சிறப்புக் கட்டுரைகள்

பெண்களின் சிறுநீர் கசிவு பிரச்சினையை தீர்க்கும் சிகிச்சைகள் - உடற்பயிற்சிகள்
- சிறுநீர் கசிவு ஏற்படும் பெண்களுக்கு முறையாக சில நரம்பு சம்பந்தமான பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்
- பொதுவாக 40 வயதை கடந்தவுடன் பெரி மொனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்ணுறுப்பில் ஒருவித மாற்றங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு 40 வயதாகும்போது ஏற்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சிறுநீர் கசிவு பிரச்சினையாகும். இந்த பிரச்சினை உள்ள பெண்களுக்கு எப்போதுமே சிறுநீர்ப்பை நிரம்பி இருப்பது போன்ற உணர்வு காணப்படுகிறது. இதனால் அவர்களால் சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இருமல், தும்மல் வரும் போது கூட அவர்களை அறியாமல் சிறுநீர் கசிந்து விடும். சில நேரங்களில் சிரிக்கும்போது கூட சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகள் எதனால் ஏற்படுகிறது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். அதற்கு ஹார்மோன் ரீபிளேஸ்மெண்ட் தெரபி மூலம் சிகிச்சை அளித்து சரி செய்ய முடியும் என்பது பற்றியும் அறிந்தோம்.
சிறுநீர் கசிவு பிரச்சினையை சரி செய்வதற்கான உடற்பயிற்சிகள்:
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சினையை சரி செய்வதற்கு சில உடற்பயிற்சிகளும் உள்ளன. அதாவது தசைகள் தளர்வாவதை தடுக்க, தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதில் கிகில் உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்று. இது இடுப்பு தள தசைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு உடற்பயிற்சி ஆகும். இந்த உடற்பயிற்சியானது சிறுநீர்ப்பை, குடல் மற்றும் பிற உறுப்புகளை பாதுகாக்கும் தசைகளை வலுவடைய செய்கிறது.
மேலும் இதற்கான சிறுநீர்ப்பை தொடர்பான பயிற்சி முறைகளும் உள்ளன. இதற்கான பயிற்சிகளை அளிக்கும்போது, சிறுநீர் கசிவதை கட்டுப்படுத்த முடியும். மேலும் இந்த பயிற்சி மூலம் சிறுநீர்ப்பையில் சிறுநீரை தேக்கி வைக்கும் கொள்ளளவும் அதிகமாகும். இதனால் அந்த பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படுவது குறைவாகி, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் சீராக்கப்படுகிறது.
சிறுநீர் கசிவு ஏற்படும் பெண்களுக்கு முறையாக சில நரம்பு சம்பந்தமான பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். இதன்மூலம் நரம்பு இடைவெளிகள் சீராக்கப்படும். தொற்றுகள் சரி செய்யப்படும். சிறுநீர்ப்பை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தும்போது அந்த பெண்ணின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, அவர்களுடைய சிறுநீர் கசிவு பிரச்சினை சரியாகி, அதனால் ஏற்படும் மனக்குறைபாடுகளில் இருந்தும் ஒரு நல்ல மாற்றங்களை உருவாக்கலாம்.
சிறுநீர் கசிவு ஏற்படுகிற பெண்களுக்கு இவற்றை சீரான முறையில் சரியாக செய்தால் இதை முழுமையாக சரி செய்ய முடியும். மேலும் இதற்கு சில நல்ல மருந்துகள் கூட இருக்கிறது. அவற்றின் மூலமும் சரி செய்ய முடியும். ஆனாலும் பிரத்தியேகமான சிறுநீர்ப்பை தொடர்பான உடற்பயிற்சி முறைகளை கற்றுக் கொடுத்து கட்டுப்படுத்தும்போது இந்த பிரச்சினைக்கு முறையான தீர்வு கிடைக்கும்.
திரும்பத் திரும்ப ஏற்படும் சிறுநீர் தொற்றுக்கள்:
மேலும் சிலருக்கு 40 வயதை தாண்டிய பிறகு தொடர்ச்சியாக சிறுநீர் தொற்றுக்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் சிறுநீர் தொற்றுக்கள் திரும்பத் திரும்ப வரும். தொற்றுக்கள் இருப்பதால் இவர்களுக்கு சிறுநீர் கசிவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும். மேலும் அவர்களுக்கு தொற்றுகள் ஏற்படுவதும் அதிகமாகும்.
