சிறப்புக் கட்டுரைகள்

பித்ருக்கள் தோஷம் யாரை பாதிக்கும்
- பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வளப்படுத்த குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் வழிபாடு அவசியம்.
- ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது.
ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கியஸ்தானமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது குலதெய்வ அனுக்கிரகம், தெய்வ அனுகூலம் ஆகியவற்றை கூறும் இடமாகும். பாக்கிய ஸ்தானம் என்பது பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பற்றி கூறும் ஸ்தானமாகும். ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தை பலப்படுத்துவது அமாவாசை மட்டும் பவுர்ணமி வழிபாடாகும்.
அதாவது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வளப்படுத்த குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் வழிபாடு அவசியம். பாக்கிய ஸ்தானத்தை வலிமைப்படுத்த முன்னோர்களின் நல்லாசிகள் அவசியம். அறிவியல் வளர்ந்து விட்ட இந்த நவ நாகரிக உலகத்தில் பித்ரு தோஷம் என்ற ஒன்று உண்டா? குலதெய்வ வழிபாடு உண்மையா? என்று பலரும் சிந்திக்க துவங்கியுள்ளார்கள்.
இன்று பல யூடியூப் வீடியோக்களில் போடப்படும் கமெண்ட்களில் இந்த விமர்சனம் அதிகமாக வருகிறது. இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியாதவை தவிர உலகில் கண்டுபிடிக்காத விஷயங்களே கிடையாது. பல விந்தைகளையும் வினோதத்தையும் கண்டுபிடித்த மனிதன் ஏன் இறந்தவனை பிழைக்க வைக்க முடியவில்லை. இந்த ஒரு கேள்வியே மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இந்த உலகத்தில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. அந்த சக்தியை உணர முடியும் ஆனால் காண முடியாது. நம்பாதவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
ஆனால் நமது புலன்களால் உணரக்கூடிய அந்த சக்திகளை வழிபாடு செய்தால் மட்டுமே மனித குலத்தின் பாவச்சுமைகள் குறையும்.
அதே நேரத்தில் ஒரு மனிதன் பூமியில் பிறப்பதற்கு காரணம் தோஷங்களும் சாபங்களுமாகும். தோஷங்களும் சாபங்களும் இல்லாமல் ஒரு மனிதன் பிறக்க முடியாது. மனிதன் மட்டுமல்ல ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள மனிதன் வரை அனைவரின் பிறப்பிற்கும் ஒரு தோஷமே காரணமாக இருக்க முடியும். முன்வினை தோஷத்தை களையவே இப்பிறவி உருவாகியுள்ளது.
இப்பிறவியில் செய்யும் நல்ல தீய செயல்களுக்கு ஏற்ப கர்மாக்களின் பாதிப்பு குறையும். ஒரு ஜாதகத்தில் உள்ள எத்தகைய தோஷமாக இருந்தாலும் அது எல்லா காலத்திலும் வேலை செய்யாது குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே வேலை செய்யும். அதனால் எந்த காலத்தில் எந்த தோஷம் பாதிக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால் அந்த பாதிப்புகளில் இருந்து மீளக்கூடிய வழிபாடுகளை கடைபிடிக்க முடியும். ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த தோஷமாக இருந்தாலும் லக்னம் லக்னாதிபதியுடன் சம்பந்தப்படாத எந்த தோஷமும் ஜாதகரை தாக்காது பாதிக்காது. கிரக தோஷங்களை வெளிப்படுத்தக்கூடிய தசா புத்தி வராத காலங்களிலும் பாதிப்பு வராது.
ஐ.ஆனந்தி
ஒருவர் கொடும் பாவியாக கண்ணுக்கு எதிரே பல கொடூர செயல்களை செய்பவராக இருப்பார். அணு அளவு கஷ்டம் கூட அவரை தாக்காது. தீய பலன்கள் நடக்காது. ஒருவர் மிக நல்லவராக இருப்பார். தான தர்மங்கள் செய்து புண்ணிய பலன்கள் தேடி கொண்டிருப்பார். ஆனால் அவர் அனுபவிக்காத கஷ்டங்களே இருக்காது. ஒருவர் புண்ணிய காரியங்கள் பல செய்து தீய பலன்களை அனுபவிக்கிறார் என்றால் வெகுவிரைவில் கடவுள் அவருக்கு ஒரு திருப்புமுனையான சந்தர்ப்பங்களையும் நல்ல வளமான பலன்களையும் வாழ்க்கையில் வழங்கப்போகிறார் என்று பொருள்.
தீமைகள் மற்றும் தவறு செய்பவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை எனில் வினைகளை அனுபவிக்கக்கூடிய காலம் வரவில்லை என்று தான் பொருள். தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது. தண்டனைக்காலம் தள்ளி போகிறது.
அதேபோல் நிகழ்காலத்தில் ஒருவர் தான் செய்யும் தான தர்மங்களாலும் குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ள முடியும். காலச் சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும், அந்த வாழ்க்கையின் பிடியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார்கள். அத்தகைய வழிபாட்டு முறையே ஆடி அமாவாசை வழிபாடாகும்.
