சிறப்புக் கட்டுரைகள்

பிறவிப் பிணி தீர்க்கும் ஆடிப்பெருக்கு புனித நீராடல்
- தர்மம், கர்மம், காமம், மோட்சம் ஆகிய கோட்பாடுகளே மனித வாழ்க்கையை இயக்குகிறது.
- ஆடிப்பெருக்கு நன்னாளில் செய்யக்கூடிய எந்த செயலும் பன்மடங்கு பெருக கூடிய சக்தி படைத்த நன்னாளாகும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406ஒரு உயிரை உயிர்பிக்க செய்வது சூரிய ஒளி என்றால் உயிரை தாங்கும் உடல் சந்திரன். ஜோதிட ரீதியாக லக்னம் உயிர் என்றால் ராசி உடலாகும். ஜாதகத்தில் ஜாதகர் உயிர், ஆன்மா என்றால் உடல், மனம் சந்திரனாகும்.
ஒருவரின் தசா புத்திக்கு ஏற்பவே அவரின் மனநிலை இருக்கும். தசாநாதன் புக்திநாதன் அந்தரநாதன் என சூட்சும முறையில் சனி பகவான் மனிதர்களை இயக்குவார். அதாவது நாள் கிரகமான சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறாரோ அந்த நட்சத்திரம் ஜாதகருக்கு எந்த பாவகத்தை இயக்குகிறதோ அது தொடர்பான பலன்களை கோச்சார சந்திரன் மூலம் சனி பகவான் வழங்குவார். மனித உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும். அதாவது அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற் போன்று உடல் வடிவம் உண்டாகும்.
மனித உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றலானது கோட்சார சந்திரனின் சுழற்சிக்கு ஏற்ப தசா புத்திக்கு ஏற்ப சில நேரங்களில் வலிமையாகவும், சில நேரங்களில் வலுவற்றும் இயங்கும். அதாவது கோட்ச்சார சந்திரன் மூலம் ஜாதகரின் மனநிலையில் மாற்றம் செய்து அவரவரின் வினைப் பயன்களை அனுபவிக்க செய்வார். அந்த வினைகளில் இருந்து மீள உயிர் காந்த ஆற்றலை அதிகரிக்க வேண்டும். அதாவது தியானம் மற்றும் யோகா பயிற்சி, உடற்பயிற்சி, சீரான உணவு, நேர்மறை எண்ணங்கள், நல்ல வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் உயிர் காந்த ஆற்றலை அதிகரிக்க முடியும். இவற்றிற்கும் மேலாக வாழும் காலத்தில் மனிதராய் பிறந்தவர்கள் புண்ணிய பலன்களை அதிகரித்துக் கொள்ள சாஸ்திரத்தில் கூறப்பட்ட உபாயங்களில் ஒன்று புனித நீராடலாகும்.
தர்மம், கர்மம், காமம், மோட்சம் ஆகிய கோட்பாடுகளே மனித வாழ்க்கையை இயக்குகிறது. அவை ஒவ்வொன்றும் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை உணர்த்துகிறது. மனிதபிறவி எடுக்கும் அனைவரும் மோட்சத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் தார்ப்பரியம். தர்மம் என்பது ஒழுக்கமான நேர்மையான வாழ்க்கை, கர்மம் என்பது அன்றாட வாழ்க்கையின் செயல்களினால் உண்டாகும் விளைவுகள், காமம் என்பது நிறைவேற்றத் துடிக்கும் ஆசைகள், மோட்சம் என்பது பிறவா நிலையில் இருந்து விடுபடுவதாகும்.
ஆன்மாவை இறைவனுடன் இணைப்பதாகும். தர்மத்தின் வழியில் சென்றால் புதிய கர்மம் உருவாகாது. ஆசையில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைய முடியும் என்பதை உணர்த்துவதே ஜோதிடம் 12 ராசிக் கட்டங்களைக் கொண்ட ராசி மண்டலம் தர்மம், கர்மம், காமம், மோட்சம் ஆகிய நான்கு தத்துவங்களையும் தன்னில் அடக்கி உள்ளது. இதில் கடகம், விருச்சகம், மீனம் ஆகிய 3 ராசிகளும் மோட்ச தத்துவத்தை செயல்படுத்தும்.
