என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    பண்டிகைகளும் நம்பிக்கைகளும்...
    X

    பண்டிகைகளும் நம்பிக்கைகளும்...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபாவளி, தை மாதம் பொங்கல் விழா என இன்னும் எத்தனையோ பண்டிகைகள்.
    • பெண்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை உணர்ச்சியை வெளிப்படுத்த உதவும் பண்டிகை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி.

    நாம் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறோம். பண்டிகைகள் இல்லாத மாதங்களே இல்லை.

    ஆடி மாதம் அம்மன் பண்டிகைகள், புரட்டாசியில் நவராத்திரிப் பண்டிகை, ஐப்பசியில் தீபாவளி, தை மாதம் பொங்கல் விழா என இன்னும் எத்தனையோ பண்டிகைகள்.

    ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதக் காரணம் உண்டு. பொருளில்லாமல் வெற்று ஆரவாரமாக நம் பண்டிகைகள் எதுவும் அமைவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். ஆடி மாதப் பண்டிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப் படுபவை. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    கூழ் வார்க்கும் திருவிழாக்கள் ஏழைகளின் நலனை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. அது ஏழைகளின் பசியைப் போக்குகிறது.

    பொதுவாகவே நம் எல்லாப் பண்டிகைகளிலும் பிரசாதங்கள் உண்டு. ஏழைகளின் பசியாற்றுவதே ஆன்மிகத்தின் முக்கிய நோக்கம்.

    பெண்களின் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை உணர்ச்சியை வெளிப்படுத்த உதவும் பண்டிகை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி.

    வீட்டுக்கு வரும் பெண்களுக்குப் பாட்டுப் பாட சந்தர்ப்பம் கொடுப்பது இந்தப் பண்டிகை மட்டும்தான்.

    உடலில் சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருக்க கொண்டைக்கடலை, வேர்க்கடலை உள்ளிட்ட சுண்டல்களை வழங்கி அனைவரையும் சாப்பிடச் செய்து ஆரோக்கியத்தை வளர்க்க உதவுவதும் நவராத்திரிப் பண்டிகை தான். சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களையே கடவுளாக எண்ணிக் கும்பிடுகிறோம். `எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு` என்ற திருக்குறள் கருத்தை உணர்த்த வந்த பண்டிகை தானே அது?

    மனிதர்கள் மனதளவில் உயர்வதற்குப் புத்தகங்களே துணை செய்கின்றன என்ற அரிய உண்மையை உணர்த்தும் பண்டிகை அது.

    பொங்கல் உழவர் திருநாள். தொழுதுண்டு பின் செல்பவர்கள் உழுதுண்டு வாழ்வோரைப் போற்றும் நாள் அது.

    திருப்பூர் கிருஷ்ணன்


    உழுதொழிலுக்கு உதவும் மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் மாட்டுப் பொங்கல். விலங்குகளை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் பண்டிகை அது.

    ஆண்டுக்கு ஒரு முறையேனும் உறவையும் நட்பையும் பேணும் வகையில் காணும் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

    இப்படி நம் பண்டிகை ஒவ்வொன்றின் பின்னணியிலும் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றை அனுசரிப்பதால் நம் வாழ்வில் மங்கலமும் இனிமையும் கூடுகின்றன.

    இயந்திரத்தனமான வாழ்க்கையால் ஏற்படும் சலிப்பைப் போக்கிப் பண்டிகைகள் நம் மனத்தை உற்சாகமாக்குகின்றன.

    நாம் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகை, கண்ணன் கதை ஒன்றை மையமாகக் கொண்டது. தீய சக்திகளின் மொத்த வடிவமாக விளங்கிய நரகாசுரனைக் கண்ணன் வதைத்த நாளையே நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

    ராமனும் கண்ணனும் ராமாயணம், மகாபாரதம் என்ற நமது இதிகாசங்களின் நாயகர்கள். நாம் வழிபடும் இருபெரும் தெய்வங்கள்.

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த இரு தெய்வங்களும் நம் சுதந்திரத் தியாகிகள் பலருக்குத் தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள் என்பதை நம் வரலாறு சொல்கிறது.

    அறத்தின் திருவுருவாக விளங்கிய ராமனால் கவரப்பட்டவர் தேசத் தந்தை மகாத்மா காந்தி. மகாத்மா கண்ணனின் கீதையால் கவரப் பட்டிருக்கிறார். கீதைக்கு அவர் உரை விளக்கம் எழுதியுள்ளார்.