பித்ரு தோஷம் ஏன் உருவாகுகிறது
ஒரு குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பித்ருக்கள் ஆவார்கள். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்ப முன்னோர்களின் மரபணுவால் பிறப்பெடுத்த காரணத்தினால் பித்ருக்களுக்கு கடன்பட்டுள்ளோம். அவர்களுக்குரிய சடங்கு, வழிபாட்டு முறைகள் மூலம் முன்னோர்களைத் திருப்தியடையச் செய்ய வேண்டும். பித்ருக்கள் வழிபாடானது பித்ரு லோகத்தில் முன்னோர்கள் இன்பமாக வாழ்வதற்கு உதவுகிறது.
வழிபாடு செய்யாத பட்சத்தில் முன்னோர்கள் சாபத்தினால் குடும்ப விருத்தி தடைப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணம் செய்யாதவர்கள், வாழும் காலத்தில் பெற்றோர்களின் சாபத்தை வாங்குவது போன்றவைகள் ஏற்படுகிறது. இதனால் 7 தலைமுறைகள் பாதிக்கப்படும். பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால் பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன. அவரவர் ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம் பூஜை, யாகம் செய்ய வேண்டும். ஒருவருக்கு பித்ருக்கள் சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை திதி மற்றும் முன்னோர் வழிபாட்டை மனதால் ஒன்றாமல் கடமைக்காகச் செய்வது, அல்லது முன்னோர் வழிபாடே செய்யாமல் இருப்பது.
என் பாட்டன் எதுவும் சேர்த்து வைக்க வில்லை என இறந்தவர்களை பழித்துப் பேசுவது...
வாழும் காலத்தில் வயதான பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் அவர்களை உதாசீனம் செய்வது...
ஒருவர் தன் உயிரைத் தானே முடித்துக் கொள்ளும் வகையில் அவரது ஆன்மாவைத் துன்புறுத்துதல் இறந்தவர்களின் உடலை முறையாக அடக்கம் செய்யாத குற்றம்...
இறந்தவரின் உடலுக்குரிய மரியாதையைச் செய்யத்தவறுவது...
இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு அவரின் தீய குணங்களை விமர்சிப்பது ...
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் முன்பு பங்காளிகள் சண்டையிடுவது...
இறந்த ரத்த பந்த உறவுகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் இருப்பது அல்லது இறுதிச் சடங்கிற்கு உதவாமல் இருப்பது அல்லது உரிய காரியங்களை செய்யத் தவறுவது... ( மொட்டையடித்தல் போன்றவை)
ஒரு குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்தால் அந்த இறப்பு நடந்த இடத்தை சுற்றி சுமார் 100 அடி தூரம் உள்ளவர்களுக்கு தீட்டு ஏற்படும். இதை உணராமல் துக்கம் நடந்த வீட்டின் அருகில் உள்ளவர்கள் சமைப்பது, சாப்பிடுவது, வீட்டில் பூஜை செய்வது, இல்லற இன்பத்தில் ஈடுபடுவது போன்றவைகள் பிரேத சாபத்தை அதிகரிக்கும்.
மேலும் காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது போன்ற காரணங்களால் பித்ரு தோஷங்கள் உருவாகும்.
பித்ருக்கள் தோஷம் வெளிப்படும் காலம் ஜனன கால சூரியன், சந்திரன், சனி பகவானை கோட்ச்சார ராகு, கேது சந்திக்கும் காலத்திலும் ஜனன கால ராகு மற்றும் கேதுவை கோட்ச்சார சூரியன், சந்திரன், சனி சம்பந்தம் பெறும் காலங்களில்பித்ரு தோஷம் மிகுதியாக வெளிப்படும். மேலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களிலும், கீழ்கண்ட தசா புத்திகளிலும் பாதிப்பு வெளிப்படும்.
சூரிய தசை ராகு புத்தி,
ராகு தசை சூரிய புத்தி,
சனி திசை ராகு புத்தி,
ராகு தசை சனி புத்தி,
சனி தசை கேது புத்தி,
கேது தசை சனி புத்தி,
கேது தசை ராகு புத்தி,
சந்திர தசை ராகு புத்தி,
ராகு தசை சந்திர புத்தி,
சந்திர தசை கேது புக்தி,
கேது திசை சந்திர புத்தி,
பித்ருக்கள் தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை வழிபாடு
தமிழ் மாதங்களை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தஷ்ணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.
தஷ்ணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.
இவ்வளவு புண்ணிய பலன் தரும் ஆடி அமாவாசை விசுவாவசு ஆண்டு ஆடி மாதம் 8ம் நாள் (24.7.2025) வியாழக்கிழமை வருகிறது.
அமாவாசையன்று சூரிய உதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணற்றிலோ பித்ருக்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு பூஜை செய்து அந்தணர்களுக்கு தானம் தரும் பொருட்களில் பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகள் இருக்க வேண்டும். அதற்கு பிறகு வீட்டில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட வேண்டும். அன்று ஏழைகளுக்கு அன்னதானம்.
ஆடைகள் தானம் வழங்கலாம். நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், பெண்கள் ஆதரவற்ற முதியோருக்கு உணவு தானம் வழங்கி வீட்டில் அல்லது சிவன் கோவிலிலோ ஆத்மார்த்த வழிபாடு செய்தாலே பலன் கிடைக்கும். பித்ரு தோஷம் இல்லாமல் மனித குலம் பிறப்பெடுக்க முடியாது. எனவே மனிதர்களாய் பிறந்த அனைவரும் தனது மரபணுவான முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்தக்கூடிய நாளான ஆடி அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டு இன்பமாக வாழ வாழ்த்துகிறேன்.
செல்: 98652 20406