சிறப்புக் கட்டுரைகள்

திருச்செந்தூர் முருகன் அருள் பெற்ற கட்டபொம்மன்
- வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் கயத்தாரில் தூக்கில் போடப்பட்ட போது அவர் கடைசி வார்த்தையாக திருச்செந்தூர் முருகா என்றுதான் சொன்னார்.
- கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
திருச்செந்தூர் முருகன் ஆலயம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. முருகப்பெருமான் தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூர் மற்றும் சுவாமி மலை ஆகிய 2 ஆலயங்களில்தான் தெய்வமாகவும், குருவாகவும் அருள் பாலிக்கிறார். அதன் பின்னணியில் வரலாறும் உள்ளது.
அதை ஆய்வு செய்தால் திருச்செந்தூர் தலத்தில் முருகப் பெருமானுக்கு குரு பகவான் சூரனை வதம் செய்ய முக்கிய தகவல்களை அளித்ததாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் குரு பகவானுக்கு முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்தில் அருளாசி வழங்கினார். எனவேதான் திருச்செந்தூர் தலம் முருகனை குருவாக வணங்குவதற்கும் ஏற்ற தலமாக அமைந்துள்ளது.
ஒருவரது வாழ்வில் குரு என்பவர் மிக மிக முக்கியமானவர். நாம் வாழ்வில் நல்லது செய்து புண்ணியம் சேர்க்க வேண்டுமானால் குருவின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் தனது பக்தர்களில் பலருக்கு குருவாக திகழ்ந்து அவர்களது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறார்.
திருச்செந்தூரில் இதற்கான அதிசயங்கள் பல நடந்துள்ளன. குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த கட்டபொம்மன்களையும் திருச்செந்தூர் முருகன் குருவாக இருந்து வழி நடத்தியது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. முருகப் பெருமான் மீது கட்டபொம்மன் மன்னர்கள் வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே இல்லை என்று சொல்லலாம்.
தூத்துக்குடி அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் 250 சிற்றூர்களை உள்ளடக்கி கோட்டை அமைத்து கட்டபொம்மன் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். வீரத்தில் சிறந்த குறுநில மன்னர்களில் ஒருவராக அவர்கள் திகழ்ந்தனர். எந்த அளவுக்கு அவர்கள் வீரம் கொண்டவர்களாக இருந்தார்களோ அதே அளவுக்கு அவர்களிடம் பக்தியும் அபரிதமாக இருந்தது.
இதற்கு வழிவகுத்தது கட்டபொம்மன் பரம்பரையின் வழி வந்த 40-வது தலைமுறையை சேர்ந்த கட்டபொம்மன் மன்னர் ஆவார். அவரது குல தெய்வம் ஜக்கம்மா. அந்த தெய்வத்தை வழிபடுவதற்காக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலேயே ஆலயம் உருவாக்கி இருந்தார். என்றாலும், அவரது மனம் முழுவதும் திருச்செந்தூர் முருகனிடமே இருந்தது.
திருச்செந்தூர் முருகனை நினைக்காமல், வணங்காமல் அவர் எந்த ஒரு செயலையும் செய்ததே இல்லை. திருச்செந்தூர் முருகனிடம் உணர்விலும், உரிமையிலும் அவர் இரண்டற கலந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். மூச்சுக்கு மூச்சு திருச்செந்தூர் முருகா என்று உச்சரிப்பதையே அவர் வழக்கத்தில் வைத்திருந்தார்.
அது மட்டுமல்ல.... திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும் மதியம் கருவறை யில் முருகப் பெருமானுக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் முடிந்தபிறகே மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
திருச்செந்தூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சி உள்ளது. அப்படி இருக்கும்போது தினமும் மதியம் திருச்செந்தூரில் முருகனுக்கு நைவேத்தியம் ஆகி விட்டது என்பது அவருக்கு எப்படி தெரிந்தது? இதற்கு அந்த காலத்திலேயே அந்த கட்டபொம்மன் அருமையாக ஒரு ஏற்பாடு செய்து இருந்தார்.
அதாவது திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரத்தின் 7-வது மாடத்தில் அவர் மிக பிரமாண்டமான வெண்கல மணி ஒன்றை அமைக்க உத்தரவிட்டார். அது போன்று திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை சுமார் 2 கிலோ மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே மணி கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த மண்டபங்களை அமைத்தார்.
ஒவ்வொரு மணி மண்டபத்திலும் பணியாட்களை நியமனம் செய்து இருந்தார். திருச்செந்தூர் கோவிலில் மதியம் முருகப் பெருமானுக்கு நைவேத்தியம் படைத்து பூஜைகள் முடிந்ததும் ராஜகோபுரத்தில் 7-வது மாடத்தில் கட்டப்பட்டு இருக்கும் வெண்கல மணியை ஒருவர் வேகமாக அடித்து ஒலிக்க செய்வார்.
