சிறப்புக் கட்டுரைகள்

பெண்கள் சொல்ல தயங்கும் கருப்பை குடலிறக்கம்
- நமது உடலுக்குள் உள்ள உறுப்புகளை பிரிக்கும் தசைகள் 3 இடங்களில் இருக்கிறது.
- நமது மேல் வயிற்றில் உள்ள பகுதியிலோ அல்லது அடிவயிற்றின் வால்வு பகுதியிலோ தளர்வாகும்போது குடலிறக்கம் வரும்.
பெண்களை பாதிக்கின்ற ஒருவகை பிரச்சினை ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஆகும். பெண்கள் பலரும் தங்களுக்கு குடலிறக்கத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டர்களை பார்த்து விடுவார்கள். தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை டாக்டர்களிடம் எடுத்து சொல்வார்கள். டாக்டர், எனக்கு தொப்புளில் லேசாக வீக்கம் போல காணப்படுகிறது. சில நேரங்களில் இருமும்போது வீங்கிய இடத்தில் வலி ஏற்படுகிறது என்பார்கள்.
ஆனால் குடலிறக்கத்தில் ஒரே ஒரு நிலையை மட்டும் மருத்துவர்களிடம் சொல்ல பெண்கள் தயக்கம் அடைவார்கள். அதுபற்றி மருத்துவர்களிடம் எடுத்து சொல்ல கூச்சப்படுவார்கள். அதுதான் கருப்பை குடலிறக்கம். இந்த குடலிறக்கமானது பெல்விக் புளோர் (இடுப்புத்தள தசை) என்று அழைக்கப்படும், இடுப்புக்கு கீழே உள்ள அடிப்பகுதியில் ஏற்படுகிறது.
உறுப்புகளை தாங்கி பிடிப்பதில் இடுப்புத்தள தசையின் பங்கு:
நமது உடலுக்குள் உள்ள உறுப்புகளை பிரிக்கும் தசைகள் 3 இடங்களில் இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் டயாப்ரம் என்றும் தமிழில் உதரவிதானம் என்றும் அழைப்பார்கள். இது நமது உடலில் ஒரு பகுதியை இன்னொரு பகுதியில் இருந்து பிரிக்கும் முக்கிய தசை ஆகும்.
ஒரு டயாப்ரம் சுவாச பகுதி மற்றும் வயிற்று பகுதியை பிரிக்கிறது. நமது மூளையில் ஒரு டயாப்ரம் இருக்கிறது. அதேபோல் இடுப்புக்கு கீழே உள்ள பகுதியில் ஒரு டயாப்ரம் இருக்கிறது. இந்த டயாப்ரம் இருக்கும் பகுதியையே 'இடுப்புத்தள தசை' என்று சொல்கிறோம். இந்த 'இடுப்புத்தள தசை' மிகவும் முக்கியமான ஒன்று. நமது இடுப்பு பகுதியில் உள்ள உறுப்புகளை தாங்கி பிடிப்பதில் இந்த 'இடுப்புத்தள தசை' முக்கியமான பங்கை வகிக்கிறது.
ஆனால் சில பெண்களுக்கு இந்த 'இடுப்புத்தள தசை' தளர்வாகும். இடுப்புக்கு அடிப்பகுதியில் உள்ள இந்த 'இடுப்புத்தள தசை' தளர்வாகும் போது உட்புறத்தில் கருப்பை மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்புகள் குடலிறக்கம் அடையும். அதாவது சில உறுப்புகள் கீழே இறங்கிவிடும். இதுதான் கருப்பை குடலிறக்கம். இந்த கருப்பை குடலிறக்கத்தை பற்றி வெளியே சொல்வதற்குதான் பலரும் தயங்குவார்கள். ஏனென்றால் இதன் மூலம் ஏற்படுகின்ற அறிகுறிகள் என்பது பெண்களால் வெளியில் சொல்ல முடியாத வகையில் இருக்கும்.
பெல்விக் புளோர் என்பது இடுப்பின் அடிப்பகுதியை பிரிக்கின்ற முக்கியமான ஒரு டயாப்ரம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பகுதியில் முக்கியமான உறுப்புகள் என்ன இருக்கிறது என்று பார்த்தால், இடுப்பு தளத்துடன் இணைந்த தசைகள், அதன் தொடர்புடைய சவ்வுகள் இருக்கிறது. மேலும் அந்த பகுதியை இறுக்கமாக வைத்துக்கொள்வதற்காக சில தசைநார்களும் இருக்கிறது.
