சிறப்புக் கட்டுரைகள்

தினசரி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை
- அனைத்து வழிமுறைகளையும் ஆயுர்வேதம் வழங்கியுள்ளது.
- உடல் நிலையும் மன நிலையும் சம நிலையில் இருக்க வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தை சாஸ்வத நித்யம், அனாதி என்று கூறுவார்கள். சாஸ்வத நித்யம் என்றால் எப்போதும் நிலைத்துயிருக்கும், அனாதி என்றால் முடிவே இல்லாதது என்று பொருள்.
ஆயுர்வேதம் என்ற சொல்லை இரண்டாக பகுத்து ஆயுர் + வேதம் என்று பார்க்க வேண்டும். ஆயுர் என்றால் வாழ்க்கை, வேதம் என்றால் அறிவியல். ஆக ஆயுர்வேதம் என்றால் 'வாழ்க்கை அறிவியல்' என்று பொருள். ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து இறுதி நாட்கள் வரை எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என அனைத்து வழிமுறைகளையும் ஆயுர்வேதம் வழங்கியுள்ளது. முறை தவறி வாழ்ந்தால் என்ன இடர்பாடு ஏற்படும், அதற்கு என்ன தீர்வு, என்பதை குறித்தும் பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தின் நோக்கம் என்னவென்றால் மனித இனத்தை அறநெறியில் அர்த்தமுள்ளதாக வாழ வைத்து, மீண்டும் பிறவாநிலையை அடையச் செய்வது ஆகும். இதன் காரணமாகவே ஆயுர்வேதம் ஒரு முழுமையான மருத்துவ முறை என்கிறோம். இந்த ஒப்பற்ற மருத்துவ முறைதான் ஆரோக்கியம் என்ற வார்த்தைக்கு வரையறை வழங்குகிறது
ரோகம் என்றால் நோய். ஆரோகம் என்றால் நோயற்ற தன்மை. அது தான் ஆரோக்கியம் ஆனது.
'ஆ' ரோக்கியம் என்பதன் வரையறை என்ன என்று பார்த்தால், உடல் இயக்கங்கள் சம நிலையிலிருக்க வேண்டும், சீரண சக்தி சீராகயிருக்கவேண்டும், உடல் கட்டமைப்பு சம நிலையிலிருக்க வேண்டும், மலசலங்கள் முறையாக வெளியேற வேண்டும், மகிழ்ச்சியான மனநிலை வேண்டும். ஐம்புலன்கள் சீராக செயல் பட வேண்டும்.
ஆக உடல் நிலையும் மன நிலையும் சம நிலையில் இருக்க வேண்டும். இதில் ஒன்றில் ஏற்ற தாழ்வு ஏற்பட்டாலும் ஆரோக்கியத்தில் 'ஆ' தவறி ரோகம் என்ற நோய் நிலையே ஏற்படும். ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிக்காப்பது, ஆரோக்கியம் இல்லை என்றால் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளுவது, அதற்கு ஆயுர்வேதம் ஒரு திட்ட முறைகளை வழங்குகிறது. அந்த திட்ட முறைகளை பின்பற்றினால் நிச்சயம் உள்ளங்கை நெல்லிக்கனி போல ஆரோக்கியதிற்கு வழி தெளிவாக தெரியவரும்.
ஆரோக்கிய திட்டத்தில் முதல் திட்டம் அனைவருக்கும் பொதுவானது.
ரா. பாலமுருகன்
1. தினச்சர்யம்- தினம் என்றால் பகல் பொழுது. சர்யம் என்றால் நடைமுறை என்று பொருள். அதாவது ஆரோக்கியத்தை மேம்படுத்த பகல் பொழுதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.
2.ராத்ரிச்சர்யம்- ராத்ரி என்றால் இரவு பொழுது. அதாவது இரவு பொழுதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.
3.ஆஹார சர்யம்- பின்பற்றவேண்டிய உணவு முறைகள்.
4.விஹார சர்யம்- பின்பற்றவேண்டிய நடைமுறைகள்.
5.ருது சர்யம்- கால சூழ்நிலைக்குஏற்ப பின்பற்றவேண்டிய நடைமுறைகள்.
மேற்கண்ட ஐந்து நடைமுறைகளும் அனைவரும் பின்பற்ற வேண்டியது,
இரண்டாவது திட்டம் கர்ப்பிணிகளுக்கும், பிரசவித்த பெண்களுக்கும், சிசு மற்றும் குழந்தைக்குண்டான பின்பற்றவேண்டிய நடைமுறைகள்.
இதில் அனைவருக்கும் உண்டான முதல் திட்டம்மான தினசர்யம் பற்றி பாப்போம்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த பகல் பொழுதை எப்படி ஆரம்பிப்பது, என்னென்ன நாம் பின்பற்றவேண்டும்?
காலையில் நாம் முதலில் செய்ய வேண்டியது உஷப் பானம்... அப்படி என்றால் காலையில் தண்ணீர் பருகுதல், நன்றாக உறங்கி விடியற்காலையில் துயில் எழுந்தபின்பு மலம் கழிப்பதற்கு முன்பு நீண்ட கால நோய்கள் இல்லாதவர்கள் சுமார் 750 ml பச்ச தண்ணீரை பருக வேண்டும். இதன் மூலம் உடலை சுத்தப்படுத்தி கொண்டு ஆயுளை பெருக்கிக்கொள்ள முடியும்.
