சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம் - சிற்றினம் சேராமை
- சமுதாயத்திற்கு தீங்கு இழைப்பவரைக் கண்டு நாம் ஒதுங்கி வாழ்வதே நன்று.
- சான்றோர்களின் உபதேசம் பெற முன்ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும்.
அதிகாரம்: சிற்றினம் சேராமை
இந்த அதிகாரத்தில்,
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
என்ற குறளில் தொடங்கி
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
சமுதாயத்தில் மேல்மக்கள் என்ற தகுதியை உடையவர்கள் உயிர்க்கொலை செய்யாதவர்களாகவும் ஜீவதயவு உடையவர்களாகவும் இருப்பார்கள்.
தாய்-தந்தை, மனைவியிடம் அன்பு காட்டுவார்கள். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நட்பு பாராட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். பிறர் மனம் வருந்தும்படியான செயல்களையோ, பேச்சுக்களையோ பேச மாட்டார்கள். இவர்கள் சான்றோர்களின் தொடர்பும், சன்மார்க்க சங்கத்தில் அல்லது சாது சங்கங்களின் தொடர்பும் உள்ளவர்களாக இருப்பார்கள்.
திருஅருட்பா, திருவாசகம், திருமந்திரம் போன்ற முற்றுப்பெற்ற ஞானிகளின் நூல்களை இவர்கள் படிப்பார்கள். நண்பர்களுக்கு பாதுகாவலாக இருப்பார்கள். சிறுமை புத்தி உள்ளவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வார்கள்.
ஒரு சிலர் புலால் உண்ணுவார்கள். துஷ்ட தேவதைகளுக்கு உயிர்பலி கொடுப்பார்கள். வரம்புக்குட்படாத பேச்சுக்களை பேசுவார்கள். அவர்கள் சொல்லும், செயலும் தான்தோன்றித் தனமாகவே இருக்கும். பாவ, புண்ணியத்தைப் பார்க்காமல் பிறருக்கு தீங்கு இழைப்பதையே பெருமையாக நினைத்து ஆணவமாகவே செயல்படுவார்கள். இத்தகையவர்களை நீச்சர்கள் எனக் கூறுவதுண்டு. இவர்களையே இந்த அதிகாரத்தில் சிற்றினத்தார் என்று வள்ளுவர் கூறுகின்றார். குணப்பண்பு இல்லாமல் பாவத்தை மட்டுமே செய்கின்ற மக்களிடம் ஆன்மீகவாதிகள், மேல்மக்கள், ஜென்மத்தை கடைத்தேற்றுபவர்கள் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் ஆசான் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.
சமுதாயத்திற்கு தீங்கு இழைப்பவரைக் கண்டு நாம் ஒதுங்கி வாழ்வதே நன்று. இல்லையேல் அவர்களின் எண்ண அலைகள் நம்மை பாதிக்கும். அதனால் நம்முடைய அறிவும் குழப்பமடையும்.
பொருள் பற்று உள்ளவர்கள், நெறி தவறி பொருள் சேர்ப்பவர்கள், சாவை பற்றி சிந்திக்காமல் மனம்போன போக்கில் வாழ்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்து நரகத்தை அனுபவிப்பார்கள்.
உடலாலும் உள்ளத்தாலும், செயலாலும் பிறருக்குத் தீமை செய்யாதிருக்க வேண்டும். உலகநடையில் இருந்தாலும் தலைவன் மீது பக்தி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
உடம்பில் காமம் இருக்கும் வரை மனம் தூய்மை அடையாது, விகாரமாகவே இருக்கும். இது இருள் தேகம், மருள்தேகம், நச்சுதேகம், விஷதேகம். எனவே இந்த தேகத்தின் குண இயல்பை அறிய வேண்டும்.
தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
இந்த தேகம் மனிதனுக்கு நரகத்தை உண்டாக்கும் என அறிந்து அதில் உள்ள களிம்பை, மாசை, குற்றத்தை நீக்க வேண்டும். அதனை நீக்கி காமத்தை வென்றவர்கள் ஞானிகள். அவர்களின் திருவடியைப் பற்றினால் ஒழிய தேகக்குற்றத்தை நீக்க முடியாது. இதற்கு உபாயம் ஒன்று தியானம், மற்றொன்று புண்ணியம்.
புண்ணியவான்களின் திருவடியைப் பற்றினால் அன்றி புண்ணியம் செய்ய முடியாது. பூஜை செய்ய செய்ய ஜீவதயவு உண்டாகும். ஜீவதயவு இல்லையென்றால் அருள்பெற முடியாது. அருளில்லை என்றால் ஜென்மத்தை கடைத்தேற்ற முடியாது.
கீழ்த்தரமான எண்ணமும், செயலும் உள்ளவர்களிடம் சான்றோர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள். இவர்களிடம் சேராததையே சிற்றினம் சேராமை என்று கூறுவார்கள்.
தாழ்ந்த புத்தி உள்ளவர்களுக்கு சான்றோர்களின் உபதேசம் கிடைக்காது, கேட்டாலும் அவர்களுக்கு புரியாது. அவர்களுக்கு எந்த விதத்திலும் பலிக்காது.
சான்றோர்களின் உபதேசம் பெற முன்ஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும். முற்றுப்பெற்ற முனிவர்களின் திருவடியைப் பற்றினால் சான்றோர்களின் உபதேசம் புரியும். சிறுமை புத்தி உள்ளவர்களுக்கு எதுவுமே புரியாது.
எந்த இயற்கை இந்த உடம்பை கொடுத்ததோ அந்த இயற்கையின் துணைக்கொண்டு பூஜை, புண்ணியம் செய்து இந்த காமதேகத்தை வெல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் திருவருள் துணை வேண்டும்.
மழை பெய்யும்போது மழைநீர் தூய்மையாகவே இருக்கும். ஆனால் அந்த நீர் எந்த நிலத்தில் விழுகின்றதோ அந்த இடத்தின் தன்மை அல்லது அந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறும். அதுபோல் எந்த இடத்தைச் சார்ந்து நாம் இருக்கின்றோமோ நமது செயல்பாடுகளும் அவ்வாறே அமையும். எனவே சான்றோர்களைச் சார்ந்து வாழ்வது நமக்கு சிறப்பறிவைத் தரும்.
மனம் எந்த அளவிற்கு செம்மையாக உள்ளதோ அந்த அளவுக்கு அங்கே பொது உணர்வு இருக்கும். ஞானிகளை வணங்கினால் பொது உணர்வு, சான்றோர் தொடர்பு, ஆன்மீக நாட்டம் ஏற்படும்.
மனம் தூய்மையாக இருந்தால் செய்கின்ற செயலில் தூய்மை இருக்கும். பொதுசேவையில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று சுயநலத்திற்கோ, சுயவிளம்பரத்திற்கோ பயன்படுத்துதல் கூடாது. அத்தகையவர்கள் தீராத பழியை ஏற்பார்கள்.
சிற்றினம் சேர்ந்தால் வினை சூழும். ஞானிகளின் திருவடியைப்பற்றி சான்றோர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் நல்ல வாழ்க்கை, நிறைந்த செல்வம், நல்ல நட்பு, நல்ல உறவு, பலரும் கரம் கூப்பி நம்மை நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என்று கூறுகின்ற வாழ்க்கை உண்டாகும்.
பண்புள்ள மக்கள் தொடர்பு இருந்தால் நல்ல செயலை செய்யலாம். வஞ்சகர்கள் தொடர்பு இருந்தால் தீமை செய்து பாவியாகலாம்.
முற்றுப் பெற்றவர்களின் திருவடியைப்பற்றி பூஜை செய்வோம், புண்ணியம் செய்வோம், ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வோம்.