புதுச்சேரி

புதுவை பா.ஜ.க. பிரமுகர் கொலையில் அரசியல் பின்னணி- நாராயணசாமி திடுக் தகவல்
- உமாசங்கர் காங்கிரசில் இருந்தபோதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.
- சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி காவல்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பா.ஜ.க. சேர்ந்த உமாசங்கர் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 22-ந் தேதி புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உமாசங்கரின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை 4 முறை சந்தித்து பாதுகாப்பு தரக்கோரியும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் 26-ந் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு அழுத்தம் தந்தது யார்? ஏன் காவல்துறை விசாரணை செய்யவில்லை என கேள்வி எழுகிறது.
உமாசங்கர் புகாருக்கு லாஸ்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இறப்பு சம்பவம் நடந்திருக்காது. இது திட்டமிட்ட படுகொலை. இதில் அரசியல் பின்னணி உள்ளது. போலீசாரிடமும், முதலமைச்சரிடமும் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இதில் புதுச்சேரி போலீஸ் விசாரித்தால் நீதி கிடைக்காது. ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் தலையீட்டால், காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. ரவுடிகள் வைத்து வழக்கை பூசிமுழுக பார்க்கிறார்கள். இந்த சூழல் தொடர்ந்தால் அரசியல் தலைவர்கள் யாரும் புதுச்சேரியில் நடமாடமுடியாது.
பா.ஜ.க.வில் இருப்போருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும் மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்? முன்பு நடந்த செந்தில்குமார் கொலைக்கு உள்துறை அமைச்சரை பதவிவிலக கோரினோம். தற்போது நடந்த கொலைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும்.
போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதால் சி.பி.ஐ. விசாரணை தேவை. கவர்னர் கைலாஷ்நாதன் இதில் தலையிட்டு சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக கவர்னரை சந்திப்போம்.
உமாசங்கர் காங்கிரசில் இருந்தபோதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். அதன்பிறகு பா.ஜ.க. சென்றார். பா.ஜ.க. யார் வேலை செய்கிறார்களோ, வேட்பாளராக முயற்சிக்கிறார்களோ அவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். அத்துடன் நிலப்பின்னணி பெரியளவில் இருக்கிறது.
சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும். இல்லாவிட்டால் முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் வழக்கை முடித்து விடுவார்கள். குற்றவாளிகளுக்கு அரசு துணைபோகிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.