மோட்ச தத்துவத்தை குறிக்கும் இந்த மூன்று ராசிகளும் நீர் ராசிகள் ஆகும். நீருக்கு காராக கிரகம் சந்திரன். புனித நீருக்கு காராககிரகம் குருபகவான். மனிதர்களின் பாவங்களை களையும் சக்தி படைத்தவர் குரு பகவான். நீரினால் சுத்தம் செய்ய முடியாத பொருட்களே கிடையாது. நீருக்கு எந்தவிதமான தோஷமும் கிடையாது. புனிதமான நீருக்கு அதிபதியான குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்கு காரக கிரகமான சந்திரனின் வீட்டிற்கு சென்று உச்சம் அடைவதன் மூலம் தன்னை புனிதப்படுத்திக் கொள்கிறார்.
அதனால்தான் அவரால் மனிதர்களின் பாவங்களை நீக்க முடிகிறது. மனிதர்களின் பாவங்களைகளையும் குரு பகவானே தன்னை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனிதப்ப டுத்திக் கொள்கிறார். சாமானி யர்களாக பிறந்த மனிதர்கள் தங்களைப் புனிதபடுத்திக் கொள்ள சாஸ்திரங்களில் சில குறிப்பிட்ட நாட்கள் கூறப்பட்டுள்ளது.
புனித நீராடல்
ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆண்டில் சில குறிப்பிட்ட நாட்கள் புனிதமான நாட்களாக கருதப்படுகிறது. அந்த நாட்களில் நீர் நிலைகளில் சென்று நீராடுவதால் பாவங்கள் குறைந்து மனிதன் மோட்சத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது புண்ணிய செயலாகவும் கருதப்படுகிறது. ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் புனிதமான நாட்களில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற பல ஆலயங்கள் நீர் நிலைகளுக்கு அருகிலேயே உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதன் பொருள் என்னவென்றால் நீர்நிலைகளில் நீராடிய பிறகு இறைவனை தரிசித்தால் பாவங்கள் முழுமையாக விலகும் என்பதாகும்.
உதாரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், கொடுமுடி, பவானி. காசி, கயா போன்ற பல்வேறு புனித தலங்கள் நீர் நிலையுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இது போன்ற ஆன்மீக தலங்களுக்கு சென்று புனித நீராடி இறைவனை தரிசித்து வருபவர்கள் காரிய சித்தி அடைகிறார்கள் என்பதும் குறிப்பி டத்தக்கது. புனிதமான நாட்களில் புண்ணிய நதிகளான காவிரி, பவானி, கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. புனித நீராடுவதால் உடல், உள்ளம், ஆன்மா அனைத்தும் தூய்மை அடைகிறது. ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் எத்தகைய தோஷம் இருந்தாலும் அதை தீர்க்கும் வலிமை புனித நீராடலுக்கு உண்டு.
ஆடிப்பெருக்கு
நிகழும் விசுவாவசு ஆண்டில் ஆடி18-ம் நாள் ஞாயிற்று கிழமை (3.8.2025) அனுஷம் நட்சத்திரத்தில் வளர்பிறை தசமி திதியில் வர உள்ளது. அன்று கோச்சார சந்திரன் மோட்சம் தத்துவத்தை குறிக்கும் நீர் ராசியான விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆடிப்பெருக்கு என்பது தமிழ்நாட்டில் தமிழக மக்களால் கொண்டாடப்படும். ஒரு தமிழர் பண்டி கையாகும். இது புனித நதிகளுக்கு நன்றி சொல்ல எடுக்கப்படும் ஒரு திரு விழாவாகும்.
ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆறுகளில் புதிய புனித நீர் பெருக்கெடுத்து ஓடும்.விவசாயத்திற்கு ஆதரவான பூமியையும், நிலத்தையும் செழிக்க வைக்கும் நீர் நிலைகளுக்கும் நன்றி செலுத்தும் ஒரு புனிதமான புண்ணிய நாளாகும்.
