இந்தியா

பாலம் இடிந்த விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல் மந்திரி
- பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்தனர்.
- விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது.
வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடம் சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என முதல் மந்திரி பூபேந்திர படேல் அறிவித்தார்.