இந்தியா

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு
- கம்பீரா பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
- பாலத்தில் சென்றுகொண்டிருந்த லாரி மற்றும் கார் கீழே உள்ள மாஹி நதியில் மூழ்கியது.
குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா - முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் இந்த பாலம் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அந்த பாலத்தின் ஒரு பகுதி யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மஹி சாஹர் ஆற்றில் விழுந்தன. முதல் கட்ட தகவல்கள் அடிப்படை யில் 2 லாரிகள், ஒரு கார், ஒரு வேன் ஆகிய வாக னங்கள் ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆற்றில் பலர் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
வாகனங்கள் ஆற்றில் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாலம் 40 ஆண்டுகள் பழமையானது. இதனால் பாலத்தின் உறுதி தன்மை பலவீனமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறும் போது, "இந்த பாலம் 1985-ம் ஆண்டு கட்டப்பட்டது. அவ்வப்போது பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. பாலம் இடிந்ததற்கான சரியான காரணம் குறித்து விசாரிக்கப்படும். முதலமைச்சர் பூபேந்திர படேல் தொழில்நுட்ப நிபுணர்களை சம்பவ இடத்திற்கு சென்று இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.