சிறப்புக் கட்டுரைகள்

ஆலயத்தை வலம் வந்த எருமை!
- பக்தர்களும் கோவிலைச் சேர்ந்தவர்களும் எருமைக்குத் தீனி கொடுத்து வந்தனர்.
- மறுநாள் காலை ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், எருமையைக் காணாது கவலையுற்றனர்.
எருமை ஒன்று திருச்செந்தூர் கோவிலை வலம் வந்துகொண்டே இருந்தது. அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பிறகு கோவில் வாசலில் படுத்துக்கொண்டது. இப்படி மூன்று நாள் இந்த எருமை தன் முருக பக்தியை வெளிப்படுத்தியது.
வெளியூரில் இருந்து சொந்தக்காரன் அந்த எருமை மாட்டை தேடி வந்தான். முற்பிறப்பின் ஞான முதிர்ச்சி இது!' என்று பக்தர்கள் பேசிக்கொண்டது அவன் காதில் விழுந்தது. இதனால் அவன் தன் எருமைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்த வழியே திரும்பிப் போய்விட்டான்.
பக்தர்களும் கோவிலைச் சேர்ந்தவர்களும் எருமைக்குத் தீனி கொடுத்து வந்தனர். அது கண்ட தெய்வ நம்பிக்கை இல்லாத ஒருவன் கடும் கோபம் கொண்டான். அவன் எருமைக்குத் தீனி கொடுப்பதும், இதைப் போற்றுவதும் மடத்தனமாக உள்ளது என்று கேலி செய்தான். அதோடு அவன் நிற்கவில்லை.
தன்னைப் போன்ற சிலரைக் கலந்து ஆலோசித்தான். ஒருநாள், நள்ளிரவுக்குப் பின் இவனும் இவனுடைய நண்பர்களும் ஆலய வாசலில் படுத்திருந்த எருமையை இழுத்துக்கொண்டு போய்ப் படகில் ஏற்றி, அந்தப் படகைச் செலுத்திக்கொண்டே போய் நடுக் கடலில் அந்த எருமையைத் தள்ளி விட்டார்கள்.
மறுநாள் காலை ஆலயத்துக்கு வந்த பக்தர்கள், எருமையைக் காணாது கவலையுற்றனர். 'அந்த எருமையை பார்த்தீர்களா? என்று பலரையும் விசாரித்தனர். அப்போது கடவுள் மீது நம்பிக்கை இல்லாத அந்த நபர் கேலியும், கிண்டலும் செய்தார். உங்கள் முருகனால் இதை கண்டிக்க முடியாதா என்று கேலி செய்தார்.
அப்போது அந்த எருமை தன் கண் கட்டு, வாய்க் கட்டுகளுடன் கடலலைகளில் முங்கிக் கொண்டே கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது. 'வா வா' என்று அன்பர்கள் ஆர்ப்பாரித்தனர். எருமை கரையேறி வந்து கோவில் வாசலை அடைந்தது.
கட்டுகளை அவிழ்த்தார்கள். தீனி வைத்தார்கள். பழையபடி எருமை ஆலயத்தை வலம் வரத்தொடங்கியது. அன்பர்கள், 'முருகா! முருகா!' என்று கோஷமிட்டனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இந்த அற்புதத்தால் மனம் மாறினான். மனம் திருந்தி முருக பக்தனாகி விட்டான். அந்த எருமை அடியேனுக்குக் குரு!' என்று சொல்லிக் கொண்டே கோவிலை வலம் வந்தான்.
ஆதித்த நாடாருக்கு கிடைத்த அருள்
திருச்செந்தூர் அருகே காயாமொழி என்ற சிறிய கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை தலைமையிடமாக கொண்டு ஆதித்த நாடார் வம்சத்தினர் குறுநில மன்னராக ஆட்சி செய்து வந்தனர். ஆதித்த நாடார் வம்சத்தினருக்கு குல தெய்வம் திருச்செந்தூர் முருகன் ஆவார். திருச்செந்தூர் முருகன் மீது ஆதித்த நாடார் மிகுந்த பக்தியும், பற்றும் வைத்திருந்தார்.
திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக ஊர் நடுவில் உள்ள சிவகொழுந்தீசுவரர் கோவில் முன் மண்டபம் ஒன்றை அவர் காயாமொழி கிராம மக்கள் உதவியுடன் நிறுவினார். இன்று அந்த மண்டபத்தில் துணிக்கடைகள் நிறைந்துள்ளன. மண்டபத்தின் நடுவே நீர்மோர்ப்பந்தல் ஒன்றையும் நிறுவி பக்தர்கள் தாகம் தணிக்க செய்தார்.
