சிறப்புக் கட்டுரைகள்

சகித்தலே சாதித்தல்!
- அன்றாட வாழ்வியலில் நமக்கு ஏற்படும் சிறுசிறு இடர்ப்பாடுகளையும் கூடச் சமாளிப்பதற்கு இந்தச் சகிப்புத் தன்மை சிறந்த பலன் அளிக்கும்.
- சகித்துக்கொள்ளுதல், அமைதியாக இருத்தல், அகிம்சையைக் கையாளுதல் என்பவை காரிய வெற்றிக்குக் கைகொடுக்கும்.
பொறுமையும் சகிப்புத் தன்மையுமே சாதனைகளுக்கான வழிகள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய அன்பு வாசகர்களே! வணக்கம்!.
நமக்கு வருகின்ற துன்பங்களையும் தடைகளையும் எதிர்த்துப் போராடி வெற்றி காண்பதே வாழ்க்கை. என்றாலும் அத்துன்பங்களையும் வலிகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான கருவியாக எதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் நமது நிலைத்த வெற்றி அடங்கியிருக்கிறது. தனிமனித வாழ்க்கைக்கும் பொதுநிலை வாழ்க்கைக்குமான பொதுவானதொரு போராட்டக்கருவியை மகாத்மா காந்தியடிகள் இருபதாம் நூற்றாண்டில் கடைப்பிடித்தார்.
மகாத்மாவின் வருகைக்கு முன்பாக, எந்த அடக்குமுறைக்கும் எதிராக ஆயுதங்களை ஏந்துதலே போராட்ட அனுகுமுறைகளாக இருந்தன. தடிகளை எடுத்தால் தடிகள்!. அரிவாள் கத்தி, வாள், வேல்களை எடுத்தால் அதே இரும்புக் கருவிகள்!, துப்பாக்கிகளை எடுத்தால் துப்பாக்கிகள்!, பீரங்கிகளை எடுத்தால் பீரங்கிகள்!, அணுகுண்டுகள் தயாரித்தால் அணுகுண்டுகள்!, வான்வழி, கடல்வழி, தரைவழி என்று எவ்வழியில் தாக்கினாலும் எதிர்த்து அவ்வழித் தாக்குதல் என்று போர்முறைகளில், நாம் எடுக்க வேண்டிய போர்க்கருவிகளை, நம்முடைய எதிரிகள் எடுக்கின்ற ஆயுதங்களே தீர்மானித்தன. ஆனால் மகாத்மா காந்தியடிகள் அகிம்சை என்னும் அழிவிலா ஆயுதத்தை உருவாக்கிப் பயன்படுத்தி நம்மையும் கையாளச் சொன்னார். எத்தனை கொடிய ஆயுதத்தையும் அகிம்சை என்னும் ஆயுதம் அடிபணிய வைத்துவிடும்.
அகிம்சை என்பது, வருகின்ற இம்சைகளை, துன்பங்களைச், சகிப்புத் தன்மையோடு பொறுத்துக்கொள்வது; நமக்கு வருகின்ற இம்சைக்கு இம்சை பண்ணாமல் சகித்துக்கொள்வது. வலிபொறுத்தலே வாழ்க்கை என்னும் தவ வாழ்வின் தத்துவத்தை, அன்றாட வாழ்வியலில் பொருத்திப் பார்க்கின்ற உன்னதமான வழிமுறை இது. ஆன்மீக வியலையும் சமூகவியலையும் சங்கமிக்கச் செய்து உருவாக்கப்பட்ட அற்புதக் கருவி. பெரும்பெரும் சமூக அடக்குமுறைகளை எதிர்த்து மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வியலில் நமக்கு ஏற்படும் சிறுசிறு இடர்ப்பாடுகளையும் கூடச் சமாளிப்பதற்கு இந்தச் சகிப்புத் தன்மை சிறந்த பலன் அளிக்கும்.
