ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டு இருக்கும் ஆடுகள், மர்ம விலங்குகள் கடித்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இதை கண்டித்து விவசாயிகள் ஏற்கனவே போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கியிருந்தனர். இந்நிலையில் மீண்டும் பட்டியில் கட்டப்பட்டிருந்த 5 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஈரோடு தங்கம் நகர், நாரங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் விவசாயம் செய்து வருகிறார். ஈஸ்வரன் இவரது விவசாய தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.
ஈஸ்வரன் தோட்டத்தில் உள்ள பட்டியை பார்த்தபோது 10 ஆடுகளில் 5 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொண்றது தெரிய வந்தது.
இது குறித்து ஈஸ்வரன் வருவாய் துறை மற்றும் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டு வரும் ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயி ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.