சிறப்புக் கட்டுரைகள்

ஓய்வுக்கால நிதி
- ஒவ்வொரு வீட்டிலும் வயதானவர்கள் இருப்பார்கள்.
- ஓய்வுக்காலத்துக்காக சேர்க்கும் நிதியை அரசின் திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள். விக்ரமாதித்ய மஹாராஜாவின் சிம்மாசனத்தில் அமரத் தயங்கிய போஜராஜன் கதை தெரியுமல்லவா? ஒரு கிராமத்தில் போஜராஜன் கண்டெடுத்த அந்த சிம்மாசனத்தில் 32 படிகள். அவை ஒவ்வொன்றையும் தங்கச் சிலைகளாக மாற்றப்பட்ட அப்சரஸ்கள் தாங்கி நின்றன. ஓரொரு சிலையும் விக்ரமாதித்தனின் பெருமைகளில் ஒன்றைக் கூறி "அந்த நற்குணம் உனக்கு இருந்தால், இந்தப் படியில் ஏறலாம்" என்றது.
அந்த 32 கல்யாண குணங்களும் இருப்பவன்தான் அதன் உச்சியில் அமர லாயக்கு என்பது அதன் அர்த்தம். விக்ரமாதித்தனின் புகழ் கேட்டு, தான் அந்த சிம்மாசனத்தில் அமர லாயக்கற்றவன் என்று முடிவு கட்டி போஜராஜன் பின் வாங்கிய போது, அந்த சிலைகள் அவனை வணங்கி "நீ அதற்கு முழுமையாகத் தகுதியானவன்" என்று கூறி வழி விட்டன.
அதேபோல் செல்வநிலை என்ற சிம்மாசனத்தின் மீது அமர ஆசைப்படும் நமக்கும் அதற்கு உண்டான தகுதிகள் நம்மிடம் உள்ளனவா என்று சுயபரிசோதனை செய்வதற்கும், அந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்குமான முன்னுரைகளே இந்தக் கட்டுரைகள். அந்த வகையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயம் –'முதலில் எனக்கு' –என்ற கோட்பாடு. அதிலும் நீங்கள் 50 வயதைத் தாண்டியவர் என்றால், கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டிய கோட்பாடு இது. ஏனெனில் நம்மில் பலர் குடும்பத்தினரின் ஆசைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதிலேயே காலம் கழிக்கிறோமே தவிர நமது ஓய்வுக்காலம் குறித்து யோசிப்பதில்லை.
கால மாற்றம் 'முதலில் எனக்கு'
நமது கிராமங்களில் சிலரை "தன்னப் போணி' என்று திட்டுவதைக் கேட்டிருக்கலாம். தன்னப் போணி என்றால் சுயநலமாக இருப்பவன்; தன் நலத்தை மட்டுமே பேணுபவன் என்று அர்த்தம். இதுவரை நமக்குக் கூறப்பட்டதெல்லாம், "சுயநலமாக இருக்காதே. தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவையானவற்றுக்கு செலவழித்து, அவர்களை வாழவைப்பதே நல்ல மனிதனுக்கு அழகு"" என்பது போன்ற நல்லுரைகள்தான். இதற்கு முக்கிய காரணம் நம் நாடு கூட்டுக்குடும்பங்கள் நிறைந்த விவசாய நாடாக இருந்ததுதான்.
அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் வயதானவர்கள் இருப்பார்கள். அவர்களை பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள். இன்றைய நிலை வேறு. தொழிற்சாலைகள் வந்தபின், பிள்ளைகள் வேறு ஊர், வேறு நாடு என்று சென்றுவிட, கூட்டுக் குடும்பங்கள் உடைந்துவிட்டன. நம்மில் பலர் கடைசி வரை தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
ஒரு சிலர்தான் இந்தக் கால மாற்றத்தை உணர்ந்து, "எனக்கும் வயதாகும். வேலை செய்யமுடியாத காலம் வரும். அப்போது பிள்ளைகள் மீது சார்ந்து வாழ முடியாமல் போகலாம். அதற்காக என் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தனியாகச் சேர்த்து வைக்கிறேன்" என்று பணத்தை சேமிக்கிறார்கள். அப்படி நாமும் விரும்பினால் "என்னுடைய முதல் செலவு ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு" என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
எவ்வளவு சேமிப்பது? எங்கு சேமிப்பது?