சமூகத்தில் மக்கள் திரளை 'மனிதர்கள்' என்று ஒரே பொருண்மையில் அழைத்தாலும் அவர்கள் அனைவரும் பலராகவே இருக்கின்றார்கள்; அதுமட்டுமல்லாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே இருக்கின்றனர். அதே போல விலங்குகள், பறவைகள், புல்பூண்டு செடிகொடிகள் என அனைத்தும் மனிதரோடு கலந்துவாழும் 'உயிரினங்கள்' என்று அழைக்கப்பட்டாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை யானவை; வாழ்கின்ற முறையிலும் வெவ்வேறு பட்ட முறைகளைக் கொண்டவை. ஆயினும் சூழலியல் சார்ந்த ஒருவித சமத்தன்மை காரணமாகவே இப்பிரஞ்ச வாழ்வியல் பெரும் மாறுபாடுகளுக்கு உள்ளாகாமல் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மனிதர்கள் ஓரினம் என்றாலும் அவர்களுக்குள் எத்தனை பேதங்கள்?. குட்டை நெட்டை, குண்டு ஒல்லி என உடலியல் அமைப்புகள், உடலியல் நிறங்கள், குடிமுறை பேதங்கள், பேசும் மொழிகள், வணங்கிடும் தெய்வங்கள், சார்ந்திடும் ஜாதிகள் மதங்கள், கடல்சார் மலைசார் மணல்சார் வயல்சார் நிலவியல் திணைசார் வாழ்விடங்கள், வாழ்விட நகர கிராம வேறுபாடுகள், உண்ணும் உணவுமுறை வேறுபாடுகள், பழக்க வழக்கங்கள், உடுத்தும் உடை வேறுபாடுகள், சார்ந்திருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பார்க்கின்ற தொழில் சிறப்புகள், சிறப்பின்மைகள் என இப்படி வேற்றுமைகளால் நிரம்பி வழிவதே மனித வாழ்வியலின் அமைப்புமுறை. இவ்வாழ்வியலில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போதல் ஒன்றே அன்புசார் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும்.
சுந்தர ஆவுடையப்பன்
மனிதர்களிலும் ஆண் பெண் என்று இருபெரும்பிரிவுகள் இருக்கின்றனர்; உடலியல் அமைப்பு முறைகளிலும் மனவியல் அமைப்பு முறைகளிலும் எந்தவகையிலும் ஒத்துப்போகாத விசித்திரங்கள் இவர்களுக்குள் உண்டு. ஆயினும் இந்த ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே குடும்பம் என்பது உருவாக்கப்பட்டு, உலகின் படைப்பியக்கமும், மனிதகுலத்தின் வாழையடி வாழையென வளர்முறைத் தொடர்ச்சியும் இக்குடும்பத்தின் வழியேதான் நிகழும் என்பது நியதியாக்கப்பட்டிருப்பது இன்னும் பெரும் விந்தை. இந்த இடத்தில்தான் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போதல், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்ளுதல் போன்றவை அவசியமானவையாக வலியுறுத்தப்படுகின்றன.
நம்மிடம் உள்ள குணங்கள் அல்லது நாம் எதிர்பார்க்கும் குணங்கள் அடுத்தவரிடமும் கட்டாயம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதே பெரும் தோல்வியில்தான் முடியும். கட்டிய கணவனிடம் மனைவியும், கட்டிய மனைவியிடம் கணவனும்கூட இப்படி எதிர்பார்க்க முடியாது; ஏன்! தாம் பெற்ற பிள்ளைகளிடம்கூடத் தாம் எதிர்பார்க்கும் குணாதிசயங்களைப் பெற்றோர்கள் கண்டறிய முடியாது என்பது நிதர்சன உண்மை. தனிப்பட்ட குடும்ப வாழ்விலேயே இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்போது, பணிபுரிகிற அலுவலகங்கள், பழகுகிற பொதுவிடங்கள் இப்படி அனைத்திலும் நாம் எதிர்பார்த்தவை நடக்கவா போகின்றன. இந்த இடத்தில்தான் பொறுத்துப் போதல், சகித்துக்கொள்ளுதல், அமைதியாக இருத்தல், அகிம்சையைக் கையாளுதல் என்பவை காரிய வெற்றிக்குக் கைகொடுக்கும்.
