சிறப்புக் கட்டுரைகள்

ஆரோக்கியம் தரும் கோடைகால உணவுகள் - புரதச்சத்து நிறைந்த கம்பு
- குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஆணுடன் பங்கிட்டுக்கொள்ள பெண் வேலைக்குப் போகிறாள்.
- உதிரப்போக்குக் காலமும், கர்ப்ப காலமும் இயல்பாக இருந்தாலே குழந்தைப் பேறும் இயற்கையாக அமையும்.
பெண்கள் பூப்பெய்திய காலம் தொட்டு உதிரப்போக்கு நிற்கும் காலம் வரை தொடர் தொல்லைகளை அனுபவித்து வருகிறார்கள். அன்றாடக் கூலி வேலை செய்து வாழ்வினை ஓட்டும் குடும்பப் பெண்கள் இதனால் அடையும் இன்னல் சொல்லில் அடங்காதது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சர்க்கரை ஆலைக்காக கரும்பு வெட்டும் பருவத்தில் உதிரப்போக்கினால் வேலைக்கு வரவியலாது. அந்நாட்களில் கரும்பு வெட்டுப் பாதிக்கப்படுகிறதென்று மருத்துவ சோதனை என்ற பெயரில் சினைப்பையில் புற்றுநோயென்று அச்சுறுத்தி சினைப்பையையே அகற்றும் அவலம் நடந்தேறி வருகிறது. மேல்த்தட்டு வர்க்கப் பெண்களிடம் கூட இந்நாட்களில் உடல் உபாதைகளால் அளவு கடந்த கோபம் தலைக்கேறி விடுகிறது. இது உடலியல் தொடர்பான பிரச்சனை, தற்காலிகமானதுதான் என்பதைப் புரிந்து கொள்ளாத தம்பதியர் அந்நாட்களில் கோபத்தின் உச்சத்திற்கு சென்று நிரந்தர பிரிவிற்கான முடிவைக்கூட எடுத்து விடுகின்றனர்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னரும் கூட பெண்களின் உதிரப்போக்குக் காலத்தில் உபாதைகள் இருந்து வந்ததுதான். ஆனால் அன்று இத்தனை தீவிரமாக இருந்ததில்லை. இன்று இப்பிரச்சனை பெண்களுக்கு நிரந்தர தொல்லைகளாக மாறி விட்டதற்குக் காரணம் கடந்த வாரத்தில் பார்த்தது போல உடலுழைப்பு இன்மை, இடையறாத மூளை உழைப்பு, அதீத மனவழுத்தம் ஆகியவை ஆகும். அதனோடு மிக முக்கியமான காரணி உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் இன்மை.
இரண்டு தலைமுறைக்கு முன்னர்வரை உதிரப் போக்குக் காலத்தை வீட்டிற்குத் தூரம் என்றனர். அம்மூன்று நாட்களும் அவர்களை இயல்பான வேலையில் ஈடுபடுத்துவதில்லை. உதிரப்போக்கு சீராக செல்ல வேண்டும் என்பதற்காக உடலின் வெப்பத்தைத் தணிந்திடாத வகையில் குளிக்க மாட்டார்கள். குறிப்பாகத் தலைக்குக் குளித்து உடல் குளிர்ந்து விடாமல் இயல்பான வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.
இன்றோ நமது கல்வி முறை அதுவும் போட்டிக்கல்வி முறை பெண்களை அந்நாட்களில் ஓய்வெடுக்க அனுமதிக்காது. நிறுவனம் சார்ந்த வேலைக்குப் போகும் பெண்களையும் விடுப்பு எடுக்க அனுமதிக்காது. எனவே மேற்படி உதிரப்போக்கு சார்ந்த பிரச்சனைகளோடு வீட்டில் சிற்சிறு வேலைகளைக் கூடச் செய்யாது ஒதுங்கி இருந்த பெண்கள் வீட்டை விட்டு வெகுதொலைவுக்குச் செல்ல நிர்பந்திக்கிறது இன்றைய பொருள்சார்ந்த வாழ்க்கை முறை. விளைவு, குடும்பத்தின் ஆதார சக்தியான பெண் எப்போதும் தொல்லைக்குள், நிரந்தர நோய்மைக்குள் சிக்கிக் கொள்கிறாள்.
இனப்பெருக்கத்திற்கு வெப்பம் – குளிர்மையும் சீரான வகையில் இருந்தாக வேண்டும். நிலப்பகுதியில் கூட எங்கே ஒரே சீரான வகையில் பொருத்தமாக அமைந்திருக்கிறதோ அங்குதான் பல்லுயிர்ப்பெருக்கமும் நிறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் மனித இனப்பெருக்கத்திற்கு ஆதார சக்திகளான ஆண் வெப்பம், பெண் குளிர்மை.
