இந்தியா

டிஜிட்டல் மோசடி கும்பலிடம் ரூ.2 கோடி பணத்தை இழந்த பெங்களூரு பெண் மென்பொருள் வல்லுநர்
- தனது 10 வயது மகனுடன் வசித்து வந்த மென்பொருள் நிறுவன ஊழியரான பபிதா தாஸுக்கு கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.
- விக்ஞான் நகரில் இருந்த தனது ஒரு பிளாட், மாலூரில் இருந்த 2 நிலங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் ஒருவர் சைபர் மோசடியில் ரூ.2 கோடியை இழந்துள்ளார்.
டிஜிட்டல் கைது மோசடி கும்பலின் வலையில் சிக்கிய அவர், பெங்களூருவில் உள்ள தனது வீடு மற்றும் நிலத்தை விற்று பணத்தை செலுத்தியுள்ளார்.
பெங்களூருவின் விக்னம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது 10 வயது மகனுடன் வசித்து வந்த மென்பொருள் நிறுவன ஊழியரான பபிதா தாஸுக்கு, கடந்த ஜூன் மாதம் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, அவரது ஆதார் எண் பெயரில் போதைப்பொருள் கடத்தப்பட்டிருப்பதாக மிரட்டியுள்ளனர்.
மும்பை காவல்துறை அதிகாரிகள் போல நடித்த கும்பல், அந்தப் பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து 'டிஜிட்டல் கைது' செய்துள்ளதாக வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து மிரட்டியுள்ளனர். அவரது 10 வயது மகனை குறிப்பிட்டும் மிரட்டி பயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த மிரட்டலுக்கு பயந்து, ஜூன் முதல் நவம்பர் வரை சுமார் சிறிது சிறிதாக மொத்தம் 2.05 கோடி ரூபாய் பணத்தை அந்தப் பெண் அனுப்பியுள்ளார்.
இந்தப் பணத்தைத் திரட்டுவதற்காக விக்ஞான் நகரில் இருந்த தனது ஒரு பிளாட், மாலூரில் இருந்த 2 நிலங்கள் ஆகியவற்றை அவசர அவசரமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார். இது தவிர வங்கிக் கடனும் வாங்கியுள்ளார்.
இறுதியாக தடையின்மை சான்றிதழ் (NOC) வாங்க காவல் நிலையம் வைட்ஃபீல்ட் காவல் நிலையம் சென்றபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சைபர் குற்றங்களால் சுமார் 5,474 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.