வீண் மனப் பதற்றங்கள், மன அழுத்தங்கள், பரபரப்புகள், மன வருத்தங்கள் இவை எதுவுமின்றி நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்க்கையை வெற்றியின் பாதையில் நடத்திச் செல்லமுடியும். பட்டப்படிப்பு முடித்துப் போட்டித் தேர்வில் தேர்வாகி, ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் நேர்முக உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார் ஓர் இளம்பெண். வேலைக்குச் சேர்ந்த பத்தே நாளில் தனது வேலையை ராஜினாமாச் செய்துவிடலாம் என்கிற முடிவிற்கு அவர் வந்து விட்டார்; ஏனெனில் அவருடைய மேலதிகாரிக்கும் அந்தப்பெண்ணுக்கும் ஒத்துப் போகவே இல்லை. படக்கென்று ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துவிடாமல், அதற்குமுன் ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவருடைய அறிவுரையையும் கேட்டு முடிவெடுப்போம் என்று மருத்துவரிடம் சென்றார் இளம்பெண்.
மனநல மருத்துவர் அந்த இளம்பெண்ணிடம் "என்னென்ன காரணத்திற்காக உங்கள் 'பாஸ்' உங்களுக்குப் பிடிக்கவில்லை" என்று பட்டியல் கேட்டார். "அவர் சிடுமூஞ்சியாக இருக்கிறார்; என்னைப் பார்த்த உடனேயே சிடுசிடுவென எரிந்து விழுகிறார். ஒருநாள் காலையில் அலுவலகம் சென்றவுடன் அவர் அழைக்காமலே அவர் அறைக்குள் சென்று, 'குட் மார்னிங் சார்!' என்றேன். இப்படியெல்லாம் நான் அழைக்காமல் வந்து குட் மார்னிங் சொல்லி எனக்கு 'ஐஸ்' வைக்கக் கூடாது, என்று பொரிந்து தள்ளி விட்டார்.
மறுநாள் அவர் கூப்பிட்டனுப்பியவுடன் அறைக்குள் சென்றேன்; குட்மார்னிங் சொல்லவில்லை; உடனே, 'ஒரு மேலதிகாரியைப் பார்த்தவுடன் குட்மார்னிங் சொல்ல வேண்டும் என்கிற மரியாதை கூடத் தெரியாதா?' என்று அதற்கும் கோபப்படுகிறார்; இவரோடு காலம் தள்ள முடியாது. வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு நான் வேறு வேலை தேடிக்கொள்கிறேன்" என்றார் அந்த இளம்பெண்.
"அம்மா! வேலைக்குச் சேர்ந்த பத்தாவது நாளே வேலையை விடப்போகிறேன் என்று சொல்வது பொருந்தாத செயல். குறைந்தது ஒரு மூன்று மாத காலமாவது அந்த வேலையில் இருந்து பார்த்துவிட்டு அப்புறமாக ஒரு முடிவுக்கு வரலாம். வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மனிதர்கள் எல்லாரும் நாம் நினைப்பது போலவே இருக்க மாட்டார்கள். அவர்கள் மேலதிகாரியாக இருக்கின்ற பட்சத்தில் நாம்தான் கொஞ்சம் சகித்துப் போகக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாருமே எல்லா நேரத்திலும் சிடுமூஞ்சியாகவோ கோபக்காரராகவோ இருப்பதில்லை; அவர்களுக்குள்ளும் நல்ல மனித குணங்கள் ஒளிந்து கொண்டிருக்கும். சிடுமூஞ்சித்தனத்தைச் சகித்துக் கொண்டு, நல்லமனித குணம் வெளிப்படும்போது பாராட்ட வேண்டும்.
அலுவலகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் அவரது செயல்பாடுகளை அவ்வப்போது பாராட்டுங்கள்; அவர் உடை உடுத்திவரும் பாங்கு, அவர் பிரச்சனைகளைப் பேசி அனுகும் முறை, அவரது நடை உடை பாவனை இவற்றை அவ்வப்போது சிறப்பாகச் சொல்லுங்கள்; பாராட்டிற்கு மயங்காத மனிதர்களே கிடையாது. ஒரு மூன்றுமாதங்கள் கழித்து மீண்டும் இங்கு வாருங்கள்!; அப்போது முடிவெடுத்துக் கொள்ளலாம்! வேலையில் இருப்பதா? அல்லது வேலையை விட்டுவிடுவதா? என்பதை!" என்று ஆலோசனை வழங்கி அனுப்பினார் மனநல மருத்துவர்.
