இந்தியா

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளை மிரட்டி நகை, பணம் கொள்ளை
- ரெயில் திருப்பதி வந்ததும் ரெயிலில் நடந்த கொள்ளை குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் நேற்று இரவு நிஜமாபாத்தில் இருந்து புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குத்தி ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்பட்டது.
அப்போது 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் பெட்டியில் ஏறினர். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை தட்டி எழுப்பினர்.
மேலும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்தனர். யாராவது சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.
மொத்தம் 10 பெட்டிகளில் இருந்த பயணிகளை மிரட்டி நகை பணம் மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதனால் பயத்தில் பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். ரெயில் திருப்பதி வந்ததும் ரெயிலில் நடந்த கொள்ளை குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.
பயணிகள் 20 பேர் திருப்பதி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்படும் இடத்தை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு கும்பல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.
இதில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.