    கண்ணனால் கவரப்பட்ட தியாகிகள் பலர் உண்டு. வினோபாஜி, அரவிந்தர், பால கங்காதர திலகர், மகாகவி பாரதியார் உள்ளிட்ட பல தேச பக்தர்கள் கண்ணக் கடவுளின் பக்தர்களாகவும் இருந்தார்கள். கண்ணன் அருளிய பகவத் கீதையில் மனம் தோய்ந்தார்கள்.

    வினோபா, அரவிந்தர், திலகர், பாரதியார் என கிருஷ்ண பக்தர்கள் எல்லோருமே கீதைக்கு உரைவிளக்கம் எழுதியிருக்கிறார்கள்.

    தனக்குரிய சொந்த நாட்டையே தம்பி பரதனிடம் விட்டுச் சென்ற ராமன் பலரைக் கவரவில்லை. ஆனால் தனக்குச் சொந்தமில்லாவிட்டாலும் தருமபுத்திரரின் நாட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்த கண்ணன், நம் தேசம் நமக்கென்ற உரிமைக்காகப் பாடுபட்ட நமது தியாகிகளைக் கவர்ந்ததில் வியப்பெதுவும் இல்லை.

    கண்ணனது கதையே பல வகைகளிலும் உருவகமாகப் பல உண்மைகளை உணர்த்துவது தான். நாம் கதை சொல்லும் கருத்தை விட்டு விட்டுக் கதையை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். மகாத்மா காந்தியிடம் கண்ணனைப் பாத்திரமாகக் கொண்ட மகாபாரதம் பற்றிக் கருத்துக் கேட்டாள் ஒரு வெளிதேசப் பெண்மணி. ஐந்து பேரை ஒரு பெண் மணந்து வாழ்ந்ததைக் கொண்டாடுவது எப்படிச் சரியாகும் என்பதே அவள் கேட்ட கேள்விகளின் சாரம்.

    மகாத்மா காந்தி ஒரு மெல்லிய புன்முறுவலுடன் அழகாகப் பதில் சொன்னார்: `எங்கள் கதைகள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எதையுமே மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. அவற்றில் ஆழ்ந்த பொருள் உண்டு. அந்தப் பொருளைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    பாஞ்சாலி என்பவள் ஆன்மா. பஞ்ச பாண்டவர்கள் ஐம்புலன்கள். இந்த ஆன்மா இவ்வாழ்வில் ஐம்புலன்களை மணந்து வாழ்கிறது. ஐம்புலன்களும் வாழ்க்கை என்ற சூதாட்டத்தில் நூற்றுக்கணக்கான தீய சக்திகளிடம் தங்களை இழக்கின்றன. ஆனால் ஆன்மா உரிய நேரத்தில் விழித்துக் கொள்கிறது. தன்னையும் இழக்க அதற்கு விருப்பமில்லை.

    அந்தப் பாஞ்சாலியாகிய ஆன்மா கண்ணக் கடவுளை மனப்பூர்வமாக அழைத்ததும், கண்ணன் நூற்றுக்கணக்கான தீய சக்திகளிடமிருந்து ஆன்மாவின் மானத்தைக் காத்து அதைக் காப்பாற்றுகிறான். இதுவே மகாபாரதக் கதை சொல்லும் தத்துவம்! கதையை வெறும் கதையாகப் பார்க்காமல் அதுசொல்லும் உட்பொருளை உணர்ந்து கொள்வது முக்கியம். ஒரு மாத்திரையில் வெளிப்பூச்சு சர்க்கரையாக இருக்கலாம். தேனில் குழைத்து ஒரு கசப்பு மருந்தை நாம் சாப்பிடலாம்.

    ஆனால் சர்க்கரையோ தேனோ முக்கியமல்ல. மருந்துதான் முக்கியம். அதுபோல் இந்து மதக் கதைகளின் உட்பொருளான மருந்தை நாம் உணர்ந்து பின்பற்ற வேண்டும்.` கண்ணன் கதையில் வரும் எல்லா நிகழ்ச்சிகளும் இப்படிப்பட்ட பல தத்துவங்களை உணர்த்துவதுதான். நரகாசுரனைக் கண்ணன் வதம் செய்தான் என்றால் என்ன பொருள்? அதர்மத்தின் மொத்த உருவம்தான் நரகாசுரன். கண்ணன் அவனை வதம் செய்த மன்னன்.

    நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான். எனவே நாமும் கண்ணன் வழியில் நம்மை எதிர்ப்படும் நரகாசுரன்களை வதம் செய்ய வேண்டும். இதுவே தீபாவளிப் பண்டிகை தெரிவிக்கும் தத்துவம்.

    நாம் வதம் செய்ய வேண்டிய நரகாசுரன்கள் யார் யார்? காமம், குரோதம், பேராசை, அடுத்தவர்களைக் கெடுக்கும் குணம், உழைக்காதிருக்கும் சோம்பல் குணம், பொறாமை, புறம் பேசுதல் இவை போன்ற எண்ணற்ற எதிர்மறைப் பண்புகள் நம் ஆழ்மனத்தில் நரகாசுரன்களாய்ப் பதுங்கியிருக்கின்றன. அவை நம் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. அறிவே நம் கண்ணன். அறிவால் தீய குணங்களாகிய நரகாசுரன்களை அழித்து நம் வாழ்வில் நாம் முன்னேற வேண்டும்.

    `உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து` என்கிறது உலகப் பொது மறையான வள்ளுவம். அறிவு என்னும் அங்குசத்தின் மூலம் ஐம்புலன்களாகிய யானையை அடக்கி ஆள வேண்டும் என்கிறது அது. இன்று நம் நாட்டில் தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் இரண்டும் கெட்டுக் கிடக்கின்றன என்பது எல்லோரும் அறிந்த சங்கதி. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.

    தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததைப் பற்றித் தானே நம் ஆன்மிகம் நெடுகப் பேசுகிறது? ராமாயணத்தில் ராவண வதம், மகாபாரதத்தில் துரியோதன வதம், கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம், தீபாவளியில் நரகாசுர வதம், நவராத்திரியின் விஜயதசமியில் தேவி செய்யும் அசுரவதம் என எத்தனை அரக்கர்களை நம் தெய்வங்கள் வதம் செய்கின்றனர்? உண்மையில் மது ஓர் அசுரன். அதை வதம் செய்ய வேண்டும். மது அருந்துபவர்கள் இல்லாததால் மதுக் கடைகளை மூட வேண்டிய சூழலை நாம் ஏன் உருவாக்கக் கூடாது?

    அருட்செல்வர் நா. மகாலிங்கம், `குறைந்த பட்சம் கடைகளில் மது அருந்தக் கூடாது, வாங்கி மட்டுமே செல்லலாம் என்று சட்டம் கொண்டு வந்தாலே மது என்கிற அசுரன் பலவீனம் அடைந்து விடுவான்` என்ற பொருள்படக் கருத்துத் தெரிவித்தார். இளைஞர்கள் மதுவாகிய அசுரனின் பிடியிலிருந்து முற்றிலுமாக விடுபடுவோம் என மனப்பூர்வமாகச் சபதமேற்க வேண்டும். சமூக வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்தியாவெங்கும் லஞ்சம் என்கிற அசுரன் தலைவிரித்து ஆடுவதைப் பார்க்கிறோம். லஞ்சம் வாங்குவது தவறு என்று உணர்ந்தவர்கள் கூட லஞ்சம் கொடுப்பதும் தவறுதான் என்பதை ஏனோ உணர்வதில்லை.

    நமது இந்தியா லஞ்சம் என்கிற அசுரனின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடும் நாளே உண்மையான ஆன்மிக நன்னாள்.

    சமூக வாழ்வில் பெரும் தூய்மையைக் கடைப்பிடித்த கக்கன், ராஜாஜி, காமராஜ், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற உத்தமர்கள் மீண்டும் தோன்ற வேண்டும் என நாம் கடவுளைப் பிரார்த்திப்போம்.

    பெண்களை மையப்படுத்திப் பாலியல் வன்முறை நாடெங்கும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சூழலில், பாஞ்சாலியின் மானத்தைக் காத்த கண்ணனை வணங்கி அந்தக் கண்ணக் கடவுள் வழியில் நாமும் பெண்களின் மானத்தைக் காக்க உறுதி பூணுவோம்.

    `கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!` என்று பாடினார் வடலூர் ராமலிங்க வள்ளலார். கதைகளில் உள்ள கற்பனைகளை விடுத்து அவை சொல்லும் தத்துவத்தைக் கண்டறிந்து அதைப் பின்பற்ற வேண்டும் என்பதுதானே வடலூர் வள்ளல் பெருமானின் கருத்து? வள்ளலார் வழியைப் பின்பற்றி வாழ்வில் உயர்வோம்.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×