வேலைக்குத் திரும்பிய இளம்பெண், சரியாக மூன்று மாதம் கழித்து, மனநல மருத்துவரைப் பார்க்கச் சென்றார். " என்னம்மா! இளம்பெண்ணே! வேலையை விட்டுவிடப் போகிறாயா?" என்று கேட்டார் மருத்துவர். "நான் பதில் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும் டாக்டர்! முதலில் நீங்கள் கையை நீட்டுங்கள்! இதை வாங்கிக் கொள்ளுங்கள்!" என்று ஓர் அழைப்பிதழை மன நல மருத்தவர் கையில் தந்தார் அந்த இளம்பெண். " ஆமாங்க டாக்டர் எனக்கும் என்னோட மேலதிகாரிக்கும் அடுத்த வாரம் கல்யாணம்!. அதோட அழைப்பிதழ்தான் இது. என்னோட வெறுப்பு நூறுசதவீத விருப்பா மாறுனதுக்கும், எங்களுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் மலர்ந்ததற்கும் முழுக்க முழுக்க நீங்கதான் காரணம்.
அவசியம் வந்திருந்து எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க டாக்டர் " என்றார் இளம்பெண். ஆம்! சகிப்புத் தன்மையே சாதனைகளுக்கு வழிவகுக்கும்.
'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமையும் 'சகிப்புத் தன்மையை உச்சபட்ச நாகரிகமாக வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்துவார். சக மனிதத்தோடு வேற்றுமை கொள்ளாமல், வேற்றுமையில் ஒற்றுமை காணும் குணமே சமூகவியலின் சரித்திரச் சிறப்புமிக்க சகிப்புத் தன்மை. நமது நம்பிக்கை வேறு; நமது எதிர்பார்ப்பு வேறு; ஆனாலும் கையிலுள்ள விரல்கள் அளவால் செயலால் மாறுபட்டவைபோலத் தோன்றினாலும் ஒரு பொருளை எடுக்கும்போது ஒருங்கிணைந்து செயல்படுவதுபோல நமது மனவியலில் ஒருங்கிணைந்த தன்மை உருவாக வேண்டும்.
சகிப்புத் தன்மை என்றால் வேறு வழியில்லாமலோ அல்லது அச்சத்தின் அடிப்படையிலோ பொறுத்துக்கொண்டு போவது அல்ல; நேர்மைக்கும் நியாயத்திற்கும் மாறுபட்ட விஷயங்களைப் பொறுத்துக் கொண்டுதான் போகவேண்டும் என்பது தேவையற்றது. இடையூறுகளைத் தாங்கிக்கொண்டு, சிறுசிறு இடைஞ்சல்களுக்கெல்லாம் மனம் தளர்ந்துபோகாமல், சகித்துக்கொண்டு, வெற்றி இலக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முயன்றுகொண்டே இருப்பது.
இங்கே சகிப்புத் தன்மை என்பது சகிக்கச் சகிக்க உடலும் மனமும் வலிமைபெறும் வல்லமையைப் பெறுகின்றன.
நோய் எதிர்ப்புசக்தி பெருகியுள்ள உடம்பில் நோய் அனுகுவதில்லை என்பதுபோலச், சகிப்புத் தன்மை பெருகியுள்ள மனத்தை எந்தத் துன்பமும் வலிமைகுன்றச் செய்துவிடுவதில்லை. அமைதி, சகிப்புத்தன்மை, அகிம்சை, பொறுமை இவை அனைத்தும் உடம்பை, மனத்தைப் புடம்போடும் பக்குவத்தைச் செய்கின்றன. அந்த அளவில் அளவுகடந்த வலிமையை நமது வலிபொறுக்கும் ஆற்றல் நமக்கு அளித்துவிடுகிறது.
தொடர்புக்கு - 9443190098