கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன். கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதலாக தேர்தலை சந்தித்தேன். என்னை சமாளிக்க முடியாமல் அதிகாரத்தில் இருந்த தி.மு.க. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். இலங்கையில் தமிழின அழிப்புக்கு காங்கிரஸ் முக்கிய காரணம். அதற்கு துணையாக இருந்தது தி.மு.க. பலமுறை எனது குரலை நசுக்க சிறையில் அடைத்தார்கள்.
இதற்கு வேறு வழியில்லை என்ற பட்சத்தில் அரசியல் கட்சி தொடங்கினேன். அரசியல் விடுதலை ஒன்றே இதற்கான தீர்வாகும்.
நம்மை ஜாதி மத உணர்வுகள் தான் பிரித்து வருகிறது. இந்து தமிழன் இஸ்லாமியருக்கும், இஸ்லாமிய தமிழன் இந்துவுக்கும் வாக்களிப்பதில்லை இவர்கள் 2 பேருக்கும் கிறிஸ்தவ தமிழன் வாக்களிப்பது இல்லை. இதனால் தான் இங்கு எந்த தமிழனும் எழுவதில்லை, வெல்வதில்லை, வாழ்வதில்லை. இதேபோல் ஜாதி உணர்வாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியவர் காயிதே மில்லத். அதுவரை இஸ்லாம் என்றால் உருது என்று நினைத்துக் கொண்டிருந்த நேருவிடம் இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி என காயிதே மில்லத் கூறினார்.
சாதி, மதமாக இணைந்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் அச்சுறுத்தப்படுவீர்கள். மொழி இனமாக நீங்கள் இணைந்திருந்தால் வலிமை பெறுவீர்கள்.
சீமான் பி.ஜே.பி.யின் பி டீம் என்று கூறினார்கள். எனவே சீமானுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் யாரும் பா.ஜ.க.விற்கு ஓட்டு போடாதீர்கள் என கூறவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த நாகலாந்து ஆளுநர் இல கணேசன் அண்மையில் காலமானார். அவருக்கு பிரதமர் சார்பில் முதலமைச்சர் சென்று அஞ்சலி செலுத்தினார். இப்பொழுது யார் பா.ஜ.க.வின் பி டீம் என்பது தெரியவரும்.
பா.ஜ.க. மனித குலத்தின் பகைவன், திராவிட கட்சிகள் என் நிலத்தின் தீய சக்திகள். கேடுகெட்ட கேவலமிக்க ஊழல் லஞ்சத்தின் ஊறிப்போனவை திராவிட கட்சிகள். அண்ணா மறைவிற்கு பின் நெடுஞ்செழியன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக வந்தவர்களால் தான் தமிழகம் பாதிக்கப்பட்டது. கச்சத்தீவு பிரச்சனையால் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் தாக்கி அழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆன்றோர்களும், சான்றோர்களும் இருந்த அரசியல் செய்த நிலத்தில், உலகத்திற்கு பொதுமறை தந்த மக்கள், சிறந்த பேரறிஞர்கள் வாழ்ந்த இந்த நிலத்தில் திராவிட சூழ்ச்சிகளால் தான் வீழ்த்தப்பட்டு அடிமைகளாக கிடக்கிறது தமிழ் சமூகம். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுடன் அரசியல் செய்து 1 1/2 ஆண்டுகள் மேலாக சிறையில் இருந்தவர் நான். 220 வழக்குகள் போடப்பட்டு ஏராத நீதிமன்ற படிக்கட்டு இல்லை. தொழில் செய்ய முடியாது. கடவுச்சீட்டு இல்லை. ஒரு நாட்டிற்கு செல்ல முடியாது. எல்லாத்தையும் விட்டு என் மொழி, என் இனம், என் மக்கள், அவர்களின் எதிர்காலம், பாதுகாப்பு, நல்வாழ்வு என நின்று வாக்குக்கு காசு கொடுக்காமல் ஒருத்தருடைய ஆதரவும் இல்லாமல் திரள்நிதி திரட்டி கட்சி நடத்தி போராடி போராடி 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்று 1.1 சதவீதத்தில் இருந்து 8.50 விழுக்காடு வாக்குகளை பெற்று தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சி நாம் தமிழர் கட்சி. மக்களின் கவனத்தை பெற்று திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ் தேசியத்தின் அரசியலை கட்டி வருகிறோம். கூட்டணி சேராத ஒரே கட்சி நாம் தமிழர் தான். மக்கள் ஓட்டு போடுவதற்காக தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை.
இந்த நிலையில் திடீரென்று வந்து திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று தான் என்று கூறி, மறுபடியும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என்றால் கோபம் வருமா? வராதா? தமிழர் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வந்த கோட்பாடு தான் திராவிடம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் அல்லாதவர் பாதுகாப்பாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வரப்பட்டது தான் திராவிடம். திராவிடம் என்ற ஒன்றே கிடையாது. சங்கி என்றால் கூட நண்பன் என்று பொருள் வரும். திராவிடம் என்றால் எப்படி பார்த்தாலும் திருடன் என்று தான் பொருள் வரும். அந்த சொல்லே தமிழ் சொல் கிடையாது. எதையாவது தெரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். காமராஜரை பற்றி 10 நிமிடம் பேசுங்கள். வேலு நாச்சியாரை பற்றி பேசுங்கள். ஆனால் நீங்கள் மொத்தமாக பேச அனுமதிக்கும் நேரம் 10 நிமிடம் தான்.
திருச்சியில் பிரசாரம் செய்வதற்கு 15 நிமிடம் தான் கேட்கிறார்கள். சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். இதில் பேசவும் அவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். வேட்டையாடும் சிங்கமாக இல்லை. வேடிக்கை பார்க்க வரும் சிங்கமாகவும் இல்லை. வேடிக்கை காட்ட வரும் சிங்கமாக உள்ளது. கோட்பாட்டளவில் எதிர்க்கிறேன். உனக்கு நண்பா, நண்பி. எனக்கு தம்பி, தங்கைகள். அவன் எதிர்காலத்திற்கும் நான் போராடி வருகிறேன். பா.ஜ.க. முன் கொள்கை எதிரி. முதலில் உங்கள் கொள்கையை சொல்லுங்கள். தி.மு.க. அரசியல் எதிரி. அப்போ அ.தி.மு.க. அரசியல் உனக்கு எதிரி அல்ல. காங்கிரசும் எதிரி அல்ல. பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றின் வர்ணம் மாறும். ஆனால் அவர்களின் கொள்கை மாறாது.
இவ்வாறு அவர் பேசினார்.