புதுச்சேரி

சிகரெட் பிடித்தபடி பெட்ரோல் திருடிய வாலிபரால் 12 பைக்குள் எரிந்து நாசம்
- விபத்தில் குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளும் எரிந்து சேதமடைந்தன.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி வாழைக்குளம் குடியிருப்பை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது34). இவர் புதுச்சேரி பட்டேல் சாலை-செஞ்சி ரோடு சந்திப்பில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு பைக்குகளை வாடகை விடும் தொழிலும் செய்து வருகிறார்.
இதற்காக கேண்டின் வீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோவில் பின்புறம் குடோனில் பைக்குகளை நிறுத்தி வைத்திருந்தார்.
நள்ளிரவு 2 மணிக்கு குடோன் எரிவதாக புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அப்போது குடோனுக்குள் ஒருவர் தீக்காயங்களுடன் கிடந்தார். அவரை பெரியக்கடை போலீசார் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிளாட் பாரத்தில் வசிக்கும் சுரேஷ் (26) என்பதும், நள்ளிரவில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடும் அவர் மணிவண்ணன் வாகனம் நிறுத்தி வைத்திருந்த குடோனுக்கு பெட்ரோல் திருட சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு அவர் பைக்குகளில் பெட்ரோல் திருடிய படி சிகரெட் பிடித்துள்ளார். அப்போது பெட்ரோல் மீது நெருப்பு பட்டு குடோன் தீப்பிடித்தது தெரிய வந்தது. இந்த விபத்தில் குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளும் எரிந்து சேதமடைந்தன. தீக்காயமடைந்த சுரேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சுரேஷ் மீது பெரியக் கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.