முக்கியமான தசைகளால் உருவாக்கப்பட்ட இடுப்புத்தள தசை:
இந்த 'இடுப்புத்தள தசை' எந்த வகையில் முக்கியமானது என்றால், இந்த பகுதியில் தான் ஒரு பெண்ணின் பெரினியம் இருக்கிறது. இந்த பெரினியம் என்பது பெண்களின் யோனி திறக்கும் பகுதிக்கும், ஆசனவாய்க்கும் இடையே உள்ள பகுதியை குறிக்கும். இது 'இடுப்புத்தள தசை'யின் அடிப்பகுதியாகும். சிறுநீர் வெளிவருகிற பாதை, பிரசவம் ஆகிற பாதை, மலம் வெளியேறும் பாதை ஆகிய 3 பாதைகளின் வெளித்துவாரமும் மேல் பகுதியான பெரினியம் பகுதியில் இருந்து தான் பிரிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் உள்ள 'இடுப்புத்தள தசை' என்பது முக்கியமான தசைகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடுப்புத்தள தசை முக்கியமாக உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியது. சிறுநீரானது, சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்க்குழாய் வழியாக வெளிவரும். சிறுநீர்ப்பையில் இருந்து வெளிவருகின்ற சிறுநீர்க்குழாய் வெளிப்பக்கம் திறக்கும் இடத்தின் மேலே உள்ள பகுதியை இடுப்புத்தள தசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதன் வழியாகத்தான் சிறுநீர் வந்து வெளியே போகும்.
அதேபோல் பெண்ணுறுப்பான கர்ப்பப்பை, கர்ப்பவாய் ஆகியவை யோனிப்பகுதியில் திறக்கிறது. இந்த யோனிப்பகுதி திறந்து வெளிவருகிற பகுதியும் இந்த இடுப்புத்தள தசையின் பிடியில் தான் உள்ளது. இந்த யோனிப்பகுதி என்பது ஒரு குழாய். அந்த குழாய் கர்ப்பப்பையின் உள்ளே இருந்து வரும். அந்த குழாயில் திறப்பு ஏற்பட்டு, அந்த குழாய் தான் சினைப்பையில் வெளிப்பக்கம் வந்து திறக்கிறது.
அதேபோல் குடல் பகுதியை எடுத்துக்கொண்டால், நாம் சாப்பிட்ட பிறகு செரிமானமான உணவு குடல் பகுதிக்கு சென்று கழிவாக மாறுகிறது. அந்த கழிவானது வெளிப்பகுதியில் ஆசனக்குழாய் வழியாக வந்து மலவாய் வழியாக வெளியே வரும். இந்த வெளிப்பகுதியில் இருந்து இடுப்பின் அடிப்பகுதியை இடுப்புத்தள தசை என்னும் இந்த கட்டமைப்பு தான் பிரிக்கிறது.
இந்த இடுப்புத்தள தசை தளர்வாகும் போதுதான் கருப்பை குடலிறக்கம் ஏற்படுகிறது. அதாவது உள்ளே உள்ள உறுப்புகள் அதனுடைய தடுப்பு சுவருக்கு கீழே வெளிவருகிறது. இடுப்புத்தள தசை தளர்வு காரணமாகத்தான் இந்த உறுப்புகள் கீழே இறங்குகிறது.
வித்தியாசமான அறிகுறிகளுடன் கூடிய குடலிறக்கம்:
நமது மேல் வயிற்றில் உள்ள பகுதியிலோ அல்லது அடிவயிற்றின் வால்வு பகுதியிலோ தளர்வாகும் போது குடலிறக்கம் வரும். அது வழக்கமான தொப்புளை சுற்றியுள்ள குடலிறக்கமாக இருக்கலாம். அப்படி இருந்தால் தொப்புளுக்கு அருகில் வீக்கம் ஏற்படும். சில நேரங்களில் இன்சிஷனல் குடலிறக்கம் ஏற்படும். இந்த குடலிறக்க மானது ஏற்கனவே சிசேரியனுக்காக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கீறல் வடுவானது தளர்வடையும் நிலையில், அதன் மூலம் ஏற்படலாம்.
இதேபோல் தான் இந்த இடுப்புத்தள தசை தளர்வானால் இந்த உறுப்புகள் அடியிறக்கம் அடையும். இது ரொம்பவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நாம் சிறுநீர் கழிக்க செல்லும் முன்பு அதனை கட்டுப்படுத்துகிறோம். உணவுக்கழிவு செல்வதை கட்டுப்படுத்துகின்ற மெக்கானிசமும் நமது உடலில் இருக்கிறது.
அதே மாதிரி பெண்களுடைய பெண்ணுறுப்பான சினைப்பை, யோனிப்பகுதி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான சுருங்கி விரிகின்ற தன்மை எல்லாமே இந்த இடுப்புத்தள தசையின் வலிமை, திறன் ஆகியவை சார்ந்த ஒரு விஷய மாகும். இந்த இறுக்கம் தளர்வா கும் போது, இந்த பகுதியில் உள்ள உறுப்புகள் இறக்கம் அடையும். இதைத்தான் சைலன்ட் குடலிறக்கம் என்று சொல்கிறோம். இதைப்பற்றி யாரும் சொல்லவே மாட்டார்கள். ஏனென்றால் இதன் அறிகுறிகள் ரொம்ப வித்தியாசமாக இருக்கும்.
