பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தியது.
சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளின் நீரை இந்தியா கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீரை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒரு பகுதியை இந்தியா தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது தனது மிகப்பெரிய நீர்மின் திட்டமான 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை கட்ட இந்தியா தயாராகி வருகிறது.
இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 1980களிலேயே தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப காரணங்கள், நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் 40 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் உடன் மோதல் நிலவுவதால் இதை பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தேசிய நீர்மின் கழகம் (NHPC) இந்த திட்டத்திற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 ஆகும். இந்த திட்டம் NHPC மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.
இந்த திட்டம் 847 ஹெக்டேர் வன நிலத்தை அழிக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனை குழு, திட்ட கட்டுமானத்திற்காக சுமார் 3000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வன நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.