இந்தியா

ஸ்கேனிங் வசதியுடன் கூடிய பையில் பக்தர்கள் செருப்புகளை ஒப்படைத்த காட்சி.
திருப்பதி கோவிலில் பக்தர்களின் செருப்புகளை பாதுகாக்க ஸ்கேனிங் முறை அறிமுகம்
- ஏ.டி.சி அருகே உள்ள லக்கேஜ் மையத்தில் சோதனை அடிப்படையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- சோதனை அடிப்படையிலான முறைக்கு 98 சதவீதம் பக்தர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது செருப்புகளை பாதுகாப்பதில் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
பக்தர்களின் சிரமத்தைப் போக்க திருப்பதி தேவஸ்தானம் ரேடியோ அதிர்வெண் ஸ்கேனிங் முறையை அறிமுகம் செய்துள்ளது.
ஏ.டி.சி அருகே உள்ள லக்கேஜ் மையத்தில் சோதனை அடிப்படையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பக்தர்கள் தங்களது செருப்புகளை லக்கேஜ் மையத்தில் உள்ளவர்களிடம் கொடுத்தால் பக்தர்களின் போட்டோ மற்றும் செல்போன் எண்ணுடன் ஸ்கேனிங் வசதியுடன் கூடிய ரசீது வழங்குகின்றனர். பிறகு செருப்புகளை பையில் சேகரித்து வைத்துக் கொள்கின்றனர்.
தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் மையத்தில் உள்ள நபரிடம் ரசீதை கொடுத்தால் அதை ஸ்கேன் செய்யும் போது அவருடைய செருப்பு எந்த வரிசையில் எந்த ரேக்கில் உள்ளது என தெளிவாக அடையாளம் காண முடியும்.
இதனால் பக்தர்கள் செரூப்பை எந்தவித சிரமமும் இன்றி விரைவில் பெற முடியும்.
இந்த சோதனை அடிப்படையிலான முறைக்கு 98 சதவீதம் பக்தர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மீதமுள்ள கவுண்டர்களிலும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 65,904 பேர் தரிசனம் செய்தனர். 24,487 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.