இந்தியா

இந்தியாவின் ராணுவ செலவு, பாகிஸ்தானை விட 9 மடங்கு அதிகம் - ஆய்வில் தகவல்
- ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில், இந்தியா உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது.
- சீனாவின் ராணுவ செலவு 7 சதவீதம் அதிகரித்து, 31 ஆயிரத்து 410 கோடி டாலராக இருந்தது.
புதுடெல்லி:
சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாடும் தனது ராணுவத்துக்கு செய்த செலவினம் குறித்து ஆய்வு செய்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் வேளையில், அந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில், இந்தியா உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டில் இந்தியாவின் ராணுவ செலவு 8 ஆயிரத்து 610 கோடி டாலர். (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்து 31 ஆயிரம் கோடி) இது, முந்தைய ஆண்டை விட 1.6 சதவீதம் அதிகம்.
அதே சமயத்தில், பாகிஸ்தான் ராணுவ செலவு 1,020 கோடி டாலர். எனவே, இந்தியாவின் ராணுவ செலவு, பாகிஸ்தானை விட சுமார் 9 மடங்கு அதிகம்.
சீனாவின் ராணுவ செலவு 7 சதவீதம் அதிகரித்து, 31 ஆயிரத்து 410 கோடி டாலராக இருந்தது. 30 ஆண்டுகளாக அதன் ராணுவ செலவு அதிகரித்து வருகிறது. ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும், அணு ஆயுத விரிவாக்கத்துக்கும் செலவழித்து வருகிறது.
ஐரோப்பா கண்டத்தில் ராணுவ செலவு 17 சதவீதம் அதிகரித்து, 69 ஆயிரத்து 300 கோடி டாலராக இருந்தது. ரஷியா-உக்ரைன் போர் காரணமாக, ஐரோப்பாவின் ராணுவ செலவினம் உயர்ந்துள்ளது.
ரஷியாவின் ராணுவ செலவு 14 ஆயிரத்து 900 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய ஆண்டை விட 38 சதவீதம் அதிகம். உக்ரைன் ராணுவ செலவு 2.9 சதவீதம் அதிகரித்து, 6 ஆயிரத்து 470 கோடி டாலராக இருந்தது. இது, ரஷியாவின் செலவில் 43 சதவீதத்துக்கு சமமானது.
உக்ரைன் தனது வரிவருவாய் அனைத்தையும் ராணுவத்துக்கு செலவிட்டு வருகிறது.
ஜெர்மனியின் ராணுவ செலவு 28 சதவீதம் அதிகரித்து, 8 ஆயிரத்து 850 கோடி டாலராக இருந்தது. போலந்து நாட்டின் ராணுவ செலவு 31 சதவீதம் உயர்ந்து, 3 ஆயிரத்து 800 கோடி டாலராக இருந்தது.