மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக தி.மு.க. தவிர அனைத்து கட்சியினர், வர்த்தகர்கள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
13 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்குகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை சேகரித்து, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிப்பு செய்வதென, அரசிடமும், சுற்றுச்சுழல் துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
இங்கு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை நிறுவினால் கிராம மக்கள் தொற்று நோய், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே சுத்திகரிப்பு ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என மானாமதுரையில் பல்வேறு அமைப்பினர் சார்பில் தெரிவித்து வருகின்றனர். ஆலை கட்டுமான பணியை நிறுத்தி வைக்குமாறு, முந்தைய கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டும், தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி மானாமதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. மானாமதுரை பழைய பஸ்நிலையம், மெயின் பஜார், சுந்தரபுரம் கடைவீதி, சிவகங்கை ரோடு, சிப்காட் ஆகிய பகுதிகளில் மருத்துவ கழிவு ஆலையை மூட வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து சிப்காட் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அப்போது வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பங்கேற்று மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பொற்கொடி தலைமையில் சர்வ கட்சியினர், வர்த்தகர்களிடையே சமரச கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் சூப்பிரண்டு பிரான்சிஸ், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலர்கள் சர்வ கட்சியினர் கலந்துகொண்டு வர்த்தகர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். ஆனாலும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததால் இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்று வருகிறது.