ரத்தம் தான் வெப்பம். ஆணின் உடலியல்பு, உடலமைப்பு, உணவுத் தேர்வு, உடலியக்கம் ஆகிய அனைத்தும் போதிய ரத்தத்தை உருவாக்கிக் கொள்ளும் விதமாகவே அமைந்துள்ளது. ஆனால் இன்று மாறிவரும் உலகியல் போக்கு பெண்ணுடலுக்கும், அவள் இன்னொரு உயிரை உருவாக்குவதற்குரிய உடலமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்குப் பொருத்தமானதாக இல்லை. ஒரு பெண் பொதுவெளிக்கு வருவது பொருத்தமானது தான். பெண்ணானவள் நிர்வாகத்தில், பொருளுற்பத்தியில் பங்கெடுப்பது உலக வளமைக்குக் கூடுதல் நன்மை செய்யும் தான்.
ஆனால் பெண், பொதுவெளிக்கு வரும் அதே நேரத்தில் அவளது உடலியல்பை, பிள்ளையைப் பெறுவதில் அவளுக்குள்ள கூடுதல் சுமையை சமூகம் கருத்தில் கொண்டாக வேண்டும். அவளுக்குப் போதிய ஓய்வினைத் தரக்கூடிய பெருமனது கொண்டிருக்க வேண்டும்.
குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஆணுடன் பங்கிட்டுக்கொள்ள பெண் வேலைக்குப் போகிறாள். ஆனால் பெண்ணின் வீட்டு வேலைச் சுமையை ஆண் பங்கிட்டுக் கொள்கிறானா? அவ்வாறு பங்கிடுவது சரி என்று சமூகம் நினைக்கிறதா?
பெரிய பெரிய உணவகங்களில், நட்சத்திர விடுதிகளில், ஆயிரமாயிரம் பேர் பங்கேற்கும் விருந்துகளில் ஆண் சமைப்பதைப் பெருமைப்படுத்தும் அதே சமூகம் தான், வீட்டுச் சமையலில் ஆண் ஈடுபடுவதை கேலிச் சித்திரமாக மாற்றுகிறது. மனைவியின் உடையை ஒரு டெய்லர் கடைக்குக் கொண்டு போவதைக் கூடக் கீழ்மைச் செயலாகக் கருதுகிறது.
அவ்வளவு ஏன் உதிரப்போக்குக் காலத்தில் கெண்டைக்கால் நரம்பு இழுக்க எழக்கூடத் திராணியற்ற போதில் ஒரு ஆண் நாப்கின் வாங்கப் போனால் கூட அதனை கருப்புப் பையில் சுற்றி இரண்டாம் நபரது கண்ணில் படாத வகையில் ரகசியப் பொருளாகத் தருகிறது. அது இயற்கையானது தானே என்ற பார்வை நம்மில் யாருக்கும் தோன்றுவதில்லை.
பெண்ணின் சினை முட்டை முதிர்ந்து வெளியேறி பெண்ணுடலின் ரத்தம் தூய்மை அடையாமல் இந்த உலகம் புத்துயிரைக் காண முடியாது. இந்த எளிமையான இயற்கை உண்மையை ஒப்புக் கொண்டால் நெருக்கடியான நேரத்தை சிரமமின்றிக் கடந்து விட முடியும்.
பெண்களுக்குரிய தனித்துவமான உணவு முறை, விரதமுறை, வழிபாட்டு முறை எனப் பலவகையில் தம்மைப் பராமரித்துக் கொள்ள வாய்ப்பிருந்தது.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஒரு பெண் தனக்குரிய தனித்துவமான சிக்கலை உளப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்ளக் கூட வாய்ப்பில்லை. கூட்டுக்குடும்பம் இல்லை. அக்கம் பக்கத்தாருடன் பேச வாய்ப்பில்லை. ஊர்த்தெரு கூடி தமக்கான கொண்டாட்டங்களைக் களிக்க வாய்ப்பில்லை.
குடும்பம், படிப்பு, வேலை, குழந்தைகள் பராமரிப்பு என இடையறாத கடப்பாடுகளுக்கு இடையே தன் மீது அக்கறை கொள்ளுதல் சுயநலமென்ற குற்றவுணர்வுக்கு உள்ளாகும் உளவியல் சிக்கலுக்குத் தள்ளப்பட்டுள்ளாள். எனவே தான் மேற்பூச்சான உடை, உதட்டுச் சாயம், க்ரீம் போன்றவற்றோடு தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள். மற்றபடி ஆண்டுக்கணக்காக குடும்ப நெருக்கடியோடு உடல் சார்ந்த நெருக்கடிகளுக்குள்ளும் உழல்பவளாகவே இருக்கிறாள் பெண்.
