சிறப்புக் கட்டுரைகள்

எதிர்மறை எண்ணங்களும், மன அழுத்தமும்
- மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு.
- அனைவரின் வாழ்விலும் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள், இன்ப துன்பங்கள், நிறைந்து தான் இருக்கும்.
"மனசத் தொட்டுச் சொல்லு" "மனசாட்சியோடதான் பேசுறியா? "நீங்க மனசு வச்சாப் போதும்" என்று பேச்சு வழக்கில் நாம் பல இடங்களில் பயன்படுத்துகிறோம். மனமே! நீ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இதைத்தான் சிந்திக்க வேண்டும் என்று நம்மால் கட்டளை இட முடியுமா? உடலைக் கொண்டு வேலைகளை எளிதாகச் செய்யும் நம்மால், மனத்தை ஒருமுகப்படுத்துவதில் எத்தனை சிக்கல்கள்! ஆனால் உண்மையில் மனம் என்ற ஒன்று நம் உடலில் எங்கு உள்ளது? என்று சிந்தித்தோமேயானால், பல உண்மைகள் புரியும். மனம் என்றால் என்ன? என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் தருவீர்கள்?
மனம் என்றால் என்ன?
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. எண்ணங்கள் என்பது நாம் பார்ப்பவை, கேட்பவை, பேசுபவை, உணர்பவை ஆகியவற்றில் இருந்துதான் தோன்றுகின்றது. இதுவரை நம் வாழ்வில் எதிர்கொள்ளாதவற்றிலிருந்து எண்ணங்கள் வருவதில்லை. எனவே நம் மனம் என்பது, எண்ணங்களைக் கொண்டுதான் உருவாக்கப்படுகின்றது. பலதரப்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் உள்ள இக்காலத்திலும், மனம் என்பது ஒரு புரியாத புதிராகத் தானே உள்ளது.
நம் எண்ணங்களில் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் என்ற இரண்டு வகைகள் உள்ளன. அன்பு, கருணை, பாசம், நேசம், காதல், மகிழ்ச்சி, மனநிறைவு, ஆர்வம், மனஉறுதி போன்ற நேர்மறை எண்ணங்களும், கோபம், வெறுமை, பற்றின்மை, பயம், குற்றஉணர்வு, மனச்சோர்வு, மனக்கசப்பு, தோல்வி, சோகம், பொறாமை, இயலாமை போன்ற எதிர்மறை எண்ணங்களும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.
இப்போதுள்ள பரபரப்பான உலகத்தில், எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதற்கு மாறிவிட்ட நம் வாழ்வியலும் ஒரு காரணம்தான். இதனால் சிலர் மனநிறைவை இழந்து தவிக்கிறார்கள். பலர் மனஅழுத்தம் அதிகரித்து, தம் தினசரி வேலைகளைக் கூட சரிவரச் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். மனஅழுத்தம் உள்ளதா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள மன அழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.
மனஅழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள்:
மனஅழுத்தம் தலை முதல் கால் வரை பல அறிகுறிகளைத் தோற்றுவிக்கிறது. அதில் மிக முதன்மையானவை இதோ,
தலைவலி, தலைப்பாரம், முடி உதிர்தல், உடல் சோர்வு, செயல்களில் பிடித்தம் இல்லாமை, கழுத்து வலி, உடல் சதையில் இறுக்கம், தோள்ப்பட்டை வலி, நெஞ்சு வலி, நெஞ்சு படபடப்பு, உடலில் சதைகள் துடித்தல், பசியின்மை, மலம் வெளியேறுவதில் சிக்கல், உறக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகம் கோபப்படுதல், தலைசுற்றல்
மற்றவர்களுடன் சரளமாகப் பேசத் தயங்குவது, அதிகச் சத்தம் கேட்டால் நெஞ்சுப் படபடப்பு, உடலுறவில் நாட்டமின்மை, உடலில் ஒரு சில பகுதிகளில் அழுத்துவது போன்ற உணர்வு உடல் வெலவெலத்து, அதிக அளவில் வியர்ப்பது போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இவை அனைத்துமே ஒருவருக்கு வருவதில்லை இதில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.
எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த மனத்தோடு, நேர்மறையான வாழ்க்கை எப்படி வாழ முடியும்? எண்ணங்கள் எப்படியோ அப்படித் தானே வாழ்க்கையும். சிலர் மனநிம்மதி இல்லாமல், எந்நேரமும் மன அழுத்தத்துடன் இருப்பதனால், வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.
மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.
வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் யாவை?
நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், மன அழுத்த நோய், மனச்சோர்வு நோய் என்று கூறிக்கொண்டே போகலாம்.
அனைவரின் வாழ்விலும் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள், இன்ப துன்பங்கள், நிறைந்து தான் இருக்கும். துன்பங்கள் மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பதால், வாழ்வில் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியான தருணங்களை நாம் அனுபவிக்க மறந்து விடுகிறோம். கடந்த காலத்தின் தோல்விகளை மட்டுமே சிந்திப்பதால், எதிர்காலத்தில் வாழ்க்கைக்குத் தேவையான செயல்களைச் செய்ய முற்படாமல் விட்டு விட்டு, எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகிறோம். முதலில் நீங்கள் மனஅழுத்தத்துடன் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டும்.
மன அழுத்தத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?
மனம் என்ற ஒன்று உடலின் இன்ன பகுதியில் தான் உள்ளது என்பதை வரையறுத்துக் கூற முடியாதபோது இதைப் ஆய்வு செய்து எவ்வாறு கண்டறியமுடியும்? அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து உங்கள் எண்ணங்களில் எது மேலோங்கி உள்ளது? எது ஆதிக்கம் செலுத்துகிறது? என்பதைக் கண்டறியுங்கள். இப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனித்தாலே போதும். நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கிறீர்களா? இல்லையா? என்பது உங்களுக்கே புரியும். அப்படி மனஅழுத்தம் இருப்பின், எதனால் ஏற்பட்டது? அதற்கு தீர்வு ஏதேனும் உண்டா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.
முதலில் உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை ஒரு தாளில் எழுதுங்கள். எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுவது மட்டுமே, நாம் மகிழ்ச்சியாகவும், நோய்நொடி இல்லாமலும் வாழ்வதற்கான ஒரே வழி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
எடுத்துக்காட்டுக்கு ஒரு பாத்திரத்தில் உள்ள காற்றை வெளியே அகற்ற, எப்படி அரிசி மற்றும் பிறதானியங்கள் அல்லது தண்ணீர் கொண்டு நிரப்புகிறோமோ, அது போன்று, தினம் தினம் நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டே வரும்போது, எதிர்மறை எண்ணங்கள் நம்மைவிட்டு நீங்கிவிடும் அல்லது குறைந்துவிடும். அதற்கான செயல்திட்டங்களை நமக்கு நாமே உருவாக்கினால் மட்டுமே, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மகிழ்வான வாழ்க்கையை வாழலாம்!