சில பெண்களுக்கு தாம்பத்திய உறவு வைத்தவுடன் சிறுநீர் தொற்று ஏற்படலாம். இதற்கான தீர்வு என்ன என்று பலரும் கேட்கிறார்கள். 40 வயதை கடக்கும்போது பெண்களுக்கு ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றத்தினால் சிறுநீர் கசிவு ஏற்படலாம். இதனால் அவர்களுக்கு சிறுநீர் தொற்றுகள் அதிகமாகிறது. இதற்கான முக்கியமான காரணத்தை பார்ப்போம்.
பொதுவாக 40 வயதை கடந்தவுடன் பெரி மொனோபாஸ், மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்ணுறுப்பில் ஒருவித மாற்றங்கள் ஏற்படும். அதனால் லூப்ரிகேஷன் குறைவாகி மிகவும் உலர்வு தன்மை காணப்படும். இந்த உலர்வு தன்மை என்பது பெண்கள் எதிர்நோக்குகிற மிக முக்கியமான பிரச்சினையாகும்.
லூப்ரிகேஷன் குறைவாக இருக்கும்போது பெண்ணுறுப்பில் உள்ள திசுக்கள் அனைத்தும் உலர்வடைந்து காணப்படுவதால் தாம்பத்திய உறவின்போது திசுக்களில் சின்னச்சின்ன காயங்கள் ஏற்படலாம். வழக்கமாகவே நமது தோல் பகுதி உலர்வாக காணப்படும்போது அரிப்பு தன்மை இருக்கும். அரிப்பு தன்மை ஏற்படும்போது தோல் பகுதியில் லேசாக தேய்த்தால் கூட புண்ணாகிவிடும். ஏனென்றால் நமது தோல் அந்த அளவுக்கு மென்மையாக இருக்கும்.
அதேபோல் தான் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஹார்மோன் குறைபாடுகளால் தோல் பகுதியில் உலர்வு தன்மை ஏற்படும். லூப்ரிகேஷன் சீராக இல்லாததால் பல நேரங்களில் பெண்ணுறுப்பின் வல்வா பகுதியில் எளிதாக தொற்றுக்கள் உருவாகும். அதில் ஏற்படுகிற சில காயங்கள் மற்றும் சேதங்கள் ஆகியவற்றால் தொற்றுகள் எளிதில் பரவும்.
பாலியல் உறவால் ஏற்படும் சிறுநீர் தொற்று பிரச்சினை:
மேலும் பெண்ணுடைய யோனி பகுதிதான் அந்த சிறுநீர் செல்வதற்கு பயன்படும் பாதையின் ஒரு பகுதி ஆகும். சிறுநீர் செல்லும் குழாயின் பின் பகுதியில் தான் யோனி இருக்கிறது. யோனி பகுதியில் ஏற்படும் எந்த விதமான அழுத்தங்களும் மாற்றங்களும் இந்த தொற்றுகளை அதிகரிப்படுத்தும்.
குறிப்பாக லூப்ரிகேஷன் இல்லாமல் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது ஏற்படுகிற பலவிதமான காயங்களும் தொற்றுக்களை அதிகப்படுத்தலாம். சில நேரங்களில் சிறுநீர்க்குழாய் சுருங்கி பாதிப்பு ஏற்படுவதால் தொற்றுகள் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.
பல நேரங்களில் இந்த பாலியல் உறவு கொள்ளும்போது ஏற்படுகிற சில தொற்றுகளாலும் சிறுநீர் தொற்றுக்கள் பிரச்சினை ஏற்படலாம். பெண்களுக்கு இயற்கையாகவே இந்த கால கட்டத்தில் செல்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் உலர்வு தன்மையாலும் சில தொற்றுக்கள், அதாவது பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படும். மேலும் தோல் பகுதியில் உருவாகும் மாற்றங்கள் போன்று ஏற்படுகிற உலர்வு தன்மைகளாலும் தொற்றுகள் ஏற்படலாம்.
எனவே திரும்பத் திரும்ப சிறுநீர் தொற்றுக்கள் வந்தால் முறையாக முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து என்ன தொற்றுக்கள் இருக்கிறது என்று பார்த்து, அதற்கான சரியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் சாப்பிட வேண்டும்.
