என் மலர்

    இந்தியா

    தமிழக பா.ஜ.க.வுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக 3 மத்திய மந்திரிகள் நியமனம்- டெல்லி மேலிடம் அறிவிப்பு
    X

    தமிழக பா.ஜ.க.வுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக 3 மத்திய மந்திரிகள் நியமனம்- டெல்லி மேலிடம் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வேட்பாளர்களை டெல்லி மேலிடம் முடிவு செய்யும்.
    • தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய-மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.

    இந்த கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்துவது பற்றி இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.

    கடந்த 11-ந்தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

    அதைத் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் நட்டா ஆகியோரையும் நயினார் நாகேந்திரன் சந்தித்து கூட்டணி நிலவரங்கள் தொடர்பாக விளக்கினார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கத்தில் தேர்தலுக்கு பா.ஜ.க.வை முழு அளவில் தயார் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. வகுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டங்களை தொகுதி வாரியாக நடத்தி வருகிறது. இன்றுடன் இந்த கூட்டம் முடிவடைகிறது.

    ஏற்கனவே வெற்றி வாய்ப்பு உள்ள 70 தொகுதிகள் பட்டியலை பா.ஜ.க. தயாரித்து வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான தகுதியான நபர்கள் பெயர், விவரங்களையும் சேகரித்து உள்ளது. ஒரு தொகுதிக்கு தலா 3 பேர் வீதம் பட்டியல் தயாரித்து மேலிடத்திடம் கொடுத்துள்ளார்கள்.

    கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வேட்பாளர்களை டெல்லி மேலிடம் முடிவு செய்யும். தமிழக தேர்தல் பொறுப்பாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்த பைஜெயந்த் பாண்டா தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கள நிலவரங்களை ஆய்வு செய்து மேலிடத்திற்கு அறிக்கையும் தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த நிலையில், தற்போது புதிதாக 3 மத்திய மந்திரிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து கட்சி தலைவர் நட்டா அறிவித்துள்ளார். பொறுப்பாளராக மத்திய-மந்திரி பியூஸ் கோயல், இணை பொறுப்பாளர்களாக மத்திய-மந்திரிகள் அர்ஜூன்ராம் மெக்வால், முரளிதர் மோகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

    தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய-மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர். கடந்த காலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு திறம்பட பணியாற்றியவர்.

    மத்திய-மந்திரி அமித் ஷாவுக்கு வலது கரம் போல் செயல்படுபவர். கட்சியில் மூத்த நிர்வாக அனுபவம் கொண்டவர்.

    பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்புகளை ஒருங்கிணைத்து அடிமட்டத்தில் கட்சியை கட்டமைத்து தேர்தல் பணியை ஒருங்கிணைப்பதில் கைதேர்ந்தவர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தெளிவான தரவுகளுடன் பதிலடி கொடுப்பதிலும் கில்லாடி.

    மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இவரது தேர்தல் வியூகம் பா.ஜ.க.வின் வெற்றிக்கு கைகொடுத்தது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் அவரது வியூகம் கூட்டணி வெற்றிக்கு பலன் அளிக்கும் என்று கட்சி மேலிடம் நம்புகிறது.

    ஏற்கனவே கூட்டணியை வலுப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை தீர்ப்பதிலும் பியூஸ்கோயல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தேர்தலை சந்திப்பதற்காக பா.ஜ.க. தயாராகி வருகிறது. வருகிற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் பா.ஜ.க களப்பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

    புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தை தொடர்ந்து பா.ஜ.க.வில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என்று தமிழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த பைஜெயந்த் பாண்டா அசாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக ஜம்மு-காஷ்மீர் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுனில் குமார் சர்மா எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி தர்ஷனா பென் ஜர்தோஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    Next Story
    ×