புதுச்சேரி

பணி நிரந்தரம் கோரி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: புதுச்சேரியில் அரசு பஸ்கள் ஓடவில்லை
- பி.ஆர்.டி.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- முதல்கட்டமாக கடந்த 14-ந்தேதி ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. எனப்படும் அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் மூலம் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பி.ஆர்.டி.சி.யில் 40 நிரந்த ஊழியர்கள், 130 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் வேலைநிறுத்த முன் அறிவிப்பு கொடுத்து போராட்டம் நடத்தினர். அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவே போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பி.ஆர்.டி.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து பி.ஆர்.டி.சி. சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழுவினர், 11 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.
இதன் முதல்கட்டமாக கடந்த 14-ந்தேதி ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். 21-ந் தேதி தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்தனர்.
இதன்படி ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட குழுவினர் இன்று தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. பெரும்பாலான பஸ்கள் பணிமனைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சென்னை, காரைக்காலுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கான பஸ்களை பி.ஆர்.டி.சி. நிர்வாகம் நிரந்தர ஊழியர்களை கொண்டு இயக்கியது.
புதுச்சேரியை பொறுத்தவரை அரசு பஸ்களை விட தனியார் பஸ்கள் அதிகம் என்பதாலும் தனியார் பஸ்கள் மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயக்க படுவதால் பயணிகளுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை.
இருப்பினும் கிராமப்புற பகுதிகளில் பி.ஆர்.டி.சி. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதற்கிடையே பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.