன்படுத்தாமல் மென்மை தன்மை கொண்ட லிக்விட் சோப்பை உபயோகிக்கலாம்.
லிக்விட் சோப்பை குளிர்ந்த தண்ணீரில் கரைத்து, அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் நனைத்துக்கொள்ள வேண்டும். இதை, விடாப்பிடி யான கறையின் மீது மெதுவாக வைத்து தேய்க்க வேண்டும். வேகமாகவோ அல்லது அழுத்தி துடைத்தாலோ பட்டுப்புடவையில் உள்ள நூலிழைகள் அறுந்துவிடும் வாய்ப்புள்ளது.
எனவே, மெதுவாக தேய்க்க வேண்டும். அடுத்தகட்டமாக, இந்த நுரைகளை நீக்குவதற்கு கறை உள்ள இடத்தை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். அப்போது கறை நீங்கி, பட்டுப் புடவை பழைய நிலைக்கு வந்துவிடும்.