சக்தி மிகுந்த தெய்வங்களை சாந்தப்படுத்தவும், இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபட்டு பாதுகாப்பை பெறவும் நீர் நிலைகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடி, தங்கள் பாவங்கள் நீங்கப் பெறவும், மகிழ்ச்சியும், ஆயுளும், செல்வங்களும் பெருகவும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
செல்வ வளம் வழங்கும் ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு நன்னாளில் செய்யக்கூடிய எந்த செயலும் பன்மடங்கு பெருக கூடிய சக்தி படைத்த நன்னாளாகும். எந்தக் கிழமை எந்த நட்சத்திரம் எந்த திதியில் வந்தாலும் புதிய செயல்களை அன்று துவங்கலாம்.
அன்று வங்கி கணக்கு துவங்குதல், தங்கம் வாங்கி வைத்தல், புதிய ஆடைகள் எடுத்தல், புதிய தொழில் துவங்குதல் போன்றவைகள் வளர்ச்சியை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்தி ரப்படி குரு மற்றும் சந்திரனுக்கு சம்பந்தம் இருந்தால்
அது குரு சந்திர யோகம் ஆகும்.குரு சந்திர யோகம் உள்ளவர்கள்
விதியை மதியால் வெள்ளும் சூட்சமதாரிகள். கவுரவமான பதவி, அந்தஸ்து, ராஜயோக வாழ்க்கை உண்டு. பொன், பொருள், பூமி லாபங்கள், வாகன வசதி உண்டு.
உழைப்பால் உயர்ந்து அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவார்கள்.
சந்திரனுக்கு 6,8 ல் குரு இருந்தால் அது சகடயோகம் ஆகும்.இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்து விடும். இனம்புரியாத மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் ஆடிப்பெருக்கு நன்னாளில் புனித நீராடினால் குரு சந்திர யோகம் உண்டாகி செல்வ செழிப்பு மிகுதியாகும்.
புனித நதிகளில் நீராடும் முறை
நதிகளில் நீராடுவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட முறைகள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒருவரின் பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை அதிகரிக்கும். நீர் நிலைகளில் இயற்கை உபாதைகளை நீக்கும் இடமாக பயன்படுத்தக் கூடாது. நீராடும்போது உடுத்திய துணிகளை நீர்நிலைகளில் போடக்கூடாது. சோப்பு ஷாம்பு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. காலணிகளை தவிர்ப்பது நல்லது. அழுக்குத் துணிகளை புனித நீர்களில் துவைக்க கூடாது.அதற்கென்று பிரத்தியேகமாக உள்ள இடங்களை பயன்படுத்த வேண்டும். நீர்நிலைகளை அசுத்தம் செய்தால் புண்ணிய பலம் குறையும். தீர்த்தமாடுவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து தலைக்கு தெளிக்க வேண்டும். நதியின் ஓட்டத்திற்கு எதிர்திசையில் சூரியனுக்கு எதிர் திசையில் நின்று சூரிய நமஸ்காரம் செய்த பிறகு நீராட வேண்டும். உடுத்திய ஆடைக்கு மேல் நீருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மூன்று முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டும்.
ஆடிப்பெருக்கும் சுமங்கலி பூஜையும்
ஆடிப்பெருக்கு நன்னாளில் துவங்கக்கூடிய அனைத்து செயல்களும் பெருகும் தன்மை கொண்டது. சுமங்கலி பெண்களின் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கவும், திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கவும் செய்யப்படும் ஒரு பூஜை ஆகும். நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப்பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபாட்டால் திருமண தடை அகலும். நதிக்கரைக்கு செல்ல முடியாத பெண்கள் மஞ்சள் பூசி குளித்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி வாசனை மலர்கள் சாற்றி தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, சர்க்கரைப் பொங்கல் படைத்து அம்பாளை வழிபட விசேஷமான பலன்கள் கிடைக்கும்.
இயன்றவர்கள் அன்னதானம் செய்யலாம். சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம், கொடுக்க வேண்டும். இதனால்
ஜாதகத்திலுள்ள செவ்வாய், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். புனித நன்னாளாம் ஆடிப்பெருக்கு அன்று புனித நதிகளில் நீராடி வாழ்க்கையில் விரும்பிய அனைத்து நல்ல நிகழ்வுகளையும் பெருக்கிக் கொள்ள நல்வாழ்த்துகள்.