பணி ஓய்வு என்பது அனைவர் வாழ்விலும் வரக்கூடிய ஒரு முக்கியமான நிகழ்வு. சிறிது திட்டமிட்டு இறங்கினால், ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம். இதில் பலருக்கும் ஏற்படக்கூடிய கேள்வி "எனக்காக, என் ஓய்வு காலத்துக்காக எவ்வளவு சேமிப்பது?" என்பதுதான். பொதுவாக நம் வருடாந்திர செலவைப் போல் 25-30 மடங்குப் பணம் சேமிப்பாக இருந்தால் ஓய்வுக்காலத்தை பதற்றமின்றிக் கழிக்க இயலும்.
சுந்தரி ஜகதீசன்
அடுத்த கேள்வி – எங்கு சேமிப்பது என்பதே அல்லவா? ஓய்வுக்காலத்துக்கான பணம் என்னும் பட்சத்தில் அதில் நாம் எந்த ரிஸ்க்கும் எடுக்கமுடியாது. அது பங்குச் சந்தை வருமானம் போல் மேலும், கீழுமாக ஏறி, இறங்காமல், நிலையாக வளர்வதாக இருக்க வேண்டும். மேலும் அதனைப் பாதுகாப்பவர்களும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும். நம் நலனின் உச்சபட்ச பாதுகாப்பாளர் அரசாங்கம்தானே? அதனால் ஓய்வுக்காலத்துக்காக சேர்க்கும் நிதியை அரசின் திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது.
அரசின் எந்தத் திட்டங்கள் ஏற்றவை?
பணி ஓய்வுக்குத் திட்டமிடல் எவ்வளவு சீக்கிரம் துவங்குகிறதோ, அவ்வளவு நல்லது என்று உணர்ந்து, அரசாங்கமே ப்ராவிடென்ட் ஃபண்ட், வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்ட், பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் என்று மூன்று திட்டங்களை முன்வைத்துள்ளது. அவற்றையே நம் ஓய்வுக்கால நிதித் தொகுப்பை உருவாக்க நாம் உபயோகிக்கலாம்.
ப்ராவிடென்ட் ஃபண்ட் திட்டத்தில் ஊழியரின் சம்பளத்தில் (பேசிக் சம்பளம் + சில சலுகைகள்) 12% அளவு ப்ராவிடெண்ட் ஃபண்டாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. (இதற்கு ஈடாக அவர் வேலை செய்யும் நிறுவனமும் 12% தந்தாலும் அதில் 8.33% பென்ஷன் அக்கவுன்ட்டுக்கு சென்று விடுவதால், 3.67% மட்டுமே ப்ராவிடென்ட் ஃபண்டுக்கு செல்கிறது). இதற்கு இந்த வருடம் வழங்கப்படும் வட்டி விகிதம் 8.25%. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு வருடமும் 8% முதல் 13% வரை மாற்றத்துக்கு உள்ளாகலாம். இதில் இருந்து பணத்தை வெளியே எடுப்பது அத்தனை சுலபமல்ல என்பதால் நம் பணம் சீராக வளர்கிறது.
ப்ராவிடென்ட் ஃபண்டின் முக்கியத்துவம் உணர்ந்து அதிகம் செலுத்த விரும்புவோர், தங்கள் சம்பளத்தில் (பேசிக் + டிஏ) 100% வரை வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்டாக செலுத்தலாம். இதில் நிறுவனத்தின் பங்கு இருக்காது. நாம் வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்டைத் துவங்குவதாக, தொகையைக் குறிப்பிட்டு நம் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தால் இந்த அக்கவுன்ட் நமக்குத் துவங்கப்படும். ஒரு முறை இதனை நாம் தேர்ந்தெடுத்து முதலீட்டைத் துவங்கிவிட்டால், குறைந்தது 5 வருடங்களாவது தொடர்ந்து முதலீடு செய்யவேண்டும். இதற்கும் ப்ராவிடென்ட் ஃபண்டுக்கு தரப்படும் அதே அளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்.) என்ற அஞ்சலகத் திட்டம் நமக்குத் தெரிந்த ஒன்று. தாம் வேலை செய்யும் நிறுவனத்தில் ப்ராவிடென்ட் வசதி இல்லாதவர்கள், சுய தொழில் செய்பவர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் இதில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ரூ.500/ முதல் அதிக பட்சம் ரூ. 1.50 லட்சம் வரை சேமிக்கலாம். வங்கிகளிலும், போஸ்ட் ஆஃபீசிலும் இதனைத் துவங்கும் வசதி உள்ளது. ஒரு முறை துவங்கிவிட்டால் 15 வருடம் தொடரவேண்டும். 15 வருட முடிவில் நீட்டிக்க விரும்பினால் ஐந்து, ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்கலாம். தற்போது இதற்கு 7.1% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் பரிசீலனை செய்யப்பட்டு மாற்றத்துக்கு உள்ளாகலாம்.