அந்த ஒலி சத்தம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அடுத்த மணி மண்டபத்துக்கு கேட்கும். உடனே அந்த மண்டபத்தில் இருப்பவர் அங்கிருக்கும் மணியை அடிப்பார். அது அடுத்த 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மணி மண்டபத்துக்கு கேட்கும். அந்த சத்தம் கேட்டதும் அடுத்த மணி மண்டபத்தில் இருப்பவர் பிரமாண்டமான வெண்கல மணியை ஒலிக்க செய்வார்.
இப்படியே திருச்செந்தூரில் அடிக்கப்படும் வெண்கல மணி ஓசை அடுத்தடுத்து மணி மண்டபங்கள் மூலம் கடந்து பாஞ்சாலங்குறிச்சியை எட்டி விடும். அந்த மணி ஓசை கேட்டதும் கட்டபொம்மன் மன்னர் மகிழ்ச்சி அடைவார். அதன் பிறகே அவர் திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்துக் கொண்டு மதிய உணவு அருந்த அமருவார்.
இது ஒருநாள் இரண்டு நாள் நடந்தது அல்ல. 40-வது வழிவந்த மன்னரான கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையில் வாழ்ந்த அனைத்து நாட்களிலும் நடந்தது. இதன் மூலம் கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகன் மீது வைத்திருந்த பக்தியும், அன்பும் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை உணர்ந்துக் கொள்ள முடியும்.
கட்டபொம்மன் அமைத்த அந்த மணி மண்டபங்கள் இன்றும் ஆறுமுகநேரி, ஆத்தூர், பழைய காயல், ஒட்டப்பிடாரம் உள்பட பல இடங்களில் இருப்பதை காண முடியும். அந்த 40-வது கட்டபொம்மனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு மன்னர்களும் திருச்செந்தூர் முருகனுக்கு மதியம் நைவேத்தியம் முடிந்த பிறகு சாப்பிடுவதையே வழக்கத்தில் வைத்திருந்தனர்.
கட்டபொம்மன் மன்னர்கள் வரிசையில் 47-வது மன்னராக பதவி ஏற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி நிறைவு பெற்ற பிறகு அந்த மணி மண்டபங்கள் பயன் இல்லாமல் போய் விட்டன.
அதுபோல திருச்செந்தூர் ஆலய ராஜகோபுரத்தின் 7-வது மாடத்தில் கட்டப்பட்ட பிரமாண்ட மான வெண்கல மணியும் பயன்படுத்தாமலேயே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் ஆலயத்தில் கும்பாபிஷேக பணிகள் நடந்தபோது அந்த மணியை சீரமைத்து மீண்டும் ஒலிக்க செய்தனர்.
மேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள். விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் தொடங்குவார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால், தன்னுடைய நெற்களஞ்சியங்களில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பிக் கொண்டிருக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். குடிமக்களும் தம் வயல்களில் இருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோவிலுக்குச் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்து பணித்திருந்தார்.
ஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லி இருந்தார் கட்டபொம்மன்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன் அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே? என்றாராம். அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோவிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.
இந்த சம்பவம் நடந்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டன. காலங்கள் மாறி விட்டன. என்றாலும் வீரபாண்டிய கட்டபொம்மன் கொடுத்த ரத்தின மாலையும் இதர ஆபரணங்களும் இன்றும் பொலிவோடு திருச்செந்தூர் முருகனுக்கு அலங்கரிக்கப்படுகிறது.
இன்னொரு சமயம், திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது. தேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று, வர முடியவில்லை.
சரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்கு மேல் நகராமல் நின்று விட்டது. தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை. இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் அங்கு வந்து சேர்ந்தார்.
கட்டபொம்மன் தேர்வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மன் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளி இருக்கிறார். கட்டபொம்மன் மன்னர்கள் திருச்செந்தூர் முருகனுக்காக அளித்த நிலங்கள் ஏராளம். அவை இன்றும் "செந்தில் பண்ணை" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.
நிலங்கள் மட்டுமின்றி திருச்செந்தூர் முருகனின் தினசரி பூஜைக்காக உதய காலம், உச்சி காலம், நையினார் கட்டளை, ஞானாபிஷேகம், நிறைஅலங்காரம், நைவேத்தியம் போன்ற பல்வேறு பணிகளை உருவாக்கி இருந்தனர். தங்கள் சொத்துக்களில் இருந்து இந்த பணிகளை செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர். இன்றும் இந்த பணிகள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் கயத்தாரில் தூக்கில் போடப்பட்ட போது அவர் கடைசி வார்த்தையாக திருச்செந்தூர் முருகா என்றுதான் சொன்னார்.
கட்ட பொம்மன் மன்னர்கள் போல திருச்செந்தூர் முருகன் மீது பக்தி வைத்திருந்த குடும்பத்தினரை பார்ப்பது அரிதிலும் அரிது. இதே போன்ற இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.