சைலன்ட் குடலிறக்கம் ஏற்பட்டால் என்ன அறிகுறிகள் வரலாம் என்று பார்த்தால், சில பெண்கள் இருமும் போதும், தும்மும் போதும் கொஞ்சம் சிறுநீர் கசிகிறது என்பார்கள். இதுமாதிரி சிறுநீர்க்குழாய் தளர்வாகும்போது சிறுநீரை கட்டுப்படுத்துகின்ற தன்மை குறைவாகும்.
இன்னும் சிலர் டாக்டர் எனக்கு சில நேரம் வாயு வெளியேறுவது கூட அந்த மாதிரியான உறுப்புகள் வழியாக போகிறது என்பார்கள். அதாவது யோனி வழியாக வெளியேறுகிறது என்பதைத்தான் அவர்கள் அப்படி சொல்வார்கள். சில நேரங்களில் உணவுக்கழிவு வெளியேறுவதை கட்டுப்படுத்தும் மெக்கானிசம் கூட இல்லாமல் இருக்கும். இவை அனைத்தையுமே பாதுகாப்பாக வைத்திருப்பது இடுப்புத்தள தசைதான்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
இளம் வயது பெண்களுக்கும் கருப்பை குடலிறக்கம்:
இந்த இடுப்புத்தள தசை தளர்வாவதால் வயிற்றின் உட்பகுதியில் குடலிறக்கம் ஏற்படலாம். இந்த குடலிறக்கத்தின் போது கர்ப்பப்பை கீழே இறங்கிவிடும், சிறு நீர்க்குழாய் இறங்கிவிடும். மேலும் இதெல்லாம் வயதானவர்களுக்கு வரும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது தவறு. இந்த வகையான கர்ப்பப்பை குடலிறக்கம் இளம் வயதினருக்கும் வருகிறது. 40 வயதுக்கு கீழே உள்ள பெண்ணுக்கு வாரத்தில் ஒருவருக்கு இந்த பிரச்சினை வருவதை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். இது ரொம்பவும் ஆச்சரியமான விஷயம்.
உலக அளவில் 2019-ம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. வளர்ந்த நாடான சுவீடனில் செய்த ஆய்விலேயே கிட்டத்தட்ட 40 வயதுக்கு கீழே உள்ள பெண்களில் 2 முதல் 10 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பை குடலிறக்கம் ஏற்படுகிறது. பிரசவம் ஆகும்போது தசைகள் தளர்வாவதால் தான், இது மாதிரியான குடலிறக்கம் வரும் என்று நிறைய பெண்கள் நினைப்பதுண்டு. டாக்டர் எனக்கு முதல் பிரசவத்துக்கு பிறகு யோனி ரொம்பவும் தளர்வாகிவிட்டது. சிறுநீரை கட்டுப்படுத்தும் தன்மை குறைந்து விட்டது என்கிற அறிகுறிகளுடன் பிரசவம் ஆன பெண்கள் சிகிச்சைக்கு வருவார்கள்.
ஆனால் இளம் வயது பெண்களுக்கு கூட இது வரும் என்பதுதான் முக்கியமான விஷயம். என்னிடம் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஒரு பெண் வந்தார். குழந்தையின்மை சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் வந்தார். ஆனால் அவர் சொன்ன முதல் பிரச்சினையே, டாக்டர் எனக்கு சிறுநீர் வருவது கட்டுப்பாட்டில் இல்லை. இருமும் போதும், தும்மும் போதும் சிறுநீர் வெளியேறுகிறது என்றார். அந்த பெண்ணுக்கு 23 வயது தான் ஆகிறது. எனவே இடுப்புத்தள தசையின் தளர்வு எந்த வயதிலும் ஏற்படலாம்.
இந்த தளர்வு பலவிதமான சிறுநீர் கசிவு தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும். சிறுநீர் அவசரமாக வருகிறது என்று நினைப்பதற்குள் அவர்களை அறியாமல் கட்டுப்படுத்த முடியாமல் சில சொட்டுகள் வெளியேறிவிடும். இதெல்லாம் வயதானவர்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. ஆனால் இளம் வயது பெண்களுக்கும் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.
அடுத்த கட்டமாக இந்த இடுப்புத்தள தசை தளர்வுகளால் என்ன பிரச்சினைகள் வருகிறது என்று பார்த்தால், சில பெண்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு என்னென்ன வகையில் பாலியல் பிரச்சினைகள் வருகிறது என்பதை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.