மூன்றிலும் கிடைக்கும் வரிவிலக்குகள்
இந்த மூன்று திட்டங்களிலும் பங்கு பெறுவது நமக்கு இன்னொரு நன்மையையும் வழங்குகிறது. இவை அனைத்துமே 80 சி செக் ஷனின் கீழ் வரிவிலக்கு பெறுகின்றன. நாம் ஓய்வுகாலத்துக்காக செய்யும் ப்ராவிடென்ட் ஃபண்ட் சேமிப்புகள், 20% 30% என்று நமது வருமான வரம்புக்கேற்றபடி தரும் வரிச்சலுகையை வேறு முதலீடுகளில் ஈடுபடுத்தி 8%, 10% என்று வருமானம் பெறலாம்.
இவற்றில் இருந்து வரக்கூடிய வட்டிக்கும் வரி விலக்கு உண்டு. இவை முதிர்வு அடைந்து வெளிவரும்போதும் வரிப் பிடித்தம் ஏதும் செய்யப்படுவதில்லை. இப்படி மூன்று கட்டங்களிலுமே Exempt, Exempt, Exempt என்பதாக வரி விலக்கு கிடைப்பது நமது பணம் தடையின்றி வளர பேருதவியாக இருக்கிறது. (வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்டில் மட்டும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேரக்கூடிய வட்டித் தொகை வருமான வரியின் கீழ் வரும்).
மாதத்தின் முதல் செலவு சேமிப்பு
ப்ராவிடென்ட் ஃபண்ட் சேமிப்பும், வாலன்டரி ப்ராவிடென்ட் ஃபண்ட் சேமிப்பும் நம் சம்பளத்திலேயே பிடித்தம் செய்யப்பட்டு, மீதி இருக்கும் பணமே நம் கைக்கு வரும். பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்டில் ஐந்தாம் தேதிக்குள்ளாக அக்கவுன்ட்டில் செலுத்தப்படும் பணத்துக்கே அந்த மாதம் வட்டி தரப்படும் என்பதால், முதல் இரண்டு, மூன்று தேதிக்குள்ளாகவே பணத்தைப் பிடித்தம் செய்து இந்த அக்கவுன்ட்டுக்கு அனுப்பும்படி வங்கியில் நாம் ஒரு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்-ஷன் கொடுத்து விடவேண்டும். மாதத்தின் முதல் செலவே நமக்கான சேமிப்பு என்றாகிவிடுவதால் என்பதால் "இந்த மாதம் செலவு அதிகமாகிவிட்டது; சேமிக்க இயலவில்லை" என்பது போன்ற சால்ஜாப்புகளுக்கு இடமிருக்காது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் ஓய்வுக் காலத்துக்காக சேர்த்த பணத்தை வேறு செலவுகளுக்காக எடுக்கக்கூடாது என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்கவும் இந்த மூன்று பிராவிடென்ட் ஃபண்டுகளுமே நமக்கு உதவும். ஏனெனில், இவற்றில் கடன் வாங்கவும், பணத்தை வெளியே எடுக்கவும் அனுமதி இருந்தாலும் அது அவ்வளவு எளிதல்ல. ஆயினும் சிலர் இவற்றிலிருந்து பணத்தை எடுத்து, திரும்பக் கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அது நம் நிதித் தொகுப்பின் வளர்ச்சியை பாதிக்கும்.
நமது ஓய்வுக்காலத்துக்கான நிதியைச் சேர்க்க இந்த மூன்று திட்டங்களும் முக்கியம். இவற்றில் நம்மால் இயன்ற அளவு சேமிப்பது ஓய்வுக் காலத்தை எதிர்கொள்ள உதவும்.
உங்கள் ஓய்வுக்கால நிதிக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டீர்களா? முக்கியமாக, அந்த நிதியில் இருந்து எக்காரணம் கொண்டும் பணத்தை வெளியே எடுக்காமல் இருக்கிறீர்களா?