இந்தியா

விமான விபத்தின் மர்மத்தை அவிழ்க்கும் 'கருப்புப் பெட்டி' என்றால் என்ன?.. எவ்வாறு செயல்படுகிறது?
- 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்யும்.
241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், 'பிளாக் பாக்ஸ்' (கருப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப் பதிவு கருவி முக்கியப் பங்கு வகிக்கிறது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்த இந்த சோகமான விபத்துக்கான உண்மையான காரணத்தை இந்தக் கருவி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானம் "மேடே" (MAYDAY) அழைப்பை விடுத்த பிறகு ஏற்பட்ட தகவல்தொடர்பு துண்டிப்பு மற்றும் பிற எச்சரிக்கைகள் குறித்த தகவல்களை இது வெளிப்படுத்தும்.
பிளாக் பாக்ஸ் என்றால் என்ன?
பிளாக் பாக்ஸ் என்பது விமானப் பயணத்தின்போது விமானம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் ஒரு சிறிய கருவியாகும். இது 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெடிப்புகள், தீ, நீர் அழுத்தம் மற்றும் அதிவேக விபத்துக்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளாக் பாக்ஸில் என்ன இருக்கும்?
ஒரு பிளாக் பாக்ஸில் முக்கியமாக இரண்டு பதிவு கருவிகள் உள்ளன.
காக்பிட் குரல் பதிவு கருவி (Cockpit Voice Recorder - CVR) - இது விமானிகளின் குரல்கள், காக்பிட் ஒலிகள் மற்றும் வானொலி தகவல்தொடர்புகளைப் பதிவு செய்யும்.
விமானத் தரவு பதிவு கருவி (Flight Data Recorder - FDR) - இது உயரம், வேகம், விமானப் பாதை, ஆட்டோபைலட் நிலை போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்யும்.
விபத்துக்களை எவ்வாறு தாங்குகிறது?
பிளாக் பாக்ஸ், எஃகு அல்லது டைட்டானியம் போன்ற வலுவான பொருட்களால் ஆனது. 3,400 மடங்கு ஈர்ப்பு விசையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, துருப்பிடிக்காத எஃகு அல்லது டைட்டானியத்தால் ஆன 'கிராஷ் சர்வைவபிள் மெமரி யூனிட்' (Crash Survivable Memory Unit). இதில் உள்ளது.
இது அதிக வெப்பம் மற்றும் குளிர் போன்ற வெளிப்புற காரணிகளிலிருந்து தப்ப உதவுகிறது. மேலும், விபத்தின் தாக்கம் பொதுவாக குறைவாக இருக்கும் விமானத்தின் வால் பகுதியின் கடைசியில் இந்த கருவிகள் வைக்கப்படுகின்றன.
விசாரணைக்கு எப்படி உதவுகிறது?
விமான விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளை மறுகட்டமைப்பு செய்யவும் இந்த இரண்டு கருவிகளும் உதவுகின்றன. விபத்துக்குப் பிறகு பிளாக் பாக்ஸ்களிலிருந்து தரவுகளை ஆய்வு செய்ய பொதுவாக 10-15 நாட்கள் ஆகும்.