அடுத்ததாக பெண்களின் யோனி பகுதியில் ஏற்படும் உலர்வு தன்மையை சரி செய்வதற்கு சில மருந்துகள் இருக்கிறது. நமது தோல் பகுதிக்கு பயன்படுத்துவது போன்று, யோனி பகுதியில் பயன்படுத்துவதற்கான லூப்ரிகேஷன் இருக்கிறது. அதனை பயன்படுத்தலாம். வல்வாவில் உள்ள தோல் பகுதியிலும் லூப்ரிகேஷன் பயன்படுத்தலாம். இவற்றின் மூலமாக உலர்வு தன்மை குறைவாகும் போது அந்த திசுக்களின் ஸ்டெம்செல் திறன் அதிகமாகும். இது மிகவும் முக்கியமான ஒன்று.
அடுத்து சிறுநீர்ப்பையின் பலவீ னத்தால் ஏற்படும் பிரச்சினையை யூரோடைனமிக் பரிசோதனை மூலமாகவும், எளிமையான ஸ்கேன் பரிசோதனை மூலமாகவும் பார்க்கலாம். இந்த பரிசோதனைகள் மூலம் சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையில் எஞ்சி இருக்கும் சிறுநீரின் அளவு கணக்கிடப்படும். எஞ்சி இருக்கும் சிறுநீரின் அளவு அதிகமாக இருக்கிற பெண்களுக்கு திரும்பத் திரும்ப சிறுநீர் தொற்றுக்கள் ஏற்படும்.
எனவே இதனை தீர்ப்பதற்கு தொற்றுக்களை சரிசெய்வதற்கான முறையான சிகிச்சைகளை பெற வேண்டும். சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரை முழுமையாக காலி செய்வதற்கு சில பயிற்சிகள் உள்ளன. அந்த பயிற்சிகளை கொடுத்து சிறுநீர்ப்பையில் சிறுநீரை முழுமையாக காலி செய்யும் போது சிறுநீர் தொற்றுக்கள் சரி செய்யப்படும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
சிறுநீர்ப்பையை காலியாக வைத்திருப்பதற்கான பயிற்சி:
ஏனென்றால் பொதுவாக இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமான விஷயமாக, அந்த சிறுநீர்ப்பையில் ஏற்படும் தளர்வு காரணமாக சிறுநீர்ப்பை சற்று இறங்கி காணப்படும். சிறுநீர்ப்பை இறங்கி காணப்படுவதால் சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்கி காணப்பட்டு தொற்றுக்கள் ஏற்படும்.
அதற்கான தீர்வாகத்தான் சிறுநீர்ப்பையை எப்படி காலியாக வைத்திருக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான முறை யான பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்லித்த ருவார்கள். அதன் மூலமாக சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரை முழுமையாக காலியாக்கும் போது தொற்றுக்களை குறைக்க முடியும்.
எனவே மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படும் தொற்றுக்களை சரி செய்வதற்கு, முறையான சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிஸ்டாஸ்கோபி பரிசோதனை செய்யலாம். இந்த பரிசோதனை மூலம் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் குழாயின் உட்புறத்தை பார்த்து அதில் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். ஒளியுடன் கூடிய ஒரு மெல்லிய குழாய் மூலம் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் சிறுநீரை எடுத்தும் பரிசோதனை செய்து தொற்றுக்களை சரி செய்வோம்.
பல நேரங்களில் அந்த சிறுநீர்க்குழாய் சுருங்கிவிடும். அது சுருங்குவதால் சரியான முறையில் சிறுநீர் காலியாகாத நிலை வரலாம். சிறுநீர்க்குழாயை விரிவடைய செய்யும் சிகிச்சை இதற்கு ஒரு தீர்வு தீர்வாக அமையும்.
இந்த வகையில் மாதவிலக்கு நின்று மெனோபாஸ் வந்த பெண்களுக்கு பெண்ணு றுப்பில் ஏற்படும் உலர்வு தன்மை தொற்றுக்கள் ஏற்படுவதற்கும், சிறுநீர்க்கசிவு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக இருக்கும். இதனை சரியான முறையில் பரிசோதித்து கண்டுபிடித்து சரி செய்யும் போது தொற்றுக்கள் வருவதை குறைக்க முடியும். சிறுநீர் கசிவையும் தவிர்க்க முடியும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சியுடன், பெண்ணுறுப்பு சுகாதாரத்தையும் சரியாக பராமரித்தால் இந்த பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.