தினச்சர்யத்தில் அடுத்தபடியாக மலம் கழித்தல், எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மலம் தான் என்கிறது வேதம். இன்றைய காலகட்டத்தில் மலத்தை கழிப்பது என்பது இயல்பான விஷயமாக இல்லை. இது வயது வித்தியாசமின்றி குழந்தை முதல் முதியவர்வரை அனைவருக்கும் பொருந்தும். மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி உண்டான பிறகுதான் மலம் கழிக்கவேண்டும்.
பொதுவாக காலையில் துயில் எழுந்தவுடன் மலம் கழித்தல் என்பது சாலச்சிறந்தது. பலர் நேரமின்மை காரணமாக பின்பு பலவந்தமாக மலத்தை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மலத்தை வெளியேற்றாமலும் இருக்க கூடாது பலவந்தமாக வெளியேற்றவும் கூடாது. அவ்வாறு பலவந்தமாக வெளியேற்றினால் தலைவலி, மூலம், உடம்பு வலி, ஹெர்னியா, வயிற்று பொருமல் போன்ற உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் தனக்கு மலச்சிக்கல் இருப்பது தெரியாமலே வாழ்கின்றனர்.
அவர்களிடத்தில் சோதித்தால் மலசிக்கல் இல்லை என்றே பதில் வரும். இரவில் வாழைப்பழம் சாப்பிடாமல் காலையில் டீ, காபி, தண்ணீர் குடிக்காமல் இரவில் மலம் இளகச் செய்யக்கூடிய மருந்துகளை எடுக்காமல் காலை துயில் எழுந்தவுடன் மலத்தை கழிக்க வேண்டும். அதுவே மலச்சிக்கல் இல்லாத மலம் கழித்தல் என்று கருதலாம். மேற்கண்டவற்றை உபயோப்படுத்தி மலத்தை கழித்தால் அதுவும் மலச்சிக்கலே.
மலசிக்களுக்குண்டான காரணம்:
1.போதுமான தண்ணீர் பருகாமல் இருத்தல்.
2.எளிதில் ஜீரணமாகாத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுதல்.
3.நார் சத்து இல்லாத மற்றும் வறண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்.
4.தூக்கமின்மை, பயம் மன உளைச்சல்.
5.அஜீரணம் இருக்கும் போது உணவு உண்ணுதல்.
6.இரவு நேரத்தில் ஜீரணமாகாத உணவு / அசைவ உணவை அதிகம் எடுத்தல்.
7.உணவு அளவுக்கு குறைவாக எடுப்பதினால்...
8.உடற்பயிற்சியில்லாமல் ஒரே இடத்தில் இருத்தல்...
போன்ற காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுனுடைய அறிகுறி:
1.சுகமாக மலம் கழிக்க முடியாமல் போவது.
2.அடிக்கடி மலம் கழித்தல், திருப்தில்லாமல் போவது...
3.மலத்தை முக்கி கழித்தல், வலியுடன் மலம் கழித்தல்...
4.மன உளைச்சல், அதிக கோபம்...
சிகிச்சை:
மேற்கண்ட மலச்சிக்கல் காரணங்களை தவிர்த்தல் வேண்டும், நார்ச்சத்து கீரை உணவுகளை, நீர்ச்சத்துவுள்ள உணவுகளை, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்...போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும், உடல் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலமாகவும் மலத்தை எளிதில் கழிக்கமுடியும்.
திரிபலா பொடியை அல்லது கடுக்காய் பொடியை இரவு நேரத்தில் சாப்பிடலாம். அதாவது, இரவு உணவு சாப்பிட்ட பின்பு 1 மணி நேரம் கழித்து 1 தேக்கரண்டி திரிபலா சூரணத்தை 75 ml தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவைத்து ஆற வைத்து இளம் சூட்டுடன் பருக வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் தீர்த்து மலம் இளக வழி வகைச் செய்யும்.
கல் குடல் வாகு, அதாவது வறண்ட குடல் உடையவர்கள். எப்போதும் மலச்சிக்கல், வயிற்று வலி, பொருமல், சிலநேரம் நன்கு ஜீரணம், சில நேரம் ஜீரணமின்மை போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் கல் குடல் வாகு கொண்டவர்கள். இவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் உணவில் விளக்கெண்ணெய் சிறிது அளவு சேர்த்துக்கொள்ளலாம். அல்லது இரவில் உறங்கும் முன் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெயை 75 ml சுடுதண்ணீரில் கலந்து கொடுக்க மலம் எளிதாக கழிக்க முடியும்.
இன்றையகாலத்தில் மலம் கழிக்கும் போது மனதை அதில் செலுத்துவது கிடையாது. மாறாக மொபைல் போனுடன் கழிவறைக்கு செல்கின்றனர். மொபைலில் மனதை செலுத்தினால் மலம் முழுமையாக கழிவுறாது. இதனால் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆயுர்வேதத்தில் மலமிளக்கியாக பல வகை மருந்துகள் பல தரத்தில் கூறப்பட்டுள்ள.
சூரண மலமிளக்கி, கஷாய மலமிளக்கி, மாத்திரை மலமிளக்கி / குடிகை, எண்ணெய், நெய், டானிக் போன்ற வடிவில் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்.