1560களில் திருச்செந்தூர் முருகன் ஆலய தேர் பழுதுபட்டது. அந்த தேரை சரி செய்வதற்காக முருகப்பெருமான் ஆதித்த நாடார் கனவில் தோன்றி உத்தரவு பிறப்பித்தார். தேரில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கிக் கொடுக்குமாறு கூறினார். அந்த ஆண்டு ஆதித்த நாடார் வாழ்ந்த காயாமொழியைச் சுற்றிலும் உள்ள அறுவடை செய்த வயல்களில் மீண்டும் துளிர்விட்டு என்றும் இல்லாத அளவுக்கு எள் விளைந்தது. இது திருச்செந்தூர் முருகனின் திருவருளே என்று காயாமொழி மக்கள் வியந்தனர். அந்த எள்ளை விற்று அவர்கள் புதிய தேரினை செய்து கொடுத்தனர். திருச்செந்தூர் முருகனை ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்களில் பத்தாம் நாள் அந்த பெரிய தேரில் எழுந்தருளச் செய்தனர்.
இதைக்கண்டு மகிழ்ந்த திருச்செந்தூர் முருகன் ஆதித்த நாடார் கனவில் மீண்டும் தோன்றி "உன்னையும் உன் சந்ததியினரையும் என் வலது கண்போல் பார்த்துக்கொள்வேன். உன் சந்ததியினர் செல்வம் ஒரு போதும் வற்றாது" என்று அருளினார். வலது கண் என்பது சூரியனை குறிக்கும். சூரியனுக்கு ஆதித்தன் என்றும் ஒரு பெயர் உண்டு.
இன்றும் திருச்செந்தூர் தேர் வடம் பிடிக்கும் உரிமை ஆதித்த நாடார் வழிவந்தோரிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுந்தரிக்கு அருளிய முருகன்!
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்பவர்கள் தேரடியை கடந்து மண்டபம் வழியாக தூண்டு கை விநாயகர் கோவில் வழியே நடந்து செல்வதே முறையாகும். தூண்டு கை விநாயகர் ஆலயம் சென்றதும் பக்தர்கள் தேங்காய் வாங்கி தலையை சுற்றி உடைத்து விட்டு செல்வார்கள். அதற்கு முன்பு அந்த சிறிய விநாயகர் ஆலயத்துக்குள் சென்று வழிபட வேண்டும்.
அந்த விநாயகர் ஆலயத்துக்குள் அர்த்த மண்டபத்தில் அற்புத சிற்பம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த சிற்பத்தில் வேல்தாங்கிய முருகன் மற்றும் நடுவில் கூடையோடு கூடிய ஒரு பெண் இருப்பதை காணலாம். சிற்பத்தின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் கோவிலில் பணிபுரிந்த சிவாச்சாரியார்கள் அந்த ஊருக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ள சண்முகபுரம் என்னும் ஊரில் குடியிருந்தனர். திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான பணிப்பெண்கள் பணிபுரிந்து வந்தனர்.
அவர்கள் சண்முகபுரம் சென்று சிவாச்சாரியார்களிடம் முருகன் கோவில் பூசைக்குரிய பொருள்களை வாங்கி வருவது வழக்கம். ஒரு நாள் பணிப்பெண்களில் ஒருவரான சுந்தரி என்ற பெண் சண்முகபுரம் சென்று பூஜைப் பொருள்களை பெற்றுக்கொண்டு திருச்செந்தூரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
வரும் வழியில் அவளைப் பாம்பு கடித்தது. அவள் அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள். முருகப்பெருமான் நினைவிலே உயிர் பிரிந்தது.
இதற்கிடையே திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் பூஜைப் பொருள்கள் வந்து சேராததால் வருந்தினார். தூண்டு கை விநாயகர் கோவில் அருகே சென்று தேடினார். அப்போது அவர் முன் மயில் ஒன்று பறந்து வந்தது. தன்னை பின் தொடர்ந்து வருமாறு வழி காட்டியது. சண்முகபுரம் செல்லும் வழியில் ஓரிடத்தில் மயில் நின்றது.
அர்ச்சகர் அங்கே பணிப்பெண் சுந்தரி மயங்கி கிடப்பதைக் கண்டார். அவளை பாம்பு கடித்து இருப்பதை உணர்ந்தார். அப்போது திருச்செந்தூர் முருகன் அவரது கனவில் தோன்றி தாமே அவளுக்கு இவ்வாறு மோட்சம் அளித்ததாக கூறினார். அந்த இடத்தில் வழிபடுபவர்களுக்கு முக்தி அருள்வதாகவும் தெரிவித்தார்.
அந்த இடம் இன்றும் "மயில்கல்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்செந்தூர் ஆலயத்துக்கு காவடி கட்டி நடைபயணமாக வரும் பக்தர்கள் இன்றும் அந்த இடத்தில் வழிபாடு நடத்தி விட்டே காவடி எடுத்து செல்வார்கள்.
மயிலை அனுப்பி அர்ச்சகருக்கு பணிப்பெண் சுந்தரி விழுந்து கிடந்த இடத்தை தூண்டிக் காட்டியதால் தான் அந்த இடத்து விநாயகர் ஆலயத்துக்குள் இந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த தடவை நீங்கள் திருச்செந்தூர் ஆலயத்துக்கு செல்லும் போது தூண்டு கை ஆலயத்து விநாயகரை வழிபட்டுவிட்டு சிவாச்சாரியாரிடம் சுந்தரி சிலை பற்றி கேட்டால் அவர் அதை உங்களுக்கு காண்பிப்பார்.
இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.