புதுச்சேரி

புதுச்சேரியில் பா.ஜ.க. பிரமுகர் வெட்டிக்கொலை- போலீஸ் குவிப்பு
- கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- சந்தேகபடும்படியாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சாமி பிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது38). பா.ஜ.க. இளைஞரணி முன்னாள் துணைத்தலைவரான இவர் தற்போது காமராஜர் நகர் பா.ஜ.க. பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று (27-ந் தேதி) தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அவரது பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை உமா சங்கர் கவனித்து வந்தார்.
நேற்று இரவு கருவடிக்குப்பம் தனியார் மண்டபத்தில் நடந்து வரும் பிறந்த நாள் விழா பணிகளை பார்த்து விட்டு இரவு 11.30 மணியளவில் வெளியே வந்தார்.
அப்போது அங்கு 5 பைக்குகளில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் உமாசங்கரை சுற்றி வளைத்தது. இதனை கண்ட உமாசங்கர் தன்னை தீர்த்து கட்ட கும்பல் வந்துள்ளதை அறிந்து அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓடஓட விரட்டி உமாசங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உமாசங்கர் இறந்து போனதை உறுதி செய்த பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
தகவலறிந்து அங்கு வந்த உமாசங்கரின் தாய், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டு கிடந்த உமாசங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையில் லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். அப்போது அவரது தாய், உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உமாசங்கரின் உடலை எடுக்கக்கூடாது என கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின்னரே நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகபடும்படியாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி கொலையாளிகள் குறித்த அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.