இன்றைய நெல் (அரிசி), பயிறு, இறைச்சி, பால் அனைத்தும் அவற்றின் உற்பத்தி முறையால் மூலாதார சத்துக்களை இழந்து விட்டன. இந்நிலையில் நம்முடைய பாரம்பரியமான தானிய வகைகளே பெண்ணுடலுக்கு உரிய தனித்துவமான சத்துக்களை வழங்குகின்றன.
கடந்தவாரம் பார்த்த கேழ்வரகு மாவில் சமைக்கும் கூழ், புட்டு, பணியாரம் போன்றவற்றோடு சிமிலி உருண்டைகள் பெண்ணின் உதிரப்போக்குக் காலம் தொடங்கி கர்ப்ப காலம் வரை பெருநன்மைகள் அளிக்க வல்லவை. உதிரப்போக்குக் காலமும், கர்ப்ப காலமும் இயல்பாக இருந்தாலே குழந்தைப் பேறும் இயற்கையாக அமையும்.
தமிழகத்தில் தானிய வகைகளில் அதிக நீர்ச்செலவின்றி விளைபவற்றில் கேழ்வரகிற்கு அடுத்த நிலையில் இருப்பது கம்பு. நம்முடைய நாட்டுக் கம்பு சிறுதானிய வகையைச் சேர்ந்தது தான். ஆனால் பசுமைப்புரட்சி என்ற சொல்லப்பட்ட 1960 களின் நடுப்பகுதியில் கலப்பின வீர்யக் கம்பு உருவாக்கப்பட்டது. அது பெருந்தானியம் என்று சொல்லுமளவு அளவில் பெரியதாகவும் ஆகிவிட்டது. அதேநேரத்தில் அதன் ஆதாரமான ஆற்றலும் குறைக்கப்பட்டு விட்டது. எனினும் அரிசியைக் காட்டிலும் அதிக சத்துக்கள் மிக்கவை தான் என்பதில் சந்தேகம் இல்லை.
தானியங்களில் புரதச் சத்து நிறைந்துள்ள தானியம் கம்பு மட்டுமே. இதில் சுமார் 12 சதவீதம் புரதம் உள்ளது. போக கால்சியம், நியாமின், இரும்புச் சத்து, விட்டமின் பி' ஆகியவையும் நமது உடலுக்குப் பொருத்தமான வகையில் பொதிந்துள்ளது. உயிர்ப்பண்பு மிகுந்த கம்பு தானியத்தை உண்பதால் புத்துணர்ச்சி மிளிரும்.
போப், 96293 45938
கம்பு தானியத்தைக் கூழாகக் காய்ச்சுவதை விட கெட்டியாக கஞ்சியாகக் காய்ச்சி குழம்பு ஊற்றி உண்பார்கள் விவசாயப் பெருங்குடி உழைக்கும் மக்கள். கம்பங்கஞ்சியைக் காய்ச்சும் போதே மேலேட்டில் எண்ணை மிதக்கும். இந்த கொழுப்புத் தன்மை வாய்ந்த எண்ணை நம்முடைய ரத்தநாளங்களில் படியக்கூடிய கொழுப்பு அல்ல. எளிதில் கரையக்கூடிய (unsaturated) அமிலக் கொழுப்பு என்பதால் நாம் தொடர்ந்து கம்பு தானிய உணவுகளை உட்கொண்டாலும் கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படாது. போக இந்த எண்ணைத் தன்மை நம்முடைய உடலுக்கு பளபளப்பைக் கொடுக்கக் கூடியதாகும். இலகுவான எளிதில் கரையக்கூடிய கொழுப்பு இறுகல் தன்மையற்ற நெகிழ்வுத் தன்மை உடைய பெண்ணுடலுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இன்றைய நவீன சமையல் கலாச்சாரத்தில் கம்பு மாவினை இயந்திரத்தில் அரைத்து வைத்துக் கொண்டு தோசையாக ஊற்றி உண்பதே பரவலாக உள்ளது. தோசை மட்டுமாக அல்லாமல் பல்வேறு விதமான எளிய புதிய பலகார வகைகளுக்கு ஏற்றது தான் கம்பு. அதிலும் குறிப்பாக வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட வல்லது கம்பினை ஆதாரமாகக் கொண்ட உணவு வகைகளைப் பார்ப்போம்.
தொடர்ந்து பார்ப்போம்...