முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால் கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.
அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது பிரஜ்வால் கண்ணீர் விட்டார். அவர் அழுது கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததாகத் தெரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும்.