புதுச்சேரி

முதலமைச்சர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடா?- கவர்னர் பதில்
- கவர்னர் கைலாஷ்நாதன் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியடைந்தார்.
- முதலமைச்சர் ரங்கசாமி கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு செல்ல மறுத்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் கவர்னர் கைலாஷ் நாதனுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
தற்போது சுகாதாரத் துறையில் இயக்குனர் நியமனத்தில் இது வெட்டவெளிச்சமானது. முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்காமல் கவர்னர் கைலாஷ்நாதன் தன்னிச்சையாக முடிவு செய்து சுகாதாரத்துறை இயக்குனராக டாக்டர் செவ்வேலை நியமித்தார். இதனால் கவர்னர் கைலாஷ் நாதன் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியடைந்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு செல்ல மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு சத்துணவு பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று சத்துணவு பைகளை வழங்கினார்.
விழா முடிவில் கவர்னரிடம், முதலமைச்சருக்கும் தங்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறதா.? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. அப்படி ஒன்றும் இல்லை என அவர் பதில் அளித்தார்.